கிருத்திகாவின் படைப்புலகம் – மதுமிதா

கிருத்திக்காவின் படைப்புகளை இரு வகைகளாக பிரிக்கலாம். ஒன்று, தனி மனித வாழ்க்கையை, அதன் தேடலை, நாடகங்களை, அற்பத்தை பேசுபவை. அல்லது மூலக்கூறாக கொண்டவை. வாஸவேஸ்வரம், நேற்றிருந்தோம், பொன்கூண்டு ஆகிய நாவல்களை இந்த வகை படுத்தலாம். இன்னொன்று பொது வாழ்க்கையை, நாட்டை, மனித இனத்தை கூட்டாக விமர்சித்து, தனி மனித அகத்தேடலுக்கு இணையாக ஒரு சமூகத்திற்கு இருக்க வேண்டிய குறிக்கோளை பேசுவது. தர்மக்ஷேத்திரே, புதிய கோணங்கி, சத்யமேவ ஆகிய நூல்கள் இந்த வகையை சார்ந்தவை. அவரின் கதை நிலம் ஆதித்திய நாடு, சத்யோதயா, பரதபுரி, சத்ருகனபுரி, வாஸவேஸ்வரம் போன்ற உண்மையில் நிலை ஊன்றிய கற்பனை நிலங்கள். ஒரு ஊரில் ஒரு ராஜா என்று தொடங்கும் நாட்டுப்புறவியல் சாயலை இவரது நூல்களுக்கு அது கொடுக்கிறது. எங்கோ நிகழ்கிற ஆனால் இங்கே நிகழக்கூடிய சாத்தியம் உள்ள கதைகள்.
நாடு சுதந்திரம் அடைந்து ஏழ்மை, வேலையில்லா நிலை, பொருளாதார சீர்மை அடைந்திருக்காத நிலையில் அவருடைய நூல்கள் எழுதப்பட்டுள்ளன, அதன் தாக்கம் அவரது நூல்களில் அவற்றின் அடித்தளமான சிந்தனையாக அல்லது சிக்கலாக வெளிப்படுகிறது. புதிய கோணங்கியில் இந்த சிக்கலில் இருந்து விடுபட்ட அல்லது மீண்டு வந்த ஒரு சமூகத்தை கிருத்திகா களமாக்கிக் கொள்கிறார். சாம்பு ஆதித்திய நாட்டில் பிறந்து வளர்ந்து, பிறகு வேற்று நாட்டாகிய மதர்லாந்தில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவன். வெறும் சோம்பேறி நாடு, பேசி பேசியே பொழுதை கழித்து, வாழ்வதற்கான தகுதி கொண்ட ஊராக தங்கள் நாட்டை மாற்றிக்கொள்ள தெரியாதவர்கள் என்று பெயர் பெற்றது ஆதித்திய நாடு. அது தற்போது மிகப்பெரும் சக்தியாக வளர்ந்து வருவது எப்படி என்று காரணம் கண்டுகொள்ள கொஞ்சம் உளவு வேலையின் சாயலில் பாத்திரிக்கையாளனாக வருகிறான் சாம்பு. அங்கிருக்கும் நிலை அவனுக்கு முதலில் பிடிகிடைப்பதில்லை. கட்டற்ற சுதந்திரம் கொண்ட இளையவர்களும் அதை அங்கீகரிக்க மனமின்றி, அதே சமயம் அதை எப்படி எதிர்ப்பது என்று தெரியாமல் வாழும் முந்தைய தலைமுறையும் கொண்ட மக்கள் வாழும் ஆதித்திய நாடு. ஆனால் இரண்டு மனநிலையுமே நிறைந்த வாழ்வை கொடுப்பதாக அவனால் காண முடியவில்லை. அந்த முரண் அவனை குழப்புகிறது. பழைய வாழ்வுமுறை எப்படி பொய்மையையும், சோம்பலையும், துணிவின்மையையும் கொண்டிருந்ததோ, புதிய வாழ்வு முறையும் இவற்றை வேறு முறையில் நிலையாக கொண்டுள்ளது. பிறகு மெள்ள மெள்ள அந்த நாட்டின் ஊக்க விசையாகவும் தாங்கு நிலமாகவும் சத்தியோதயா என்ற சிறு நிலம் விளங்குவதை அவன் காண்கிறான். அதன் தலைவன் காமேஷ், காமேஷ் சாம்புவின் இளமைக்கால நண்பன். பல சிக்கல்களையும், அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தாண்டியே அவனால் அங்கு எதையும் செய்ய முடிகிறது. ஆனால் அவன் சத்தியோதயாவை அடைந்ததும் அதற்கும் ஆதித்திய நாட்டிற்குமான வேறுபாடுகள் உடனே தெரிகிறது. இவர்கள் இலக்கை பிடியாக கொண்டவர்கள், கூர்ந்து அவதானித்து காரியத்தை செய்பவர்கள், முழுமூச்சாக ஒரு குறிக்கோளை நோக்கி செல்பவர்கள், உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே பேணி நிற்கும் ஒரு வகை அதீத மனிதர்கள். அவர்கள் கூட்டாக அந்த நாட்டின் ஓட்டு மொத்த உயர்வுக்கு தங்களை அர்ப்பணித்து மேலெழுப்புகிறார்கள். இதை அறிந்த பிறகான மயங்கிய நினைவெளியில் சாம்புவும் காமேஷும் உரையாடுகிறார்கள். அதன் கனவுத்தன்மை அந்த காட்சிக்கு வலு சேர்த்த படியே செல்கிறது. அது நனவாக இல்லாமல் கூட இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்ட நிலத்தில் அத்தகைய நிஜம் நிகழ வேண்டுமெனில் அது அவ்வாறான விதத்தில் மட்டுமே நடக்க முடியும் என்ற ஒரு இயல்பான மனிதனின் முடிவாக அந்த காட்சியையும் உரையாடலையும் கொள்ள முடியும். சத்தியோதயா பகுதியை இந்த நாவலில் ஒரு மாய யதார்த்தமாக கொண்டால், ஒரு நிலம் முன்னேறி வர சில தேர்வு செய்யப்பட்ட மனிதர்கள் ஒருங்கிணைந்து மட்டுமே அத்தகைய நிலையை அடைய முடியும் என்பதை ஒரு வாதமாக கிருத்திகா முன்வைப்பதாகவே அதை எடுத்துக்கொள்ள முடியும்.
இது ஒரு சர்ச்சைக்குரிய பார்வையும் கூட. அயன் ராண்ட் போன்ற ஆசிரியர்கள் முன் வைத்த பார்வை போன்றது. ஆனால் இந்த நூலில் அதை ஒரு தேர்ச்சியின் மூலம் முன் செல்வதாகவே கிருத்திகா கொண்டு செல்கிறார். பொதுவாக தன்னுடைய நூல்களில் தனி மனித உறுதியில் தொடங்கி, புதிய கோணங்கியின் தேர்ந்தெடுத்த சிலரின் கூட்டு முயற்சி வரை ஒரு நாடோ, ஊரோ செழித்து வளர்வதற்கு என்ன தேவை என்பதற்கான பல விடைகளை தனது நூல்களில் பரிசோதித்து பார்க்கிறார் கிருத்திகா.
நேற்றிருந்தோம் நாவலில் பத்மேஷ் இந்த தனி மனித உறுதிக்கான உதாரணம். சாம்புவை போலவே ஆதித்திய நாட்டில் பிறந்து வளர்ந்து, மதர்லாந்துக்கு சென்று வேலை செய்தவன். சாம்பு உளவு காண வருகிறான். பத்மேஷ் ஒருவித நிலைகொள்ளாமையால் திரும்பி வருகிறான். மேலோட்டமான வாழ்க்கைமுறை சீக்கிரத்தில் கொண்டு வரும் சலிப்பை, கசப்பை எழுதியவர் என்ற முறையில் கிருத்திகா ஒரு தனித்துவமான எழுத்தாளர். நாடும், மக்களும் வேண்டியதை, அல்லது ஒரு பாதுகாப்பு உணர்வை அடைந்த பின்னரான வாழ்க்கையை, அதன் தேடல் என்ன என்ற கேள்வியை அவரது படைப்புகள் முன்வைக்கின்றன. பத்மேஷ் அந்த தேடலின் பொருட்டு தாய் நாட்டுக்கு திரும்பி வருபவன். ஆனால் அப்படி வந்தான் என்பதற்காக கிருத்திகா அந்த இன்னொரு நாட்டை குறை கூறுவதில்லை. தனது நிலைகொள்ளாமையின் சாரம் அவன் குறிக்கோள் இல்லாமல் இருப்பதால் தான் என்ற தன்னுணர்வு கொண்டவன் பத்மேஷ்.

சாம்பு நாட்டில் கண்டுகொண்ட ஒரு பிசிபிசுத்த சோம்பலை பத்மேஷ் வீட்டில் காண்கிறான். நேற்றிருந்தோம் நாவல் வாஸவேஸ்வரத்தின் நாவல் கட்டமைப்பை ஒத்தது. அங்கே ஒரு சிறு கிராமத்தின் மக்களின் வாழ்வை களமாக்கிய நூல் இங்கே ஒரு வீட்டு மக்களின் வாழ்வை களமாக்குகிறது. அதில் இருக்கும் பொறாமையை, சார்ந்திருக்கும் ஆனால் அந்த நிலையை வெறுக்கும், விட்டுச் செல்லத்துடிக்கும் ஆனால் கட்டுண்டு வாழும் ஒரு கூட்டு குடும்ப நிலை. அதன் நெரிசலை வெறுக்கும் அதே அளவு அவர்களுக்கு தன் மேல் இல்லாத கனிவுக்காக ஏங்குகிறான். பெரியண்ணா என்ற அந்த குடும்பத்தின் தலைவர், அவனது அம்மாவின் மாமா மட்டுமே அவன் மீது கரிசனம் கொண்டவர். அவனது குறிக்கோளுக்கான விடையாக அங்கே பரதபுரியில் ஏழை மக்களுக்கான மனநல ஆலோசகாராக ஒரு மருத்துவமனை வைக்க அவன் முடிவு செய்வதில் முடிகிறது இந்நாவல்.
அக்கறையின்மை, எதற்கும் மேலோட்டமாக மட்டுமே வாழ முடிந்த ஒரு சூழலை வெகு எளிதாக கடத்துகிறார் கிருத்திகா. அன்பின் அடித்தளம் கொள்ளாத, வெறும் அதிகார வெளிப்பாடாக ஆகும் கலவியின் நிறைவின்மையை பற்றி பொருமிக்கொள்கிறாள் நேற்றிருந்தோம் நாவலின் சேது. “அம்புட்டுக்கு ஏன் நாம் குறைஞ்சு போகணும்? .. ஒரு பிடித்தம். ஒரு அதிருப்தி”. புதிய கோணங்கியின் அழகு, தன் கணவன் வாசுவிடம் அவனையும் அவர்கள் மகன் திலீபனையும் ஒப்பிட்டு ஒரு கட்டத்தில் இப்படி சொல்கிறாள், “நீங்கள் உங்களுக்குள்ளேயே முணுமுணுத்துக் கொள்ளுகிறேள், அவன் வெளியே போய் சவடால் அடிக்கிறான். எல்லாம் ஒண்ணுதான்.” வலுவற்ற மனம் கொண்டவர்கள் தந்தையும் மகனும், ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதம் மட்டும்தான் மாறுபடுகிறது. அதை குறிப்பிடுகிறாள் அழகு. ஆழமாக இறங்கும் அம்பு இது. இதையே விரித்துதான் மரபுக்கும் நவீனத்துக்கும் அதை பொருத்தி செல்கிறார் கிருத்திகா. இறுக்கம், கட்டற்ற சுதந்திரம், எதுவாயினும் அதற்கு குறிக்கோள் இல்லாவிடில் அது வெறும் அலுப்பிலும் நிறைவின்மையிலும் தான் முடிகிறது. எல்லாம் ஒன்றுதான், பூச்சு தான் வேறு.
ஒரு நோக்கில் அவரது எல்லா நாவல்களிலும் தங்கள் வாழ்வின் பெறுமதி என்ன என்று தன்னாய்வு செய்யும், அந்த கேள்வியை அவர்களின் அகத்தேடலின் ஒரு கூறாக கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். பொன்கூண்டு நாவலின் நீரா இதை மிக நேரிடையாகவே யோசிக்கிறாள். உயர்நடுத்தர பின்னணியில் தனக்கென ஒரு வேலையோ அல்லது வாழ்க்கை போக்கோ இல்லாத ஒரு பெண்ணிற்கு இது எத்தணை எளிதில் தோன்றி விடக்கூடிய ஒன்று என்பதை வெறும் நீராவின் எண்ணங்களில் கண்டுகொள்ள முடியும். முதல் நோக்கில் ஒரு குறையற்ற முழுமையான வாழ்க்கையை அவள் வாழ்கிறாள். ஊர் மெச்சும் வாழ்வு, ஆனால் அதன் விரயத்தை, பயனின்மையை, அது விட்டுச்செல்லும் அக நெருடலை அவள் உள்ளம் புறம் தள்ள மறுக்கிறது. இதனால் அவளுக்கு கிடைக்கும் பெறுமதி என்ன, உண்மையிலேயே அவள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாளா என்று அவள் தன்னை கேள்வி கேட்டபடியே இருக்கிறாள். புதிய கோணங்கியின் சாம்பு இதற்கு ஒரு அந்நிய பார்வையின் நோக்கை தருகிறான். தாய் நாட்டிலிருந்து சென்று, திரும்பி வந்து நோக்கும் ஒருவனின் உள்ளம் இந்த மெத்தன நிலையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. ஆம், கட்டற்ற சுதந்திரம் கிடைத்துவிட்டது, அது மட்டும் எல்லோர் உள்ளத்தையும் நிறைத்து விடுமா, அதை தாண்டிய உள்ள நிறைவு என்று ஒன்று இல்லையா என்று அவன் மனம் கேள்வி எழுப்புகிறது. நேற்றிருந்தோம் பத்மேஷின் ஊக்க விசையே இந்த கேள்விதான்.
ஆனால் அந்த கேள்வியே வேறு விதத்தில் திரும்பி வெறும் பூரணத்தன்மையை மட்டும் எதிலும் எதிர்பார்க்கும் ஒரு கோணம் மனித வாழ்க்கையை எவ்வளவு குறுக்கி விட முடியும் என்பதை பேசுகிறது பொன்கூண்டு நூல். நீரா தன் அப்பாவின் நேர்மையை துருவ நட்சத்திரமாக கொண்டு வளர்ந்தவள். அவர் தவறிழைக்காதவர், நேர்மை தவறாதவர், எந்த நிலையிலும் தனது மேன்மை நிறைந்த பீடத்திலிருந்து கீழே இறங்காதவர். இதை குறிக்கோளாக கொள்ளும் போது நீராவுக்கு மூச்சு திணறிதில் வியப்பில்லை. அவள் தனக்கென ஒரு உண்மை நிலையை சமைத்து அந்த பார்வையில் ஊன்றியே எதையும் செய்கிறாள். மாற்றுக்கருத்துகளையோ இன்னொரு பார்வையையோ நினைக்க கூட முடியாதவள் ஆகிறாள். இன்னொருவரின் நேர்மை குறைபட்டாலும் தனது அப்பா தவறாக முடிவு எடுக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே அவளுக்கு முக்கியமாகிறது. ஒரு கட்டத்தில் தனது அப்பா மீதே அவள் ஐயம் கொள்ளும்போதுதான் தான் எத்தணை தூரம் இந்த உணர்வால் ஆட்கொள்ளபட்டிருக்கிறோம் என்று உணர்கிறாள். அதற்கான விடை கிடைக்கும் இடமும் மிகச்சரியாக வந்து அமர்கிறது. அந்த நிலையில் அந்த உன்னத வாழ்வு வாழ்ந்தவரை நேர்மை அற்றவர் என்று சொல்லியிருப்பது மிக எளிதான விடை ஆகியிருக்கும், கிருத்திகா அதன் மேல் இன்னொரு அடுக்கை வைத்து அதற்கும் நெருடலான ஆனால் மறுக்க முடியாத ஒரு பதிலை தருகிறார்.
கிருத்திக்காவின் படைப்புகளை கச்சிதமானவை என்று சொல்ல முடியுமா என்று வினா எழுப்பினால், உடனேயே ஆம் என்று சொல்ல முடிவதில்லை. ஏனெனில், அவரின் கேள்விகளில் இருக்கும் ஆதூரமும் தேடலும், விடையின் காத்திரத்தில் இருப்பதில்லை. அவற்றின் உன்னதம் நம்பகத்தன்மையுடன் இருக்கிறதா? இது கிருத்திகாவின் எழுத்தை காட்டிலும் இலக்கியம் என்பதன் பெறுமதி என்ன என்ற கேள்விக்கு ஆழ்மனதின் விடை என்ன என்பதில் உள்ளது. நிறைவான நம்பிக்கையூட்டும் எழுத்தாக ஒன்று இருந்தால் அது இலக்கியம் இல்லையா என்ன? விரக்தி மட்டுமே மிஞ்சும் எழுத்தை மட்டும்தான் இலக்கியம் என்று வகை படுத்துகிறோமா?
கிருத்திக்காவின் பார்வையில் அவரின் எழுத்தில் ஓங்கி நிற்கும் “ஆத்ம விசாரத்தை” எடுத்துக்கொள்வோம். ஆஷாபூர்ணாதேவி எழுதிய “பிரதம பிரதிஸ்ருதி – முதல் சபதம்” இத்தகைய அகத் தேடலை கொண்ட ஒரு பெண்ணின் கதையே, அதை இலக்கியம் இல்லை என்று மறுக்க ஒரு இலக்கிய வாசகரால் முடியுமா? ஆனால் அதே அக தேடல் கொண்ட பாத்திரங்கள் மிகுந்த கிருத்திகாவின் படைப்பில் இந்த கேள்வியை எளிதாக எழுப்ப முடிகிறது? ஏனெனில் கிருத்திக்காவின் படைப்புகளின் முடிவில் ஊரும் நம்பிக்கையும் ஊக்கமும் அனைத்தையும் கண்டு, வாழ்ந்து, நேசித்து, வெறுத்து, அதன் கோர முகங்களையும் கண்ட பின்பு வரும் நம்பிக்கை இல்லை. மாறாக கிருத்திகாவின் நம்பிக்கை வாழ்வின் தொடக்கத்தில் இருப்பவர்களின் நம்பிக்கை, காதலின் நம்பிக்கை, சாதித்து விட முடியும் என்ற இளமையின் நம்பிக்கை, பெரும் இழப்பில்லாத தீர்வு எடுத்ததன் நம்பிக்கை.
ஆக வெறும் சூதில்லாத எளிமை தான் கிருத்திகாவின் படைப்புகளின் பெருமதியா? நிச்சயம் இல்லை. அவரது கச்சித தன்மை வேண்டுமானால் கேள்விக்கு உண்டாக்க படலாம், ஆனால் அவர் நூல்கள் புறக்கணிக்க முடியாதவை. இன்னும் சொன்னால், புறக்கணிக்கப்படக் கூடாதவை. ஒரு விதத்தில் வாஸவேஸ்வரத்தின் காதலுக்கு நேர் எதிரில் நேற்றிருந்தோம் நூலின் காதலை சொல்லலாம். அதுவும் கொஞ்சம் இருந்து விட்டு போகட்டுமே.
இந்த இருகூறுத்தன்மையை அவரது எல்லா படைப்புகளிலும் காண முடிகிறது. உதாரணமாக பிரச்சாரம் ஆக்கப்படாத, அங்கதம் மிகுந்த, கூரிய சமூக விமர்சனங்களை அவர் முன் வைக்கிறார்..
“அதாவது விதியை நொந்து கொள்வது. நாமிருக்கும் நிலைமைக்கு நம்மை அல்லாது வேறு ஏதாவது காரணம்”
“ஏழைக்கு சுகம் வந்துவிட்டால் அவா பிழைப்பது எப்படி? கம்யூனிஸம் பேசுவதிலே சுகம். அது நிஜமாகவே நடந்து விட்டால்?”
அதன் கூடவே படித்த உயர்ந்த இடத்தில் – பொருளிலோ, கல்வியிலோ, அதிகாரத்திலோ – இருக்கும் ஒருவரே அவதாரமாக வந்து உலகத்தை அல்லது ஊரை காக்க முடியும் என்ற கொள்கையை முன்வைக்கின்றன அவரது படைப்புகள். இதை அவர் வாழ்ந்த காலத்தின் தாக்கம் என்று சொல்லலாம்.
மரபார்ந்த அடுக்குகள் கொண்ட உறவுமுறையில் கணவன் மனைவி இடையேயான தாம்பத்திய வாழ்வு ஒரு அதிகார எல்லையில் நின்று விடுவதை போலவே, கட்டற்ற பாலியல் சுதத்திரமும் ஒரு எல்லையோடு நின்று விடுவதை எடுத்து காட்டுகிறார். இதில் முக்கியமான ஒன்று – அவர் எழுதிய காலத்தில் இந்த இரு வகையிலும் எழுதிய எழுத்தாளர்கள் உண்டு, அதுவும் பெண் எழுத்தாளர்கள். ஆனால், அதன் இரு பக்கத்திலும் இருக்கும் வியர்த்ததை சொல்லியவர் என்ற முறையில், ஆம் அவர் பெண் என்பதாலேயே, அவர் எழுத்துக்கு தனி பெறுமதி உண்டு. நேற்றிருந்தோம் நாவலின் ஜானா, நாவலின் நாயகி, அவளது பாத்திரம் கண்ணியத்தோடு நடத்தப்படுவது எதிர்பார்க்க கூடியதே. ஆனால் அதே நாவலில் அலுவலக உதவியாளராக வரும் சாந்தாவிற்கும் அதே கண்ணியம் கொடுக்கப்படுகிறது.

மனித உறவுகளின் உன்னதத்தை பேசும் நூல்களுக்கு இடையில் வாஸவேஸ்வரம் நூல் அதன் பொருளின்மையையும், அற்பத்தையும் காட்டுவது. அதற்கு பக்க கணக்குகளின்படி மையம் என்று சொல்லும் கதை இல்லாவிட்டாலும், அது இருப்பவரின் மேன்மையாலேயே சுருங்கி கசடாய் நின்று விடும் இல்லாதவரின் வெறுப்பை சொல்லும் கதை. இது செல்வத்தில் மட்டும் அல்ல, அழகில், அமைதியில், நிறைவில், பெருமையில் என அனைத்திலுமே அது இல்லாதவர் இருப்பவரிடம் கொள்ளும் பொறாமையின் உச்சமே. அவரது அனைத்து படைப்புகளிலும் உச்சமும் அந்த நூலே. பொன் கூண்டு நூலில் இதை வேறு சாயையில் எடுத்து செல்ல அவர் முயன்றிருந்தாலும் வாஸவேஸ்வரம் நூலின் முடிவில்லாத முடிவு வாசகரை நம்பி அவர்களிடம் கையளிக்கப்பட்ட பரிசு. யார்தான் பொறாமை கொள்ளவில்லை என்ற புரிதலோடு பொறாமையை விட வீண் செயல் ஒன்று உண்டா என்ற புரிதலும் உடன் நடமாடும் நூல் அது.
புறக்கணிக்க முடியாத, அவரது சமகால எழுத்தாளர்களால் எழுதப்படாதவற்றைக் கொண்ட, கூரிய அவதானிப்புகளை உள்ளடக்கிய படைப்புகள் கிருத்திக்காவுடையது. இலக்கிய முன்னோடிகளின் வரிசையில் நிறுத்தி மதிப்புரைகளும் விவாதங்களும் நிறையவேண்டியவை அவரது படைப்புகள்.
*
மதுமிதா: இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். நீலியின் ஆசிரியர் குழுவில் ஒருவர். தொடர்ந்து இலக்கிய விமர்சனங்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். கேம்பிரிட்ஜில் (UK) வசிக்கிறார். தி. ஜானகிராமன், அம்பை, ஜெயமோகன், ம. நவீன் ஆகியோர் ஆதர்ச எழுத்தாளர்கள்.
*
*
