நிலாக்கள் தூர தூரமாக முன்னுரை – சைதன்யா

பாரததேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக’ நாவல் தலைப்பை நான் ஆங்கிலத்தில் ‘Moons, Far, Far Away’ என நேரடி மொழிபெயர்ப்பு செய்த போது, அது ஆங்கில வாசகருக்கு பொருட்படக்கூடிய வகையில் மாற்றும் படி சில ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஆனால், தன் புத்தக அலமாரியில் இருந்து ஒரு நூலை எடுக்கும் வாசகருக்கு அதன் தலைப்பு முழுமையாகப் புரிந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரு தலைப்பு உங்களை உள்ளே இழுக்கலாம் அல்லது கலைத்துப் போடலாம். அதற்குப் பொருள் இருந்தே ஆகவேண்டும் என்ற அவசியமில்லை, பெரும்பாலும் இருப்பதில்லை.
பாரதாவின் உலகுக்குள் நாம் ஆழ ஆழச் செல்லும் போது அங்கிருக்கும் நிலாக்கள் நம்மை நெருங்கி வருகின்றன, பின் தொடர்கின்றன, காவல் காக்கின்றன. எல்லாம் முடிந்து நூலின் இறுதி பக்கத்தைத் திருப்பும் போது, அவை நிழலுருக் கொண்டு தொலைத்தூரத்திற்கு விலகிச் சென்றுவிடுகின்றன. ‘நிலாக்கள் தூர தூரமாக’ என்ற தமிழ்த் தலைப்பு முழுப்பொருள் தராவிட்டாலும், வாசகனுள் மாயத்தையும், இழப்புணர்வையும் எழுப்புகிறது. ஆங்கிலத் தலைப்பும் அதையே செய்கிறது.
ஒரு உரையாடலின்போது எங்கள் மானசா பதிப்பகத்தின் எடிட்டர், எழுத்தாளர் சுசித்ரா, “இந்த நாவல் நினைவேக்கம் கொண்ட நினைவுநூல் என்ற எல்லையைக் கடந்து செல்கிறது” என்று சொன்னார். நினைவேக்கம் என்பது இனி ஒருபோதும் நிகழவே முடியாத ஒன்றின் மீது எழும் தீவிரமான ஏக்கமாகவே இருக்க முடியும். அது தப்பித்து ஒளிந்துக் கொள்வதற்காக ஒருவர் தனக்குள் கற்பனை செய்துகொள்ளும் கடந்தகாலத்தின் கனவுத்தோற்றம். நிலாக்கள் தூர தூரமாக நாவல் வெறும் நினைவேக்கம் என்ற நிலையிலிருந்து வெட்டவெளிச்சமான, இயல்பான, முற்றிலும் தனித்துவமான ஒரு குழந்தைப் பருவத்தை நமக்குக் காட்டுகிறது. நினைவுகள், நாட்டுப்புறக் கதைகள், நிஜ மனிதர்கள், கடவுள்கள், தெய்வங்கள் ஆகியோரின் கதைகள் நிறைந்த சிறு சிறு நிகழ்வுத் துணுக்குகளாக பாரததேவி இந்நூலை எழுதியிருக்கிறார்.
இந்நூலில், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வறண்ட வேளாண் கிராமம் ஒன்றின் வாழ்க்கைக்குள் நாம் திடீரென தள்ளப்படுகிறோம். காவல்துறையில் பணியாற்றிய தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு பாரததேவியும், அவள் தாய், தம்பியரும் அக்கிராமத்துள் தள்ளப்பட்டது போல நாமும் உள்ளே தள்ளப்படுகிறோம். அவள் தந்தையின் மரணம் குடும்பத்தை வறுமையில் ஆழ்த்தி, பாரதாவை பள்ளியிலிருந்து வெளியேற்றி மாடு மேய்க்கும் வாழ்க்கைக்குள் தள்ளுகிறது. பாரதா, தான் வளர்க்கப்பட்ட கடுமையான மருமக்க வழி ஒழுக்கத்தை அவள் நினைவுகூர்கிறாள். சில நேரங்களில் அது நமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.
பாரதாவின் அம்மாவை ஆங்கிலத்தில் ‘Mom’ என்றோ ‘Mama’ என்றோ குறிப்பிடாமல், தமிழ்ச் சொல்லான ‘Amma’வையும் அப்படியே தக்கவைக்காமல், வெறுமனே ‘Mother’ எனக் குறிப்பிட்டது மொழிபெயர்ப்பாளராக நான் வேண்டுமென்றே எடுத்த முடிவு. பாரதாவுடனான அவள் தாய்க்கான உறவில் மென்மையோ, தாய்மைப் பாசமோ ஒருபோதும் இருந்ததில்லை. வேறு வழியில்லை என்ற காரணத்தால் மட்டுமே பாரதா அவளை ‘அம்மா’ என்று அழைத்தாள். எனினும், பாரதாவின் மீது அவளுடைய தாய்க்கு இருந்த ஆழமான அக்கறையும் அன்பும் வெளிப்படும் தருணங்கள் இந்நூலில் உண்டு. கிராமத்தில் வளர்ந்த, மாடு மேய்க்கவும், நெல் வயல்களில் உழைக்கவும் விதிக்கப்பட்ட ஒரு பெண் என்று மற்ற அனைவரும் பாரதாவைப் பார்க்கும்போது, அங்கிருந்து அவள் எப்படியாவது வெளியேறிச் சென்றால் என்னவாக ஆகக்கூடும் என்பதை அந்தத் தாய் பார்க்கிறாள். அவள் இல்லாதிருந்தால் இந்த நினைவுநூலே இருந்திருக்காது.
சின்னம்மா, கணேசன், கங்கைய்யா, சரசு, வசந்தா என திரும்பத் திரும்ப வரும் கதாப்பாத்திரங்கள் இந்நினைவுநூலை அதன் வகைமையிலிருந்து நழுவச் செய்து, ஒரு வலிமையான புனைவை வாசிக்கும் ஆழ்ந்த அனுபவத்தை வாசகனுக்குத் தருகிறது. இச்சமூகத்தில் தங்களுடைய இடத்தின் இயல்பான வெளிப்பாடுகளாக, தாங்கள் யாரோ அதுவாகவே இருக்கும் திறனில் அக்கதாப்பாத்திரங்கள் தனித்து நிற்கின்றன. அவர்களுடைய உரையாடல்கள் நேரடியானவை, அவற்றில் அடுக்குகள் இல்லை, உட்குறிப்புக் கொண்டவையுமல்ல. சொற்களில் சொல்ல முடியாதவை எல்லாம் சடங்குகள் வழியாகவும், குறியீட்டு வழக்காறுகள் வழியாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
பத்து வயதில் மீனாட்சிபுரத்தை வந்தடைந்த பாரதாவுக்கு அளிக்கப்பட்ட உலகம் ஏற்கனவே நாட்டார் கதைகள், வழக்காறுகள், சடங்குகளால் நிறைந்து முழுவடிவம் பெற்றிருக்கிறது. அங்கே தனிமனித விருப்பத்திற்கு எவ்வித இடமும் அளிக்காத கறாரான ஆணாதிக்க நெறிகளால் ஆளப்படுகிறது. கதைச்சொல்லியே ஒரு சந்தேகம் நிறைந்த பாத்திரமாக (Sceptical figure) நாவலில் இருந்தபோதிலும் முதல் பார்வையில் சிந்தனையைத் தூண்டக்கூடிய சிக்கல்தன்மை கொண்ட விவரணைகளால் ஆனதாக இந்நூல் இல்லை. கதைச்சொல்லியின் அந்த சந்தேகவுணர்வு, கிராமத்துச் சிறுமி பாரதாவுக்கு உரியதல்ல, நினைவுநூல் எழுதும் பாரததேவிக்கே உரியது என்று பலமுறை எனக்குத் தோன்றியது. இது நூலுக்கு ஒரு நவீனத் தன்மையைச் சேர்க்கிறது. ஆனால், அந்த சந்தேகவுணர்வு இல்லாமல்கூட, பாரதாவின் கிராமிய உலகம், வில்ஃபிரிட் செல்லர்ஸின் சொற்றொடரை இரவல் வாங்கிச் சொல்வதானால் வெறும் அனுபவரீதியாக ‘அளிக்கப்பட்டவை’களின் தளம் அல்ல. மொழி, மரபு, சடங்குகள் ஆகியவை கூடி நாம் காணக்கூடிய, சொல்லக்கூடிய, செய்யக்கூடியவைகள் கட்டமைத்திருக்கும் ஒரு வெளியே அவ்வுலகம். நவீன வாசகர்களாக, இக்கிராமிய வாழ்க்கையை நாம் வெறும் இயல்பான, அடிப்படை அனுபவமாக மட்டும் எதிர்கொள்வதில்லை. அவர்களுடைய சொற்களும், அசைவுகளும், தனிமனித சிந்தனை, உணர்வு ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், கூட்டுச் சமூக நெறிகளோடும், ஆணாதிக்க அளவுகோல்களோடும் பொருள் பிணைந்திருக்கும் ஒரு வெளிக்கே உரியவை என்பதை நாம் காண்கிறோம். இக்கதாப்பாத்திரங்களின் பேச்சில் வெளிப்படும் எளிமை, விதிகளாலும், நியாயப்படுத்தல்களாலும் முன்கூட்டியே நிரம்பியிருக்கிறது. அதிலுள்ள அப்பாவித்தனம் ஒரு கட்டுக்கதை மட்டுமே. இந்த எல்லையில் தான் இந்நூல் நினைவேக்கத்தைக் கடந்து செல்கிறது. இக்குரல்களை மொழிபெயர்க்கும்போது, மொழியிலும், உணர்விலும் உள்ள இந்த நேரடித்தன்மையைத் தக்கவைக்க முயன்றிருக்கிறேன். மனதில் உள்ளதைச் சொல்வது ஒருபோதும் அவ்வளவு எளிமையானதாக இருக்க முடியாது. என்றாலும், இக்கதாப்பாத்திரங்கள் எப்போதும் தங்கள் மனதில் உள்ளதையே சொல்கிறார்கள் என்ற உணர்வு வாசகனுக்கு ஏற்பட வேண்டியதும் முக்கியம் எனக் கருதினேன்.
இந்நூலில் வாசகன் உட்குறிப்பின் அடுக்குகளை தோலுரித்துப் பார்க்க வேண்டியதில்லை. நாகரிக சமூகம் தன்னைச் சுற்றி நெய்துகொள்ளும் விரிவான திரைகளோ, சிறு பொய்களோ இங்கே இல்லை. பண்பான, நாகரிகமான பேச்சுக்கு அடியில் புதைந்திருக்கும் மறைமுக நோக்கங்களைப் புரிந்துகொள்வது இங்கே நமது வேலையல்ல. மாறாக, திரும்பத் திரும்ப வரும் சில பாத்திரங்களில் மீண்டும், மீண்டும் வெளிப்படும் பெரும் கருணையில், உணர்ச்சிகரமற்ற அந்தக் கருணையில் தான் இந்நினைவுநூலின் ஆழம் இருக்கிறது. ஒரு வகையில் பாரதாவும் அவள் தோழர்களும் நாள்தோறும் ஒவ்வொரு நாளும் பிழைப்பதற்கு ஏதாவது ஒன்றைக் கண்டடைகிறார்கள். பறவை முட்டைகள், சப்பாத்திக் கள்ளிப்பழங்கள், அணில்கள், காட்டுப் பழங்கள், தானியங்கள், மாம்பழங்கள், பரங்கிக்காய்கள், சுரைக்காய்கள், புளிப்பூக்கள், புளியங்காய்கள், அப்பகுதியின் தாவரங்கள், உயிரினங்கள் அனைத்தின் பெயர்களையும் மொழிபெயர்ப்பது எனக்கு தனிச்சவாலாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு சிறு செடியையும், கொடியையும், கனியையும், விதையையும், மலரையும் அது எப்படி இருக்கிறதோ அப்படியே குறிப்பிடுவது முக்கியம் எனவும் தோன்றியது. இந்தத் தனித்துவமான நிலம் வாசகர்களின் மனதில் உயிர்பெற வேண்டும் என்பதற்காகவும், அதன் எதிர்பாராத வளத்தையும், தாராளத்தையும் அவர்கள் உண்மையிலேயே அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும். நிலமும் அதன் மனிதர்களும் ஒன்றாகச் சேர்ந்து, இந்நூல் முழுவதும் ஓர் எல்லையற்ற கருணையைத் திரும்பத் திரும்ப வெளிப்படுத்துகிறார்கள்.
இதற்கு நேரெதிராக, தீமை, வாழ்க்கையில் அது எப்படித் தோன்றுகிறதோ அப்படியே மெய்யியல் ஆழமும் இல்லாமல், நாடகத்தன்மையும் இல்லாமல் இந்நூலில் வெளிப்படுகிறது. புனைவில் அது எப்படிச் சித்தரிக்கப்பட வேண்டுமோ சரியாக அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்கிறது என்பது என் கருத்து. அது மகத்தானதும் அல்ல, சுவாரஸ்யமானதும் அல்ல. பெரும்பாலும் அவை கற்பனையின்மையின் வெளிப்பாடே. இருட்டில் காயப்பட்டு, மூலையில் சிக்கிக்கொண்ட ஒரு விலங்கு தத்தளிப்பதைப் போன்றது. அங்கே மீட்டெடுப்பதற்கு எதுவும் இல்லை. பாராட்டத்தக்க வகையில் புரிந்துக்கொள்ள வேண்டிய மர்மம் எதுவும் இல்லை. கங்கைய்யா இதன் சிறந்த உருவகம். மிருகம் போன்ற அவனுடைய நாய் கிட்டத்தட்ட அவனுடைய நீட்சியே. அவனுடைய அதிகாரம் மிருக பலத்தின் மீதும், அதனைத் தொடர்ந்து வலுப்படுத்தும் ஆணாதிக்க ஒழுங்கின் மீதும் நிற்கிறது. தன் வீங்கிய அகங்காரத்திற்கு உணவளிப்பதைப் போலவே அவன் அந்த நாய்க்கும் உணவளிக்கிறான். உணர்ச்சிகரம் அற்ற அவனுடைய திடீர் மரணம் என்னை மிகுந்த வலிமையுடன் தாக்கியது. பாரததேவியின் கலை மேதைமை தெளிவாகத் தெரியும் சில தருணங்களில் அதுவும் ஒன்று.
பாரதா நினைவுகள் வழியாக தன்னைச் சித்தரித்துக் கொள்ளும் விதமும், அவளுக்கு எவ்வளவு குறைவான வெளிப்படையான தனித்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் அசாதாரணமானவை. ஒரு சிறந்த எழுத்தாளராக ஆகும் அளவுக்கு நுட்பமான பார்வையும் ஆற்றலும் கொண்டவளாக அந்த குட்டி பாரதா வளர்வாள் என்பது வாசகர்களாகிய நமக்கு படிக்கும் போதே தெரிகிறது. ஆனால் கதைக்குள் அவள் தன் சேத்திகாரர்கள் எனும் நண்பர்கள் கூட்டத்தில் ஒருத்தியாக மட்டுமே தோன்றுகிறாள். ஆங்கிலத்திலும் ‘சேத்திக்காரங்க’ என்னும் சொல்லை அப்படியே தக்கவைக்க வேண்டுமென்று விரும்பினேன். சேத்திக்காரங்க என்பது ஆங்கிலத்தில் ‘My Buddies’ அல்லது ‘My People’ என மொழிபெயர்ப்பதே பொருத்தமாக இருக்கும். ஆனால் அந்த ஆங்கிலச் சொற்றொடர்களில் உள்ள தன் மைய வலியுறுத்தல் தவறான புரிதலைத் தருகிறது. சேத்திக்காரங்க என்னும் தமிழ் சொல்லில் ‘நான்’ என்பதே இல்லை. சரியாக, பாரதாவும் அப்படித்தான் வளர்கிறாள். அவள் உலகை, அந்தக் கூட்டத்தின் ஓர் அங்கமாகவே அனுபவிக்கிறாள். ஒருபோதும் ஒரு தனிநபராக அல்ல. குழந்தையிலிருந்து பருவப் பெண்ணாக அவள் மாறுவதையும், பெரியவர்களின் உலகைப் பற்றிய புரிதலை மெல்ல மெல்ல அடைவதையும் நாம் பார்க்கிறோம். அவள் குழந்தைப்பருவத்தை தாண்டிய வயதுக்குள் நுழையும் சற்று முன்பே இந்நூல் நிறைவடைகிறது.
தன் எதிர்காலம் குறித்த தேர்வு ஒன்றை அவளாக முன்வைக்க முடியும் முதல் தருணம் அமைவது இந்நூலின் முடிவில் தான். அந்த தருணமே அவளுக்குக் கிட்டத்தட்டப் புரியாத ஒன்று. ஏனெனில் அவள் என்ன செய்ய வேண்டும், யாராக இருக்க வேண்டும் என்பது வாழ்நாள் முழுவதும் அவளுக்குச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது. அவள் என்ன விரும்புகிறாள் என்ற கேள்வி ஒருபோதும் அவளிடம் கேட்கப்பட்டதில்லை. நிச்சயமாக அவளுக்குத் தேவைகளும், ஆசைகளும் உண்டு. சிறு சிறு ரகசியங்கள் வழியாகவும் தந்திரங்கள் வழியாகவும் அவற்றை அவள் உலகிற்குள் கடத்திக் கொள்கிறாள். கல்வியின் மீதான அவளுடைய பசி இவற்றுள் விடாப்பிடியானது. ஆனால் அதன் ஆழத்தையோ, காரணத்தையோ அவளைச் சுற்றியிருப்பவர்கள் யாரும் முழுமையாகப் புரிந்துக் கொள்வதில்லை. சிலர் காகிதத் துண்டுகளையோ, பத்திரிக்கைகளையோ வாசிக்க அவளுக்கு உதவுகிறார்கள். ஆனால் அத்தகைய உதவிகள் ஒருபோதும் போதுமானவை அல்ல. நூலில் வெளிப்படையாகச் சொல்லப்படவில்லை என்றாலும், ஒப்பீட்டளவில் வசதியான, ஓய்வுள்ள வாழ்க்கை கிடைத்திருந்தால் பாரதா என்னவாக ஆகியிருப்பாள் என்பதை ஓரளவேனும் உணர்ந்த சிலரில் ஒருத்தி அவளுடைய தாய் என்றே நான் கருதுகிறேன். அத்தகைய வாழ்க்கையைத் தன் சொந்த வாழ்க்கைக்கு அந்த அன்னையால் கற்பனை செய்துகூடப் பார்த்திருக்க முடியாது. கணவனின் திடீர் மரணத்திற்குப் பிறகு அது அவளிடமிருந்து கொடூரமாகப் பறிக்கப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் இந்நூல் தமிழ் இலக்கியத்தில் செவ்வியல் அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. தமிழின் முக்கியமான நினைவுநூல்களில் ஒன்றாக இன்று பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. சமகாலத் தமிழ்நாட்டிலிருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்ட ஓர் உலகத்தை அது பாதுகாத்திருக்கும் விதத்திற்காக அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. புனைவில் முழுமையாகப் பதிவாகியிராத ஒரு கிராமிய வாழ்க்கையை அதுவும் ஒரு சிறுமியின் பார்வையிலிருந்து அது நேர்மையாகச் சித்தரித்திருப்பதில் விமர்சகர்களும், எழுத்தாளர்களும் தூண்டுதல் அடைந்திருக்கிறார்கள்.
இந்நூலில் ஒரு சாதி, சமூகக் குழு சார்ந்த அழகியல் உண்டு. அது உலகைப் பார்க்கும் ஒரு தனித்துவமான முறையைத் தன்னுள் கொண்டிருக்கிறது. கால்நடை மேய்ப்பு, வேளாண்மை சார்ந்த கூட்டு வாழ்க்கையிலிருந்து அந்த அழகியலைப் பிரிக்கவே முடியாது. வயல்களைப் பற்றியும் அவற்றில் வாழும் பல்வேறு உயிர்வடிவங்களைப் பற்றியும் கொண்ட நெருக்கமான அறிவு, சினம் கொண்ட தெய்வங்களோடும், மனிதர்களோடும் சகஜமாக வாழும் தன்மை, வானத்தையும், வானிலையையும் பற்றிய நுட்பமான அறிவு இவை அனைத்தும் நிலத்தோடும், விலங்குகளோடும் வாழும் அந்தக் குறிப்பிட்ட முறையிலிருந்தே எழ முடியும். ஆண், பெண் இருபாலரும் பாலுறவு குறித்தும் மனித அன்பு குறித்தும் கொண்டிருக்கும் ஆச்சரியமூட்டும் வெளிப்படைத்தன்மையும், அதே நேரத்தில் சாதி கடந்த உறவுகள் மீது நிகழ்த்தப்படும் கடுமையான, பெரும்பாலும் வன்முறை நிறைந்த கண்காணிப்பும் இதே அழகியலில் இருந்தே எழுகின்றன. அதே சமயம், இப்பார்வையில் விவரணை மிக உண்மையாக வேரூன்றியிருப்பதால், சில அந்நிய சாதியினர் பற்றிய அதன் சித்தரிப்பு வழக்கமான கருத்துருவங்களாக, கேலிச்சித்திரங்களாக நின்றுவிடுகிறது. சமூகத்திற்கு உள்ளே மிக நுட்பமாகச் சித்தரிக்கப்படுவது, வெளியே சில நேரங்களில் அது தட்டையாகிவிடுகிறது. இத்தகைய இடம் சார்ந்த அழகியலுக்குள்ளேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் எல்லை இதுவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டி, இந்நூல் ஒரு காலப் பொக்கிஷமாக செயல்படுகிறது. கடுமையானதும், அழகானதும், வலி நிறைந்ததும், சாதாரணமானதுமான வாழ்க்கை, எனினும் தனித்துவமான மாயமும், வியப்பும் நிறைந்திருந்த ஒரு காலகட்டத்தை அது தன்னுள் கொண்டிருக்கிறது. கி. ராஜநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் இதன் நேர்மைக்காகவும், தமிழில் கிராமிய வாழ்க்கை சார்ந்து எழுதுவதன் சாத்தியங்களை இந்நூல் விரிவுபடுத்திய விதத்திற்காகவும் இதைப் பாராட்டியிருக்கிறார்கள். இந்நூலை ஆங்கிலத்தில் முதன்முதலாக மொழிபெயர்த்து வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பதையும், இதன் உலகத்தை இன்னொரு மொழிக்கும், இன்னொரு காலத்திற்கும் சுமந்து செல்வதில் சிறிய அளவிலேனும் பங்கு பெறுவதை மிகுந்த நன்றியுணர்வோடும், பெருமிதத்தோடும் ஏற்றுக் கொள்கிறேன்.
*
