அறத்தின் வேர்கள்: பிலிப்பா ஃபுட்டின் தத்துவப் பயணம் – விவேக் சுப்ரமணியன்

தீமையின் நியாயமும் அறத்தின் அடிப்படையும்:
இருபதாம் நூற்றாண்டின் ஐரோப்பிய வரலாற்றில் நிகழ்ந்த பெரும் முரண்களில் ஒன்று, மனித நாகரிகம் தனது அறிவாற்றலின் உச்சத்தை எட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அதன் மிகக் கொடூரமான இனப்படுகொலையையும் நிகழ்த்தியது என்பது தான். அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் முன்னேறியிருந்த ஜெர்மனி, தத்துவத்திலும் இலக்கியத்திலும் இசையிலும் உலகிற்குப் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தது. கான்ட்டையும் ஹெகலையும் நீட்சேயையும் உருவாக்கிய அறிவுமரபின் பின்னணியில்தான் ஹிட்லரின் நாஜி அரசும் உருவானது. ஐரோப்பிய அறிவொளி மரபு மனிதனின் பகுத்தறிவில் வைத்திருந்த நம்பிக்கைக்கும் அங்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கும் இடையிலான முரண், போருக்குப் பிந்தைய சிந்தனையாளர்களைப் பல்வேறு தளங்களில் ஆழமான விசாரணைகளுக்கு இட்டுச்சென்றது.
1945ஆம் ஆண்டு நேசநாடுகளின் படைகள் ஜெர்மனியின் வதைமுகாம்களுக்குள் நுழைந்தபோது வெளிப்பட்ட செய்திகள், அதுவரை உலகம் அறிந்திருந்த போர்க்கொடுமைகளிலிருந்து வேறுபட்டிருந்தன. மனிதர்களைக் கொல்வதற்கென்றே திட்டமிடப்பட்ட அமைப்புகள், அவர்களை இனத்தின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஆவணங்கள், நாடு முழுவதிலுமிருந்து முகாம்களை நோக்கிச் சென்ற தொடர்வண்டிகள், கொலைகளின் எண்ணிக்கையைப் பதிவு செய்த நிர்வாக முறைகள் என ஒவ்வொன்றும் திட்டமிட்ட அழித்தொழிப்பின் சான்றுகளாக இருந்தன. தனிமனிதனின் கட்டுப்பாடற்ற வெறிச்செயல் சட்டத்தின் துணையுடனும் அரசு நிர்வாகத்தின் ஒழுங்குடனும் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு நவீன அரசால் தனது குடிமக்களில் ஒரு பகுதியினரை மனிதர்களாகவே கருத மறுத்தது. இந்த வரலாற்று உண்மை, அரசியல் அதிகாரத்திற்கும் அறநெறிக்கும் உள்ள தொடர்பைப் பற்றிய பழைய நம்பிக்கைகளை மீண்டும் ஆராய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
போரின் முடிவில் இந்தச் செய்திகள் இங்கிலாந்தை அடைந்தபோது, ஆக்ஸ்ஃபோர்டில் தத்துவம் பயின்றிருந்த பிலிப்பா ஃபுட் இருபத்தைந்து வயதுடைய இளம்பெண். நாஜிகளின் செயல்களைப் பற்றிய செய்திகள் தன்னை அறவியல் குறித்த ஆழமான சிந்தனைக்குத் தூண்டியதாகப் பிற்காலத்தில் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். அன்றைய பிரிட்டிஷ் தத்துவ உலகில் செல்வாக்குப் பெற்றிருந்த சில அறக்கோட்பாடுகளுக்கும் நாஜிகளின் கொடுமைகளைப் பற்றித் தனக்கிருந்த உறுதியான அறத்தீர்ப்புக்கும் இடையே அவரால் எளிதில் கடந்து செல்ல முடியாத இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைப் புரிந்துகொள்வதற்கு அக்காலத்தில் அறம் குறித்து நிலவிய தத்துவ விவாதங்களைச் சற்றே அணுக வேண்டியிருக்கிறது. மனிதர்களின் அறத்தீர்ப்புகள் எதன் அடிப்படையில் அமைகின்றன என்ற கேள்வி மேற்கத்தியத் தத்துவத்தில் நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஒரு செயலை நல்லதென்றோ தீயதென்றோ மதிப்பிடும்போது நாம் உலகிலுள்ள ஓர் உண்மையைக் கண்டறிந்து கூறுகிறோமா, அல்லது அந்தச் செயலைப் பற்றிய நமது விருப்பத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறோமா? இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டனில் வளர்ச்சியடைந்த பகுப்பாய்வுத் தத்துவம் இத்தகைய கேள்விகளை மொழியின் பொருள், தர்க்கம், அறிவின் எல்லைகள் ஆகியவற்றின் வழியாக ஆராய்ந்தது. அந்த மரபிலிருந்து தோன்றிய உணர்வு, அறம் சார்ந்த கூற்றுகளை உண்மை அல்லது பொய்மை என்று தீர்மானிக்கக்கூடிய முடிவிலிருந்து வேறுபடுத்தியது.
ஏ. ஜே. ஏயர் போன்ற தத்துவவாதிகளின் பார்வையில், ஒரு செயலைத் தவறானது என்று கூறுவதில் அந்தச் செயலின் மீதான நமது எதிர்ப்புணர்வும் வெளிப்படுகிறது. இந்தக் கோட்பாட்டை அதன் அறிவுசார் பின்னணியிலிருந்து பிரித்துப் பார்த்தால் எளிதில் தவறாகப் புரிந்துகொள்ள நேரிடும். அறிவியல் கூற்றுகளையும் அறம் சார்ந்த கூற்றுகளையும் ஒரே முறையில் மெய்ப்பிக்க இயலுமா என்ற சிக்கலிலிருந்தே அவர்களுடைய விசாரணை தொடங்கியது. புலனறிவாலும் தர்க்கத்தாலும் உறுதிப்படுத்தக்கூடிய கூற்றுகளுக்கு அவர்கள் அளித்த முக்கியத்துவம், மொழியின் தனித்தன்மையை விளக்க வேண்டிய தேவையை உருவாக்கியது. ஆயினும் அறத்தீர்ப்பை ஒருவருடைய மனப்பாங்குடன் தொடர்புபடுத்தும் இத்தகைய விளக்கங்கள், அறத்தின் புறவயமான அடிப்படையை எவ்வாறு புரிந்துகொள்வது என்ற புதிய சிக்கலையும் எழுப்பின.

நாஜிகளின் இனப்படுகொலையை எடுத்துக்கொண்டால் இந்தச் சிக்கலின் தீவிரம் புலப்படும். யூதர்களை அழித்தொழிப்பது தங்களுடைய இனத்தின் எதிர்காலத்திற்கும் நாட்டின் நலனுக்கும் அவசியமானது என்று நாஜிகள் நம்பினர். அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான வரலாற்று விளக்கங்களையும் போலி அறிவியல் கோட்பாடுகளையும் அவர்கள் உருவாக்கினர். இனவெறி அரசின் கொள்கையாகவும் குடிமக்களின் கடமையாகவும் மாற்றப்பட்டது. இந்நிலையில் நாஜிகளின் செயல்களைத் தவறானவை என்று கூறுவது அவர்களுடைய நம்பிக்கையிலிருந்து மாறுபட்ட இன்னொரு நம்பிக்கையை வெளிப்படுத்துவது மட்டும்தானா? அறத்தீர்ப்புகளுக்கிடையிலான வேறுபாடு வெறும் மனப்பாங்குகளின் வேறுபாடாகச் சுருங்கிவிடுமானால், நாஜிகளின் கொள்கைகளை மறுப்பதற்கான பொதுவான காரணங்களை எங்கிருந்து பெறுவது?
இந்த இடத்தில் ஃபுட்டின் சிந்தனையில் உருவான கருத்துக்கள் முக்கியமானது. மனிதர்களின் செயல்களை மதிப்பிடுவதற்கான காரணங்கள் அவர்களுடைய விருப்பங்களுக்கேற்ப முற்றிலும் மாறிவிடுவதில்லை. ஒருவரைக் கொடூரமானவர் என்று கூறும்போது, அந்த மதிப்பீட்டிற்குப் பின்னால் சில உண்மைகள் இருக்கின்றன. பிறருக்குத் துன்பம் விளைவிப்பதில் அவர் இன்பம் காண்கிறாரா, மற்றவர்களின் நலனைப் பொருட்படுத்தாமல் செயல்படுகிறாரா, தவிர்க்கக்கூடிய துயரத்தை வேண்டுமென்றே உருவாக்குகிறாரா என்பன போன்ற காரணங்கள் அந்த மதிப்பீட்டுடன் தொடர்புடையவை. அவருடைய உடையின் நிறமோ உணவுப் பழக்கமோ அதற்கான சான்றுகளாக அமைவதில்லை. எனவே கொடுமை, நீதி, நேர்மை போன்ற சொற்களின் பொருள், அவற்றைப் பயன்படுத்துபவரின் விருப்பத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. மனித வாழ்க்கையில் நிகழும் சில உண்மைகளுடன் அவை தொடர்புடையவையாக இருக்கின்றன.
ஃபுட்டின் தொடக்ககால அறவியல் ஆய்வுகளில் இந்தக் கருத்து தொடர்ந்து வளர்ச்சியடைந்தது. அறம் சார்ந்த மதிப்பீடுகளுக்குப் பொருத்தமான காரணங்கள் இருக்கின்றன என்பதையும், அவற்றை மனிதர்களின் மனநிலைகளிலிருந்து முற்றிலும் பிரித்துவிட முடியாது என்பதையும் அவர் வலியுறுத்தினார். இதனால் எல்லா அறச்சிக்கல்களுக்கும் ஒரே விடை கிடைத்துவிடும் என்று அவர் கருதவில்லை. ஒரே நிகழ்வைப் பற்றிய முழுமையான தகவல்களை அறிந்த இருவருக்கிடையிலும் அறக்கருத்து வேறுபாடு நிலவலாம். இருப்பினும் ஒரு கருத்தை ஆதரிப்பதற்கான காரணங்களுக்கும் அதைப் பொருட்படுத்தாமல் நிராகரிப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு. அறவிவாதம் சாத்தியமாவதே இந்த வேறுபாட்டினால்தான்.
நாஜிசத்தின் வரலாற்றை அறத்தின் அடிப்படையுடன் இணைத்துப் பார்க்கும்போது அரசியல் அதிகாரத்தின் இன்னொரு இயல்பும் வெளிப்படுகிறது. மனிதர்கள் தங்களுடைய கொடுமைகளை எப்போதும் கொடுமைகளாகவே அறிந்துகொள்வதில்லை. அவற்றுக்கான நியாயங்களை உருவாக்கிக்கொள்கிறார்கள். தனிமனித வெறுப்பை ஒரு சமூகத்தின் பொது நலனாகவும், பிறருடைய உரிமைகளை மறுப்பதைத் தங்களுடைய பாதுகாப்பாகவும், அழித்தொழிப்பை வரலாற்றுக் கடமையாகவும் மாற்றும் கருத்தியல்கள் அரசியல் வரலாற்றில் மீண்டும் மீண்டும் தோன்றியிருக்கின்றன. அத்தகைய சூழலில் அறம் என்பது சமூகத்தில் நிலவும் ஒப்புதல்களைப் பதிவு செய்யும் ஒன்றாக மட்டும் இருந்துவிட முடியாது. அந்த ஒப்புதல்களையே ஆராய்ந்து மதிப்பிடுவதற்கான அடிப்படையும் அதற்குத் தேவைப்படுகிறது.

இந்த வரலாற்றுப் பின்னணியில் ஹன்னா அரென்ட்டின் சிந்தனைகளையும் நாம் நினைவுகூரலாம். நாஜி அரசின் எழுச்சியையும் சர்வாதிகாரத்தின் இயல்பையும் ஆராய்ந்த அரென்ட், அரசியல் அமைப்புகளுக்குள் தனிமனிதனின் சிந்தனையும் பொறுப்புணர்வும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை விரிவாக விவாதித்தார். குறிப்பாக அடால்ஃப் ஐக்மன் மீதான விசாரணையைத் தொடர்ந்து அவர் முன்வைத்த தீமையின் சாதாரணத்தன்மை (Banality of Evil) என்ற கருத்து, பெரும் கொடுமைகளை நிகழ்த்துபவர்கள் அனைவரும் அசாதாரணமான மனநிலையுடையவர்களாக இருக்க வேண்டியதில்லை என்ற பிரச்சினையை வெளிப்படுத்தியது. அரசின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதும், தமக்கு ஒதுக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதும், அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறுவதும் எத்தகைய அறப்பிறழ்வுகளுக்கு வழிவகுக்கின்றன என்பதை அரென்ட் ஆராய்ந்தார். ஃபுட்டின் விசாரணை வேறொரு திசையில் சென்றது. கொடுமையைச் செய்பவனின் அரசியல் சூழலைப் புரிந்துகொள்வதோடு, அவனுடைய செயலை அறத்தின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கான காரணங்களையும் கண்டறிய வேண்டியிருந்தது.
இவ்விருவரின் சிந்தனைகளையும் ஒரே கோட்பாட்டின் இரு வடிவங்களாகக் கருத இயலாது. அவர்களுடைய அணுகுமுறைகளிலும் நோக்கங்களிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருந்தன. இருப்பினும் ஐரோப்பியப் பேரழிவுக்குப் பிந்தைய அறவியல் சிந்தனையில் அவர்களுடைய விசாரணைகள் முக்கியமான இடத்தைப் பெற்றன. மனிதன் சிந்திக்கும் திறனுடையவன் என்பதால் மட்டுமே அவனுடைய செயல்கள் அறநெறிக்கு உட்பட்டவையாக அமைந்துவிடுவதில்லை. அவனுடைய பகுத்தறிவு எத்தகைய நோக்கங்களுக்குப் பயன்படுகிறது, அவன் ஏற்றுக்கொண்ட நம்பிக்கைகளை எவ்வாறு சோதிக்கிறான், பிற மனிதர்களுடைய வாழ்க்கையை எந்த அளவுக்கு மதிக்கிறான் என்பனவும் முக்கியமாகின்றன. பகுத்தறிவுக்கும் அறத்திற்கும் இடையிலான இந்த உறவு பின்னாளில் ஃபுட்டின் தத்துவத்தில் மேலும் ஆழமான இடத்தைப் பெற்றது.
அவருடைய பிற்கால எழுத்துகளில் இடம்பெறும் ஒரு நிகழ்வு இதைத் தெளிவாக்குகிறது. நாஜி எஸ்.எஸ். படையில் சேர மறுத்த சூடெட்டன்லாந்தைச்(செக்ரிபப்ளிக்கின் பகுதி) சேர்ந்த ஓர் இளைஞனைப் பற்றிய நிகழ்வை ஃபுட் விவாதிக்கிறார். தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வாய்ப்பு இருந்தும் கொடுமையில் பங்கெடுக்க விரும்பாத அந்த இளைஞன் மரணத்தை எதிர்கொள்கிறான். மனிதன் இயல்பாகவே உயிர்வாழ விரும்புகிறான். தனது நலனைப் பாதுகாத்துக்கொள்வதும் அவனுடைய செயல்களுக்கான வலுவான காரணமாக அமைகிறது. அவ்வாறிருக்க, உயிரிழப்பை அறிந்தே ஏற்றுக்கொள்ளும் அந்த இளைஞனின் முடிவை எவ்வாறு புரிந்துகொள்வது? தனக்கு நன்மை பயக்கும் முடிவை எடுப்பதே பகுத்தறிவு என்ற விளக்கம் இங்கே போதுமானதாக இல்லை. மனிதனின் நன்மையை அவனுடைய உடனடித் தேவைகளாலும் தனிப்பட்ட விருப்பங்களாலும் மட்டுமே அளவிட முடியாது என்ற சிந்தனைக்கு இத்தகைய நிகழ்வுகள் வலுச்சேர்க்கின்றன. ஃபுட்டின் தத்துவ வளர்ச்சியை இங்கிருந்து பின்னோக்கிப் பார்க்கும்போது அதன் தொடர்ச்சி தென்படுகிறது. இளமையில் நாஜிகளின் கொடுமைகள் குறித்து அவருக்குள் எழுந்த அறவியல் சிக்கல், முதுமையில் மனித நன்மைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான உறவை ஆராயும் நிலைக்கு வளர்ந்திருந்தது. தொடக்கத்தில் அறச்சொற்களின் பொருளையும் அவற்றுக்கான காரணங்களையும் ஆராய்ந்தவர், பின்னர் நற்பண்புகளின் இயல்பையும் மனித வாழ்க்கையின் நன்மையையும் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார். மனிதனின் செயல்களை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களை மனித வாழ்க்கையிலிருந்தே கண்டறிய முடியுமா என்ற விசாரணை அவரது பிற்காலத் தத்துவத்தின் மையமாக அமைந்தது.
இந்தச் சிந்தனை வளர்ச்சியில் அரிஸ்டாட்டிலின் அறவியல் முக்கியமான இடத்தைப் பெற்றது. மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கேள்வியை, அவர் எத்தகைய உயிரினம், அவனுடைய திறன்களும் தேவைகளும் என்ன, ஒரு சிறந்த மனித வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பவற்றுடன் இணைத்து ஆராயும் அரிஸ்டாட்டிலின் மரபு, ஃபுட்டின் தத்துவத்திற்குப் புதிய வழிகளைத் திறந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கிரேக்கச் சிந்தனை இருபதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் அறவியல் விவாதங்களுக்குள் மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. அந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கு ஆக்ஸ்ஃபோர்டின் அறிவுசார் சூழலையும், அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த பகுப்பாய்வுத் தத்துவ மரபையும், அதன் அறக்கோட்பாடுகளுக்கு எதிராக எழுந்த விமர்சனங்களையும் ஆராய வேண்டியிருக்கிறது. ஃபுட்டின் தத்துவம் உருவான களம் அதுதான்.
மனிதத் துயரத்தின் முன்னால் அறம்:
1939ஆம் ஆண்டு ஆக்ஸ்ஃபோர்டின் சோமர்வில் கல்லூரியில் சேர்ந்த ஃபுட், போரின் நிழலில்தான் தத்துவம் பயின்றார். பல ஆண் மாணவர்கள் போருக்குச் சென்றிருந்த காலத்தில், பெண்களின் அறிவார்ந்த உரையாடல்களுக்கு அங்கே கூடுதல் வாய்புகள் கிடைத்தது. எலிசபெத் அன்ஸ்கோம்ப், ஐரிஸ் மர்டாக், மேரி மிட்ஜ்லி ஆகியோருடனான நட்பும் விவாதங்களும் அவரது சிந்தனையை வளர்த்தன. இவர்கள் ஒரே கோட்பாட்டைப் பின்பற்றவில்லை. மனிதர்களின் வாழ்விலிருந்து விலகிச் செல்லும் அறவியல் விளக்கங்கள் மீதான அதிருப்தி அவர்களிடையே வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டது.
அவர்கள் எதிர்கொண்ட சூழலைப் புரிந்துகொள்ள, பிரிட்டிஷ் தத்துவத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் கருத்தில் கொள்ளவேண்டும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் செல்வாக்குப் பெற்றிருந்த கருத்துமுதல்வாதம், அனுபவங்களை ஒரு முழுமையின் பகுதிகளாக விளக்கியது. அதிலிருந்து விலகிய பெர்ட்ரண்ட் ரஸ்ஸலும் ஜி. இ. மூரும், கருத்துகளின் துல்லியத்தையும் தர்க்கரீதியான பகுப்பாய்வையும் முன்னிறுத்தினர். உலகிற்கான பெரிய விளக்கங்களை உருவாக்குவதற்கு முன்பு, நாம் பயன்படுத்தும் சொற்கள் என்ன பொருள்படுகின்றன என்பதை ஆராய வேண்டும் என்ற அணுகுமுறை வலுப்பெற்றது. அறத்திற்கும் இந்த விசாரணை விரிந்தது. ஒரு சட்டம் நடைமுறையில் இருக்கிறது என்பதையும், அது நியாயமானது என்பதையும் தனித்தனியாக ஆராய வேண்டியிருந்தது. மக்கள் ஒன்றை விரும்புகிறார்கள் என்ற தகவல், அதை அவர்கள் விரும்புவது சரியா என்ற கேள்விக்கான பதிலாக அமையாது. இந்த வேறுபாடுகளைத் தெளிவுபடுத்திய பகுப்பாய்வு முறை, ஃபுட்டின் விமர்சனத்திற்கும் கருவியானது. அவர் அந்த மரபிற்கு வெளியிலிருந்து எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; அதன் கேள்விகளை மனித வாழ்வின் நெருக்கடிகளுக்குள் எடுத்துச் சென்றார்.
1903இல் வெளியான Principia Ethica நூலில், இன்பம் தருவதெல்லாம் நல்லதாகிவிடாது என்பதைச் சுட்டிக்காட்டிய மூர், நன்மையை இன்பம் போன்ற ஒரு பண்பாகச் சுருக்க முடியாது என்று வாதிட்டார். ஏயர், தவறு போன்ற அறத்தீர்ப்புகள் உண்மைகளை அறிவிப்பதைவிட நமது கண்டன உணர்வை வெளிப்படுத்துகின்றன என்று விளக்கினார். ஹேர், நாம் ஏற்றுக்கொள்ளும் அறவிதிகளை ஒத்த சூழல்களில் பிறருக்கும் பொருத்தத் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த விவாதங்களின் பின்னணியில், மனிதர்களுக்கு ஏற்படும் தீங்கிற்கும் அறமதிப்பீட்டிற்கும் உள்ள தொடர்பையும், நிலைத்தன்மையுடன் பின்பற்றப்படும் கொள்கைகூட அநீதியானதாக இருக்கக்கூடும் என்பதையும் ஃபுட் ஆராய்ந்தார்.
1958இல் வெளியான Moral Arguments கட்டுரையில், ஃபுட் இந்தப் பிரச்சினையை அன்றாட மொழியின் வழியாக அணுகினார். ஒரு செயலை மரியாதையற்றது என்று கூறும்போது, அது நமக்குப் பிடிக்கவில்லை என்பதை மட்டும் சொல்கிறோமா என்று ஃபுட் கேட்கிறார். உதாரணமாக, வழியில் நிற்கும் ஒருவரிடம் விலகச் சொல்லாமல் அவரைத் தள்ளிவிட்டுச் செல்வதில், அவரை மதிக்காத அணுகுமுறை வெளிப்படுகிறது. ஆனால் நமக்கு முன்னால் ஒருவர் மெதுவாக நடப்பது எரிச்சலை ஏற்படுத்தினாலும், அதற்காகவே அவரை மரியாதையற்றவர் என்று கூற முடியாது. நமக்குப் பிடிக்காத செயலுக்கும், பிறரை மதிக்காத செயலுக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதே ஃபுட்டின் கருத்து.
இங்கே ஃபுட் வெளிப்படுத்திய வேறுபாடு முக்கியமானது. ஒரு சொல் கண்டனத்தைத் தெரிவிக்கலாம்; அதே நேரத்தில் அதன் பயன்பாட்டிற்கு அடிப்படைகளும் இருக்கலாம். நமக்கு எரிச்சலூட்டும் எல்லாவற்றையும் கொடுமை, அநீதி, துரோகம் என்று அழைத்தால், அந்தச் சொற்களின் பொருளையே சிதைக்கிறோம். அறவிவாதத்தில் எந்தத் தகவலையும் விருப்பப்படி ஆதாரமாக்க முடியாது என்பதே அவரது வாதம். கருத்து வேறுபாடு இருக்கிறது என்பதற்காகக் காரணங்களின் பங்கு முடிந்துவிட்டதாகவும் அறிவிக்க முடியாது. விவாதத்தின் கடினத்தன்மை அதன் அர்த்தமின்மைக்கான சான்றல்ல. அதே நேரத்தில், ஒருவர் புண்பட்டுவிட்டார் என்பதாலேயே மற்றவரின் செயல் மரியாதையற்றதாகிவிடாது. நியாயமான விமர்சனத்தைக்கூட ஒருவர் அவமதிப்பாக எடுத்துக்கொள்ளலாம். ஆகவே உணரப்பட்ட காயத்தையும் நிகழ்ந்த நடத்தையையும் அதன் சூழலையும் ஆராய வேண்டும். ஃபுட்டின் உதாரணத்தைப் புரிந்துகொள்வதில் இந்த நுணுக்கம் அவசியம். மதிப்பீட்டிற்கு அடிப்படை உண்டு என்பது, ஒவ்வொரு சம்பவத்தையும் ஒரு எளிய விதியால் தீர்த்துவிடலாம் என்று பொருள்படாது. மாறாக, எது நடந்தது என்பதைத் தெளிவாக அறியும் பொறுப்பை அது நம்மிடம் கோருகிறது.
அரசியல் மொழியில் இதன் முக்கியத்துவத்தை உணரலாம். ஒரு அரசு குடிமக்களை அச்சுறுத்துவதை ஒழுங்கை நிலைநாட்டுதல் என்று பெயரிடலாம். இந்த உதாரணத்தில், பெயரை மட்டும் ஆய்வது போதாது. யார் பாதிக்கப்படுகிறார்கள், எதற்காகத் தண்டிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா என்பதையும் கேட்க வேண்டும். அதிகாரம் வழங்கும் விளக்கம் அந்தச் செயலின் அறத்தன்மையை முடிவுசெய்வதில்லை. மனிதர்களுக்கு நேரும் தீங்கை விவாதத்திலிருந்து அகற்றிவிட்டு, சொற்களை மட்டும் மாற்றுவதால் கொடுமையை நியாயப்படுத்த முடியாது. ஃபுட்டின் அணுகுமுறை இத்தகைய விசாரணைக்கான அடிப்படையை வழங்குகிறது. பாதுகாப்பிற்காகக் கட்டுப்பாடு விதிப்பது எல்லாச் சூழல்களிலும் அநீதி என்று இதனால் முடிவாகாது. அந்தக் கட்டுப்பாட்டிற்குத் தேவையிருக்கிறதா, அது அளவுக்கு மீறுகிறதா, சிலரை மட்டும் குறிவைக்கிறதா என்பதுதான் ஆய்வுக்குரியது. ஒரே சொல்லின் பின்னால் வெவ்வேறு செயல்கள் மறைந்திருக்கலாம். அதனால் அரசின் நோக்கம் பற்றிய அறிவிப்பைவிட, அதன் நடவடிக்கைகளும் விளைவுகளும் முக்கியமாகின்றன. ஒரு கொள்கையை விமர்சிப்பதற்கு அதன் ஆதரவாளர்களை வெறுக்க வேண்டியதில்லை; அந்தக் கொள்கையால் மனிதர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை எடுத்துக்காட்டுவது பொருத்தமான தொடக்கமாகும்.
இதே சிக்கலை இலக்கிய அனுபவத்தின் வழியாக அணுகும்போது, தஸ்தயெவ்ஸ்கியின் ரஸ்கோல்னிகோவ் நினைவுக்கு வருகிறான். குற்றமும் தண்டனையும் நாவலில், அசாதாரண மனிதர்களுக்குப் பெரிய இலட்சியங்களுக்காகச் சட்டத்தை மீறும் உரிமை இருக்கலாம் என்று அவன் வாதிடுகிறான். கொலையை பெரிய சாதனையின் தேவையாக விளக்க முயல்கிறான். ஆனால் அவனுடைய கருத்தமைப்புக்குள் அடங்காத மனித உயிர்களையும் மனச்சிதைவையும் நாவல் தொடர்ந்து நம்முன் நிறுத்துகிறது. இலட்சியத்தின் மொழி, நிகழ்ந்த கொலையின் உண்மையை மறைத்துவிடுவதில்லை. ரஸ்கோல்னிகோவின் நியாயப்படுத்தலை மதிப்பிடும்போது, அவன் எவ்வளவு உறுதியாக நம்புகிறான் என்பதுடன் நிறுத்திக்கொள்ள முடியாது. அவன் செய்தது என்ன, யாருடைய வாழ்க்கையை அழித்தான், அந்த அழிவை அவனது காரணங்கள் நியாயப்படுத்துகின்றனவா என்பதும் முக்கியம். ஃபுட்டின் விசாரணையும் அறமதிப்பீட்டை மனித வாழ்க்கையின் இத்தகைய உண்மைகளுடன் இணைத்தது. தத்துவத்திற்கு இலக்கியம் இங்கே ஒரு சான்றாக அல்லாமல், கருத்துகளின் மனித விளைவுகளை உணர்த்தும் வெளியாக அமைகிறது.
1959ஆம் ஆண்டின் Moral Beliefs கட்டுரையில், நற்பண்புகளுக்கும் மனித நலனுக்கும் உள்ள தொடர்பை ஃபுட் மேலும் ஆராய்ந்தார். துணிவு, நிதானம், நீதி ஆகியவற்றை ஏன் மதிக்கிறோம்? ஆபத்துகள், ஆசைகள், பரஸ்பரச் சார்புகள் நிறைந்த மனித வாழ்க்கையில் அவை என்ன செய்கின்றன? அச்சமின்மை மட்டும் போதாது. பிறரைத் துன்புறுத்துவதற்காகவும் ஒருவர் ஆபத்தை எதிர்கொள்ளலாம். அந்த ஆற்றல் எந்த நோக்கத்திற்குப் பயன்படுகிறது என்பதைக் கவனிக்கும்போதுதான், திறமைக்கும் நற்பண்புக்கும் உள்ள வேறுபாடு தெளிவாகிறது. நீதியின் தேவையை அன்றாட உறவுகளிலும் பார்க்கலாம். உழைப்புக்கான ஊதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒருவர் வேலை செய்கிறார். பொருள் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் மற்றொருவர் உதவி கேட்கிறார். வாக்குறுதிகளும் பொறுப்புகளும் எப்போதும் மீறப்பட்டால், ஒவ்வொரு உறவையும் கண்காணிப்பும் அச்சமும் ஆளத் தொடங்கும். இவை ஃபுட்டின் வாதத்தை விளக்கும் உதாரணங்கள். நற்பண்புகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள, தனிமனிதரின் பாராட்டைத் தாண்டி மனிதர்கள் பகிர்ந்துகொள்ளும் வாழ்க்கையின் தேவைகளைப் பார்க்க வேண்டும் என்பதை இவை காட்டுகின்றன.
இருப்பினும் அறமாக வாழ்வது எப்போதும் ஆதாயம் தரும் என்று கூறிவிட முடியாது. நாசிகளை எதிர்த்ததால் மரணதண்டனை பெற்றவர்களின் சிறைக் கடிதங்கள் ஃபுட்டைச் சிந்திக்க வைத்தன. குடும்பத்துடன் மீண்டும் வாழும் வாய்ப்பை இழப்பதை அறிந்தும், சிலர் கொடுமைகளுக்கு உடன்பட மறுத்தனர். அவர்கள் இழந்த மகிழ்ச்சியை அற்பமானதாகக் கருத முடியாது என்று ஃபுட் வலியுறுத்தினார். நல்லவராக இருப்பதற்கும் தனக்கு நன்மை கிடைப்பதற்கும் உள்ள உறவு இங்கே கடினமான கேள்வியாகிறது. அறம் எளிதான வெற்றிக்கான வழி என்ற ஆறுதலை வரலாறு அனுமதிப்பதில்லை.
இந்தச் சிக்கல்களுக்கு இடையே அவரது நிலைப்பாடுகளும் மாறின. 1972இல் அறத்தின் கோரிக்கைகளைச் செயலுக்கான காரணங்களாக ஏற்றுக்கொள்வதற்கும் ஒருவருடைய விருப்பங்களுக்கும் உள்ள தொடர்பை ஆராய்ந்தார். பின்னர் தமது விளக்கத்தைத் திருத்திக்கொண்டார். மற்றவருடைய நலனை ஒருவர் பொருட்படுத்தவில்லை என்பதால், அதைப் பொருட்படுத்துவதற்கான காரணமே அவருக்கு இல்லை என்று முடிவுசெய்ய முடியாது என்றார். ஒரு காரணத்தை ஏற்க மறுப்பதற்கும், அத்தகைய காரணம் இல்லாமல் இருப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது. இந்த மாற்றம் அவரது தேடலின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் அவரது தொடக்ககால வாதத்திற்கு ஒரு எல்லை உண்டு. அறச்சொற்களை விருப்பப்படி பயன்படுத்த முடியாது என்று நிறுவுவது, வளங்களை எவ்வாறு பகிர்வது அல்லது உரிமைகளில் எதற்கு முன்னுரிமை தருவது என்பதற்கான முழுப் பதிலல்ல. “மனித நலன்” என்று சொல்வதற்குள் என்ன அடங்குகிறது என்பதையும் விளக்க வேண்டும். ஃபுட்டின் முக்கியத்துவம் அவற்றைப் பற்றிக் காரணங்களுடன் பேச முடியும் என்ற வாய்ப்பைப் அளித்து, அந்த விசாரணையை மேலும் ஆழமாகச் செல்ல வற்புறுத்தியதில் இருக்கிறது.
ஆக்ஸ்போர்ட்டில் அன்ஸ்கோம்புடனான உரையாடல்கள் ஃபுட்டின் தேடலுக்குத் துணையாகின. அன்ஸ்கோம்பின் Intention நூல், மனிதர்கள் என்ன செய்கிறார்கள், ஏன் செய்கிறார்கள் என்பதை ஆராய்ந்தது; அவரது Modern Moral Philosophy கட்டுரை, மனிதர்களின் விருப்பங்களையும் நோக்கங்களையும் குணநலன்களையும் புரிந்துகொள்ளாமல், அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று விதிகளை மட்டும் வகுப்பது போதாது எனச் சுட்டிக்காட்டியது. இந்தக் கேள்வியைத் தொடர்ந்து ஆராய்ந்த ஃபுட், மனிதர்கள் ஒருவரையொருவர் நம்பி வாழ்வதற்கு நேர்மை, நீதி, அக்கறை போன்ற பண்புகள் ஏன் தேவைப்படுகின்றன என்று கேட்டார். குறிப்பிட்ட சூழலில் எது சரியான செயல் என்பதைச் சீர்தூக்கி முடிவெடுப்பதையும், ஒரு மனித வாழ்க்கை சிறப்பாக அமைவது எவ்வாறு என்பதையும் ஆராய்ந்த அரிஸ்டாட்டிலின் அறவியல், அவரது தேடலுக்கு முக்கியமான அடிப்படையாக அமைந்தது.
நற்பண்பின் மீட்சி: அரிஸ்டாட்டிலும் ஆக்ஸ்ஃபோர்டின் நான்கு பெண்களும்:
பிலிப்பா ஃபுட், எலிசபெத் அன்ஸ்கோம்ப், ஐரிஸ் மர்டாக், மேரி மிட்ஜ்லி ஆகிய நால்வரும் ஒரே சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் அல்லர். அவர்களுடைய ஆளுமைகளும் , நாட்டங்களும், தத்துவ அணுகுமுறைகளும் வேறுபட்டிருந்தன. ஆயினும் அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அறக்கோட்பாடுகள் மனித வாழ்க்கையின் சிக்கலான இயல்பைப் போதுமான அளவு விளக்கவில்லை என்ற அதிருப்தி அவர்களிடையே காணப்பட்டது. பிற்காலத்தில் இவர்களை ஒருங்கிணைத்து ஆராய்ந்த வரலாற்றாசிரியர்கள், நவீன அறவியலில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றமொன்றின் தொடக்கத்தை இந்த நட்புகளிலும் விவாதங்களிலும் கண்டனர்.

இவர்களில் ஐரிஸ் மர்டாக் இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைத்துப் பயணித்தவர். மனிதனுடைய அறவாழ்வை அவன் மேற்கொள்ளும் வெளிப்படையான செயல்களைக் கொண்டு மட்டுமே மதிப்பிட முடியாது என்று கருதினார். பிற மனிதர்களை நாம் எவ்வாறு பார்க்கிறோம், அவர்களைப் பற்றிய நமது எண்ணங்கள் எவ்வாறு உருவாகின்றன, சுயநலமும் கற்பனையும் நமது பார்வையை எந்த அளவுக்குத் திரித்துவிடுகின்றன என்பன அவருக்கு முக்கியமான பிரச்சினைகளாக இருந்தன. அறம் என்பது சரியான தருணத்தில் சரியான முடிவை எடுப்பதுடன் முடிந்துவிடுவதில்லை. பிறரை அவர்களுடைய உண்மையான இயல்பில் காண்பதற்கான கவனமும் பயிற்சியும் அதற்கு அவசியம் என்ற கருத்தை அவர் வளர்த்தெடுத்தார். மேரி மிட்ஜ்லி மனிதனை இயற்கையிலிருந்து தனிமைப்படுத்திப் புரிந்துகொள்ளும் போக்கை விமர்சித்தார். மனிதர்களின் உணர்ச்சிகள், சமூக உறவுகள், விலங்குகளுடனான தொடர்புகள் ஆகியவற்றை ஆராய்ந்த அவர், மனித இயல்பின் பன்முகத்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்தார். அன்ஸ்கோம்ப் மனிதச் செயல்களின் நோக்கத்தையும் அறவியல் மொழியின் அடிப்படைகளையும் ஆராய்ந்தார். ஃபுட்டின் கவனம் அறத்தீர்ப்புகளுக்கான காரணங்களிலும் நற்பண்புகளின் இயல்பிலும் நிலைத்திருந்தது. இந்த நால்வரையும் இணைக்கும் முக்கியமான அம்சம், அறவியலை மனித வாழ்க்கையிலிருந்து பிரித்து, வெறும் தீர்மானங்களையும் விதிகளையும் பற்றிய கோட்பாடாகச் சுருக்கிவிடுவதற்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பு தான். மனிதன் எத்தகைய வாழ்க்கையை வாழ்கிறான், பிறருடன் எவ்வாறு உறவுகொள்கிறான், அவனுடைய விருப்பங்களும் செயல்களும் எந்த வகையான குணநலன்களை வெளிப்படுத்துகின்றன என்பன மீண்டும் அறவியல் விவாதங்களின் மையத்திற்கு வந்தன. இவ்வாறு மனிதனின் பண்புநலன்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், அரிஸ்டாட்டிலின் அறவியலைப் புதிய கோணத்தில் அணுகுவதற்கு வழிவகுத்தது.
அரிஸ்டாட்டிலின் நிகோமாக்கிய அறவியல் மனித வாழ்க்கையின் உயர்ந்த நன்மையை ஆராய்வதிலிருந்து தொடங்குகிறது. மனிதர்கள் மேற்கொள்ளும் செயல்களும் தேர்ந்தெடுக்கும் முயற்சிகளும் ஏதோ ஒரு நன்மையை நோக்கியே அமைகின்றன. மருத்துவம் உடல்நலத்தையும் அரசியல் சமூக நலத்தையும் நோக்கமாகக் கொண்டிருக்கலாம். ஆனால் இத்தகைய தனித்தனி நோக்கங்களுக்கு அப்பால், மனித வாழ்க்கையை அதன் முழுமையில் மதிப்பிடுவதற்கான நன்மை ஒன்று இருக்கிறதா என்பதை அரிஸ்டாட்டில் ஆராய்கிறார். அதனை அவர் யூடைமோனியா (Eudaimonia) எனக் குறிப்பிடுகிறார். தற்காலிக இன்பத்தையோ மனநிறைவையோ விட, ஒரு மனித வாழ்க்கை சிறப்பாக அமைந்து நிறைவடைவதையே அது குறிக்கிறது. அத்தகைய வாழ்க்கைக்கு நற்பண்புகள் இன்றியமையாதவை. அரிஸ்டாட்டில் பயன்படுத்தும் அரெட்டே (Arete) என்ற கிரேக்கச் சொல் சிறப்பு அல்லது மேன்மை என்ற பொருளைக் கொண்டது. ஒரு செயலையோ திறனையோ சிறப்பாக நிறைவேற்ற உதவும் பண்பை அது குறிக்கிறது. மனிதனின் நற்பண்புகளும் அவனுடைய வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்வதுடன் தொடர்புடையவை. துணிவு, நீதி, நிதானம், பெருந்தன்மை போன்ற பண்புகள் தனித்தனியான நல்ல செயல்களின் தொகுப்பாக மட்டுமே இருப்பதில்லை. நீண்டகாலப் பழக்கத்தாலும் அனுபவத்தாலும் வளர்க்கப்படும் குணநலன்களாக அவை அமைகின்றன. அச்சத்தை ஒருபோதும் உணராதவன் துணிவுள்ளவனாகிவிடுவதில்லை. எந்தச் சூழலில் அச்சத்தை எதிர்கொள்ள வேண்டும், எந்த ஆபத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுவதில்தான் துணிவு வெளிப்படுகிறது. அதற்கு நடைமுறைப் பகுத்தறிவு (Phronesis) அவசியமாகிறது.
இங்கே அறம் குறித்த பார்வையில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்கிறது. ஒருவன் செய்த குறிப்பிட்ட செயலை மட்டும் மதிப்பிடுவதற்குப் பதிலாக, அந்தச் செயல் எத்தகைய குணநலனிலிருந்து தோன்றுகிறது என்பதும் கவனத்திற்குரியதாகிறது. உதவி தேவைப்படும் ஒருவருக்கு இருவர் பொருளுதவி செய்யலாம். ஒருவன் பிறருடைய பாராட்டைப் பெறுவதற்காக அதைச் செய்திருக்கலாம்; மற்றொருவன் அவருடைய துயரத்தை உணர்ந்து உதவியிருக்கலாம். வெளிப்படையான செயல் ஒன்றாக இருந்தாலும் இருவருடைய மனநிலையும் குணநலனும் வேறுபடுகின்றன. அறத்தைச் செயல்களின் விளைவுகளால் மட்டுமே மதிப்பிடுவதில் உள்ள குறைபாட்டை இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. அதேவேளையில் நற்பண்பு என்பது நல்ல நோக்கம் கொண்டிருப்பது மட்டுமல்ல. பொருத்தமான சூழலில் அதைச் செயலாக வெளிப்படுத்துவதற்கான அறிவும் திறனும் அதற்குத் தேவை.
ஃபுட்டின் Virtues and Vices என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்ற ஆய்வுகள் இந்த மரபுடன் தொடர்புடையவை. குறிப்பாக நற்பண்புகள் மனிதர்களுக்கு ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியை அவர் ஆராய்ந்தார். மனிதர்கள் உடல் வலிமையிலும் அறிவாற்றலிலும் சமூக வாய்ப்புகளிலும் வரம்புகளைக் கொண்டவர்கள். நோய், வறுமை, அச்சம், பிறருடைய வன்முறை, தமது சொந்த விருப்பங்களால் உருவாகும் தடைகள் எனப் பல்வேறு இடர்ப்பாடுகளுக்கு உள்ளாகிறார்கள். இத்தகைய சூழலில் துணிவும் நிதானமும் நீதியும் மனித வாழ்க்கைக்கு அவசியமான பண்புகளாகின்றன. அச்சம் ஏற்படக்கூடிய வாழ்க்கையில்தான் துணிவின் தேவை எழுகிறது. மனிதர்களுக்கிடையே நலன்கள் மோதக்கூடிய சூழலில்தான் நீதியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. உடனடியான விருப்பங்கள் நீண்டகால நன்மைக்கு எதிராக அமையக்கூடியதால்தான் நிதானம் தேவையாகிறது. நற்பண்புகளின் மதிப்பை மனித வாழ்க்கையின் இத்தகைய இயல்புகளுடன் இணைத்துப் புரிந்துகொள்ள ஃபுட் முயன்றார்.

அரிஸ்டாட்டிலிடமிருந்து பெறப்பட்ட இந்தச் சிந்தனை, பண்டைய கிரேக்க அறவியலை அப்படியே மீட்டெடுக்கும் முயற்சியாக அமையவில்லை. அரிஸ்டாட்டிலின் காலத்திற்கும் நவீன உலகிற்கும் இடையில் அரசியல், சமூக, அறிவியல் தளங்களில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அவரது சிந்தனையில் காணப்படும் சில சமூகப் படிநிலைகளையும் மனிதர்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய கருத்துகளையும் நவீன அறவியல் ஏற்றுக்கொள்ள இயலாது. மேலும் மனிதனுக்கு இயற்கையாக அமைந்த ஒரு குறிப்பிட்ட நோக்கம் இருக்கிறது என்ற விளக்கம், பரிணாம உயிரியல் வளர்ச்சியடைந்த பின்னர் புதிய சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஆகவே மனித இயல்பிற்கும் நன்மைக்கும் இடையிலான தொடர்பை மீண்டும் நிறுவ வேண்டுமானால், பண்டைய தத்துவத்தின் கருத்துகளைத் திரும்பச் சொல்வதைக் காட்டிலும் அவற்றின் அடிப்படைகளைப் புதிதாக ஆராய வேண்டியிருந்தது.
இந்தச் சிக்கல்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த காலத்திலேயே மனிதச் செயல்களை மதிப்பிடுவதில் நோக்கத்திற்கும் விளைவிற்கும் இடையிலான உறவு ஃபுட்டின் கவனத்தை ஈர்த்தது. 1967ஆம் ஆண்டு வெளியான The Problem of Abortion and the Doctrine of the Double Effect என்ற கட்டுரையில், கருக்கலைப்பு உள்ளிட்ட அறச்சிக்கல்களை ஆராயும்போது ஒரு செயலை வேண்டுமென்றே நிகழ்த்துவதற்கும், வேறொரு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் செயலின் விளைவாக அது நிகழ்வதை அறிந்திருப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை அவர் விசாரித்தார். அந்த ஆய்வில் இடம்பெற்ற தத்துவ விவாதத்தில் புகழ்பெற்ற தொடர்வண்டி எடுத்துக்காட்டு ( The trolley problem) பின்னாளில் அறவியல் விவாதங்களில் பெரும் செல்வாக்கைப் பெற்றது. கட்டுப்பாட்டை இழந்து ஓடும் தொடர்வண்டி, தண்டவாளத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் ஐவரை நோக்கிச் செல்கிறது. அதை வேறொரு பாதைக்குத் திருப்பினால் ஐவரைக் காப்பாற்ற முடியும்; ஆனால் அந்தப் பாதையில் இருக்கும் ஒருவர் உயிரிழப்பார். இத்தகைய சூழலில் ஒருவருடைய உயிரிழப்பை அறிந்திருந்தும் தொடர்வண்டியைத் திருப்புவது நியாயமானதா? இந்த எடுத்துக்காட்டின் முக்கியத்துவம் ஐந்து உயிர்களையும் ஓர் உயிரையும் ஒப்பிட்டுக் கணக்கிடுவதில் மட்டும் இல்லை. பிறருக்கு ஏற்படும் தீங்கைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் செயலுக்கும், ஒருவருக்குத் தீங்கு விளைவிப்பதையே நோக்கமாகக் கொண்ட செயலுக்கும் இடையிலான அறவேறுபாட்டை ஆராய்வதில் இருந்தது. ஃபுட் எழுப்பிய இந்தச் சிக்கலைப் பின்னர் ஜூடித் ஜார்விஸ் தாம்சன் விரிவுபடுத்தினார். பாலத்திலிருந்து ஒருவரைத் தள்ளித் தொடர்வண்டியை நிறுத்தும் புகழ்பெற்ற மாற்று எடுத்துக்காட்டு தாம்சனின் பங்களிப்பாகும். இவ்விரு நிகழ்வுகளுக்கும் மனிதர்கள் வழங்கும் மாறுபட்ட அறத்தீர்ப்புகள், செயலின் விளைவுகளை மட்டுமே கொண்டு அதன் நியாயத்தைத் தீர்மானிப்பதில் உள்ள சிக்கலை வெளிப்படுத்தின.
நற்பண்புகள் பற்றிய ஃபுட்டின் ஆய்வுகளுக்கும் இத்தகைய அறச்சிக்கல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கிறது. மனிதனின் நல்ல நோக்கமும் செயல் விளைவுகளும் எப்போதும் ஒன்றுக்கொன்று இசைவாக அமைவதில்லை. சில சூழல்களில் தவிர்க்க முடியாத தீங்குகளுக்கிடையே தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. அத்தகைய தேர்வுகளை மதிப்பிடுவதற்கு நடைமுறைப் பகுத்தறிவும் மனித நன்மையைப் பற்றிய தெளிவும் தேவைப்படுகின்றன. அறத்தின் அடிப்படையில் சிறந்த செயல் எது என்பதைத் தீர்மானிப்பது, ஒரே விதியை எல்லாச் சூழல்களிலும் பயன்படுத்துவதைக் காட்டிலும் சிக்கலானதாக அமைகிறது.
ஃபுட்டின் பிற்காலச் சிந்தனையில் மனிதர்களின் நன்மையை அவர்களுடைய விருப்பங்களின் நிறைவேற்றமாக மட்டுமே கருத முடியாது என்ற நிலை மேலும் வலுப்பெற்றது. ஒருவர் விரும்பும் எல்லாச் செயல்களும் அவருடைய வாழ்க்கைக்கு நன்மை பயப்பதில்லை. அதேபோல துன்பத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும் செயல்கள் அனைத்தும் தீமையானவையாகிவிடுவதில்லை. பிறரைக் காப்பாற்றுவதற்காக ஆபத்தை எதிர்கொள்பவன், அநீதிக்கு உடன்பட மறுப்பதால் துன்புறுபவன், தன்னுடைய நலனைவிட நீதிக்கு முக்கியத்துவம் அளிப்பவன் ஆகியோரின் செயல்களை உடனடிப் பயன்களின் அடிப்படையில் மட்டும் விளக்க இயலாது. மனித வாழ்க்கையின் நன்மை என்ற கருத்து
இத்தகைய செயல்களையும் உள்ளடக்கும் அளவுக்கு விரிவானதாக இருக்க வேண்டும்.
எனினும் நற்பண்புகளுக்கும் மனித நன்மைக்கும் இடையிலான தொடர்பு எப்போதும் எளிமையானதாக அமைவதில்லை. நேர்மையாக நடந்துகொள்பவன் தனது வாழ்க்கையில் தோல்வியடையலாம். நீதிக்காகப் போராடுபவன் சமூகத்தால் ஒதுக்கப்படலாம். கொடுமைக்கு உடன்பட மறுப்பவன் உயிரையே இழக்கலாம். இத்தகைய சூழலில் நற்பண்புகள் மனிதனைச் சிறந்த வாழ்க்கைக்கு இட்டுச்செல்கின்றன என்று எவ்வாறு கூறுவது? அறத்தின் அடிப்படையில் நல்ல மனிதனாக இருப்பதற்கும் உலகியல் நலன்களை அடைவதற்கும் இடையே உறுதியான தொடர்பு இருக்க வேண்டுமா? அரிஸ்டாட்டிலின் மரபிலிருந்து வளர்ந்த நவீன நற்பண்பு அறவியல் எதிர்கொள்ள வேண்டிய முக்கியமான சிக்கல்களில் இதுவும் ஒன்று. மனிதனின் நற்பண்புகளை அவனுடைய இயல்புடன் இணைத்து விளக்குவதிலும் மற்றொரு சிக்கல் இருக்கிறது. மனிதர்கள் இயற்கையிலேயே சமூக வாழ்க்கையைச் சார்ந்தவர்கள் என்பதால் சமூகத்தில் நிலவும் எல்லா நடைமுறைகளும் நல்லவையாகிவிடுவதில்லை. வரலாற்றில் அடிமைமுறை, பெண்களின் உரிமை மறுப்பு, இனப்பாகுபாடு போன்றவை சமூகத்தின் இயல்பான ஒழுங்குகளாக நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றன. மனித இயல்பைப் பற்றிய விளக்கத்திலிருந்து அறநெறியை உருவாக்கும்போது, வரலாற்றில் நிலவிய பழக்கவழக்கங்களை இயற்கையின் பெயரால் நியாயப்படுத்திவிடும் அபாயம் இருக்கிறது. மூர் எழுப்பிய இயற்கைவாதம் குறித்த எதிர்ப்பும் இங்கே மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையில் காணப்படும் பண்புகளிலிருந்து நன்மையை எவ்வாறு வேறுபடுத்துவது என்பதற்கான துல்லியமான விளக்கம் தேவைப்படுகிறது.
இந்தப் பிரச்சினைகளை எதிர்கொண்டபடியே ஃபுட்டின் சிந்தனை வளர்ந்தது. மனித வாழ்க்கையில் நற்பண்புகளின் இடத்தை ஆராய்ந்த அவரது தொடக்ககால முயற்சிகள், பின்னர் Natural Goodness நூலில் விரிவான அறவியல் கோட்பாடாக உருவெடுத்தன. உயிரினங்களின் வாழ்க்கை முறைகளையும் அவற்றின் சிறப்பான வளர்ச்சிக்குத் தேவையான பண்புகளையும் அடிப்படையாகக் கொண்டு நன்மையை விளக்க முடியுமா என்பதை அந்நூலில் அவர் ஆராய்ந்தார். தாவரங்களின் வேர்களுக்கும் விலங்குகளின் இயல்பான திறன்களுக்கும் நன்மை, குறைபாடு என்ற மதிப்பீடுகளை வழங்கும் முறையிலிருந்து மனித நற்பண்புகளைப் புரிந்துகொள்வதற்கான வழியை அவர் தேடினார். மனித வாழ்க்கையின் நன்மையைப் பற்றிய அவரது நீண்டகால விசாரணை இவ்வாறு புதிய தத்துவ அடிப்படையை அடைந்தது.
மனித இயல்பும் அறத்தின் எல்லைகளும்:
2001ஆம் ஆண்டு வெளிவந்த Natural Goodness நூலை ஃபுட்டின் நெடுங்காலத் தத்துவத் தேடலின் முதிர்ந்த வடிவமாகக் கருதலாம். அறத்தீர்ப்புகளின் பொருளைப் பற்றிய விசாரணையில் தொடங்கிய அவரது சிந்தனை, மனித வாழ்க்கையின் இயல்பிலிருந்தே நன்மைக்கான அடிப்படைகளைக் கண்டறியும் முயற்சியாக வளர்ந்திருந்தது. தாவரங்களும் விலங்குகளும் வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் அவற்றுக்கே உரிய திறன்களைப் பெற்றிருக்கின்றன. ஒரு மரத்தின் வேர்கள் நிலத்திலிருந்து ஊட்டத்தைப் பெறுவதும், ஒரு பறவையின் சிறகுகள் அதன் வாழ்க்கைக்குத் தேவையான செயல்களை நிறைவேற்றுவதும் உயிரினங்களின் இயல்பான வளர்ச்சியுடன் தொடர்புடையவை. இத்தகைய திறன்களில் குறைபாடு ஏற்படும்போது அவற்றை வெறும் வேறுபாடுகளாக மட்டும் நாம் கருதுவதில்லை. அந்த உயிரினத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு நன்மை, குறைபாடு ஆகிய மதிப்பீடுகளை வழங்குகிறோம். உயிரினங்களின் இயல்பைப் பற்றிய இத்தகைய மதிப்பீடுகளுக்கும் மனித நற்பண்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஃபுட் ஆராய்ந்தார். மனிதனின் வாழ்க்கை மற்ற உயிரினங்களிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறது. மொழி, பகுத்தறிவு, சமூக உறவுகள், மரபுகள், தனிமனிதத் தேர்வுகள் ஆகியவை அவனுடைய வாழ்வை வடிவமைக்கின்றன. பிற உயிரினங்களின் திறன்களை மதிப்பிடுவதைப் போலவே மனிதனின் அறப்பண்புகளையும் எளிதில் மதிப்பிட முடியாது. மனிதன் தனது விருப்பங்களை ஆராயவும் செயல்களுக்கான காரணங்களைச் சீர்தூக்கவும் பிறருடைய நலனை உணர்ந்து முடிவெடுக்கவும் கூடியவன். ஃபுட்டைப் பொறுத்தவரை நடைமுறைப் பகுத்தறிவின் சிறப்பும் மனித நன்மையின் ஒரு பகுதியாகிறது. நீதியும் நேர்மையும் பிறரிடம் காட்டும் அக்கறையும் மனித வாழ்க்கைக்கு வெளியிலிருந்து விதிக்கப்படும் கட்டளைகளாக இல்லாமல், மனிதர்களின் செயல்களையும் உறவுகளையும் சிறப்பாக அமைப்பதற்குத் தேவையான நற்பண்புகளாகப் புரிந்துகொள்ளப்படுகின்றன.
இந்த விளக்கம் தத்துவ உலகில் புதிய விவாதங்களை உருவாக்கியது. மனித இயல்பைப் பற்றிய உண்மைகளிலிருந்து அறநெறிக்கான முடிவுகளை எவ்வாறு பெறுவது என்ற பழைய சிக்கல் மீண்டும் எழுந்தது. மனித வாழ்க்கையின் நன்மையைப் பொதுவான சில பண்புகளின் அடிப்படையில் வரையறுக்கும்போது, மனிதர்களுக்கிடையிலான வேறுபாடுகளுக்கு எந்த அளவுக்கு இடமளிக்க முடியும் என்பதும் முக்கியமான கேள்வியாகிறது. உடல்திறன், அறிவாற்றல், சமூகச் சூழல், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றில் மனிதர்கள் பெரிதும் வேறுபடுகின்றனர். இந்த வேறுபாடுகளை மனித மேன்மைக்கும் குறைபாட்டிற்குமான எளிய அளவுகோல்களாக மாற்றிவிடும் அபாயத்தை அற இயற்கைவாதம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஃபுட்டின் கோட்பாட்டின் வலிமை மனித வாழ்க்கைக்கும் அறத்திற்கும் இடையிலான தொடர்பை விளக்குவதில் இருக்கிறது என்றால், அதன் சிக்கல் வாழ்க்கையின் பன்முகத்தன்மையை எவ்வாறு உள்ளடக்குவது என்பதில் இருக்கிறது.

ஃபுட்டின் சிந்தனைகளைத் தொடர்ந்து ரோசலிண்ட் ஹர்ஸ்ட்ஹவுஸ், மைக்கேல் தாம்சன், ஜான் மெக்டவல் போன்ற தத்துவவாதிகள் நற்பண்பு, இயற்கை, பகுத்தறிவு ஆகியவற்றின் தொடர்புகளை வெவ்வேறு திசைகளில் ஆராய்ந்தனர். குறிப்பாக மைக்கேல் தாம்சனின் உயிரின வாழ்க்கை பற்றிய ஆய்வுகள் ஃபுட்டின் பிற்காலச் சிந்தனையுடன் நெருங்கிய தொடர்புடையவை. நவீன அறவியலில் நற்பண்புகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைத்ததற்கான முழுப் பெருமையையும் ஃபுட்டுக்கு மட்டும் வழங்க முடியாது. அன்ஸ்கோம்ப், மெக்இன்டயர், ஹர்ஸ்ட்ஹவுஸ் உள்ளிட்ட பலருடைய பங்களிப்புகளால் இந்த மரபு வளர்ச்சியடைந்தது. எனினும் அறத்தீர்ப்புகளின் புறவயமான அடிப்படையைப் பாதுகாக்க முயன்றதிலும், மனித நன்மையை நடைமுறைப் பகுத்தறிவுடன் இணைத்து ஆராய்ந்ததிலும் ஃபுட்டின் பங்களிப்பு தனித்துவமானது.
அவருடைய தத்துவப் பயணத்தைத் தொடக்கத்திலிருந்து கவனிக்கும்போது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி தென்படுகிறது. நாஜிகளின் கொடுமைகள் பற்றிய செய்திகள் அறத்தின் அடிப்படையைக் குறித்து அவருக்குள் எழுப்பிய ஐயங்கள், பிற்காலத்தில் மனித நன்மையின் இயல்பைப் பற்றிய விரிவான விசாரணையாக வளர்ந்தன. அறிவாற்றலும் தொழில்நுட்ப முன்னேற்றமும் உயர்ந்திருந்த ஒரு சமூகத்திலேயே மனிதர்களுக்கு எதிரான கொடுமைகள் நிகழ்ந்தன என்ற வரலாற்று உண்மை இன்றும் முக்கியமானது. அறிவின் வளர்ச்சி மட்டுமே அறத்தின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில்லை. மனிதர்கள் தங்களுடைய செயல்களுக்கான காரணங்களை உருவாக்கிக்கொள்ளும் திறன் பெற்றவர்கள்; அந்தக் காரணங்களின் நியாயத்தையும் ஆராய வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.

அறம் குறித்த எல்லாச் சிக்கல்களுக்கும் ஃபுட் இறுதியான விடைகளைக் கண்டறிந்துவிட்டதாகக் கூற முடியாது. அவரது வாதங்கள் இன்றும் விமர்சிக்கப்படுகின்றன; அவற்றிலிருந்து புதிய கேள்விகளும் உருவாகின்றன. ஆனால் மனிதர்களின் விருப்பங்களுக்கும் சமூக ஒப்புதல்களுக்கும் அப்பால் அறத்தீர்ப்புகளுக்கான காரணங்களைத் தேடுவதில் அவர் காட்டிய உறுதி முக்கியமானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிஸ்டாட்டிலின் அறவியலை நவீன பகுப்பாய்வுத் தத்துவத்தின் விவாதங்களுக்குள் கொண்டுவந்ததன் மூலம் மனிதனின் நற்பண்புகளைப் பற்றிய பழைய விசாரணைக்குப் புதிய பொருளை வழங்கினார். மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்ற கேள்வி, அவன் எதை விரும்புகிறான் என்பதோடு முடிவடைவதில்லை, அவனுடைய விருப்பங்களும் செயல்களும் எந்தக் காரணங்களால் நியாயப்படுத்தப்படுகின்றன என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது. அறத்தின் வேர்களை மனித வாழ்க்கையிலேயே தேடிய ஃபுட்டின் தத்துவம், அந்த விசாரணையின் முக்கியமான அத்தியாயமாக இன்றும் நிலைத்திருக்கிறது.
*
ஆதாரங்கள் / மேற்கோள்கள்:
- John Hacker-Wright — “Philippa Foot,” Stanford Encyclopedia of Philosophy.
- “Philippa Foot,” Philosophy Now, Issue 41.
- Philippa Foot — “Moral Arguments,” Mind, 1958.
- Philippa Foot — “Moral Beliefs” (1959)
*
விவேக் சுப்ரமணியன்: எழுத்தாளர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியல் சிறுகதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். அமெரிக்காவின் Spillwords தளத்தில் இவரின் நான்கு கதைகள் பிரசுரமாகியுள்ளன. தற்போது அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.
*
