அன்னையர்களுடன்… -ஜெயராம்

Art Show: One mother Many Mother Tongues

உலகப் புகழ்பெற்ற ஓவியமான ‘The Birth of Venus’-ஐ வரைந்த இத்தாலிய ஓவியரான சான்த்ரோ பொத்திசெல்லியின் (Santro Botticelli) ‘மடோனாவும் குழந்தையும்’(Madonna & Child) ஓவியம் பெங்களூரில் காட்சிக்கு வைக்கப்படுகிறது என்ற செய்தி தான் முதலில் என் கவனத்திற்கு வந்தது. நான் சென்னை ஓவியக் கல்லூரியின் பின்னணியில் இருந்து வந்தவன் என்பதால் மறுமலர்ச்சி கால கலைஞர்களின் மீது தனிப்பற்று உண்டு. பொத்திசெல்லியின் இந்த ஓவியம் ஒரு கலைக்காட்சியின் ஒரு முக்கியமான பகுதியாக காட்சிக்கு வைக்கப்படுகிறது என்ற தகவலை கவனித்தேன். அந்த கலைக்காட்சியின் பெயர் ‘One Mother, Many Mother Tongues’. இந்திய மற்றும் இத்தாலியில் இருந்து வரலாற்றின் துவக்க காலம் முதல் கிடைத்த அரிதான 26 தாய் உருவங்களின் கலைக்காட்சி இது. ஒப்புநோக்க 15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் வரையப்பட்ட பொத்திசெல்லியின் ‘மடோனா & குழந்தை’ ஓவியம் தான் அங்கு வைக்கப்பட்டிருந்ததிலேயே பிற்காலத்தைய ஓவியம். படைப்புகளை இந்திய மற்றும் இத்தாலியின் முக்கிய அருங்காட்சியகங்களில் இருந்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்திய அரசின் கலை மற்றும் பண்பாட்டுத் துறையும், இத்தாலியத் தூதரகமும் இணைந்து நடத்திய இக்கலைக்காட்சி ஏற்கெனவே டெல்லியில் உள்ள ஹுமாயூன் சமாதி அருங்காட்சியகத்தில் (Humayun’s Tomb Museum) நடந்த பிறகு பெங்களூரில் உள்ள தேசிய நவீன கலை கூடத்திற்கு சென்ற ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர் 26 வரை காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்திய கலைத்துறையில் உள்ள சிறந்த அறிஞர்களில் ஒருவரான நமன் அகுஜாவும் (Nama Ahuja), இத்தாலிய கலைஞர்/பண்பாட்டாளர் மற்றும் புதுதில்லி இத்தாலிய தூதரக பண்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் இருக்கும் ஆண்ட்ரியா அனாஸ்டாசியோவும் (Andrea Anastasio) ஆகிய இரண்டு பேரும் இந்த கலை காட்சியின் தெரிவாளர்கள் (curators). இந்திய மற்றும் இத்தாலிய தாய் உருவ படைப்புகளின் உரையாடலாக இந்த கலைக்காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது.

நான் பெங்களூருக்கு செல்ல திட்டமிட்டபோது அது கலைக்காட்சியின் கடைசி வாரம். மேலும் சரியாக அந்த வார இறுதியில் weekend support தேவை என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டார்கள். அதனால் கலை கூடத்திற்கு சுமார் 2 கி.மீ. சுற்றளவிற்குள் கிடைத்த ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கிவிட்டு செப்டம்பர் 20 அன்று ஞாயிற்றுக்கிழமை மதிய இடைவெளியில் கொஞ்சம் நேரம் கிடைத்த போது கலைக்காட்சி பார்க்க சென்றேன். உண்மையில் கலைக்காட்சியை பார்க்க நேரம் கிடைக்குமா? என்ற சந்தேகம் கடைசி வரை இருந்ததால் பெங்களூரில் உள்ள நண்பர்கள் மற்றும் என் வழக்கமான பயண நண்பர்கள் யாரிடமும் இந்த பயணத்தை பற்றி தெரிவிக்கவில்லை. கிடைத்த அந்த சிறிய இடைவேளை நேரத்தில் பார்த்துவிட வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால் கலைக்காட்சியின் ஒவ்வொரு படைப்பையும் தவற விடக்கூடாது என்ற பதற்றமும் வேகமும் என்னிடம் இருந்தது. அது படைப்புகளை, படைப்புகள் பற்றி எழுதிப் பதித்திருந்த எழுத்துகளை புகைப்படம் எடுக்கும் போது அங்கிருந்த பார்வையாளர்களை விலகச் சொல்வது, பிடித்த சில படைப்புகளை மிக அருகில் சென்று பார்க்கப் போக… நான் படைப்பை தொடப் போகிறேன் என்று அங்கிருந்த பாதுகாவலர் பதற்றமடைய ஓடி வந்தது… என கொஞ்ச நேரம் அங்கே ஒரு போர்ச்சூழல் நிலவியது என்பதை இப்போது நினைத்து புன்னகைக்கிறேன்.

curators: நமன் அகுஜா, ஆண்ட்ரியா அனாஸ்டாசியோ

ஒரு நீளமான வண்ண போர்டில் அந்த கலைக்காட்சி பற்றி விரிவாக குறிப்புகள் எழுதியிருந்ததை பார்வையாளர்கள் ஒரு சிறு கூட்டமாக சுற்றி நின்று வாசித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் விலக கேட்டு கொண்ட பிறகு எனக்கு தேவையான புகைப்படங்களை எடுத்து கொண்டேன். புகைப்படம் எடுத்துவிட்டு திரும்பும் போது நான் இருந்த பதற்றநிலையை பார்த்து அங்கே நின்றுகொண்டிருந்த ஒரு பெண் சிரித்து விட்டாள். நான் அந்த சங்கடத்தை மறைக்க அரைகுறையாக பதிலுக்கு புன்னகைத்துவிட்டு நழுவி விட்டேன். அவளை என் அலுவலகத்தில் நான் வேலை செய்யும் project-ல் ஒரு வாரம் வேலை செய்ய வைக்க வேண்டும், பிறகு இப்படி மற்றவர்களை பார்த்து சிரிக்க நேரமிருக்காது என்று நினைத்து கொண்டேன். ஒருவிதத்தில் நேரமின்மை என்பது படைப்புகளை மேலும் கூர்ந்து பார்க்க தூண்டியதோ? என்று இப்போது தோன்றுகிறது.

கலைப்படைப்புகள் யாவும் இந்திய  கட்டிடக்கலையில் உள்ள கஜபிருஷ்ட விமானத்தின் அரை வட்டவடிவில் வரிசைப்படுத்தி காட்சிபடுத்தியிருந்தார்கள். இந்த வடிவம் இத்தாலியின் பெசிலிகா கட்டட வடிவமைப்பையும் ஞாபகப்படுத்தும் வட்டவடிவத்தை கொண்டிருந்ததால் இந்த வடிவத்தை வேண்டுமென்றே தேர்ந்தெடுத்திருந்தார்கள். ஒட்டுமொத்தமாக இந்த கலைக்காட்சி அன்னை என்ற படிமத்தின் வெவ்வேறு பரிணாமங்களை காட்டுவதாக வடிவமைத்திருந்தார்கள். முதலில் கூடத்தின் நடுவில் சிறிய சிற்பங்களின் வரிசையில் வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஹரப்பா காலத்து சிறிய சுடுமண் சிற்பமான குழந்தையை கையில் வைத்திருக்கும் தாய் சிற்பத்துடன் இந்த கலைக்காட்சி துவங்கியது. பொ.மு. 2500 வருடம் பழக்கமுள்ள இந்த சிற்பம் தான் இந்த கலைக்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பழைமை வாய்ந்த சிற்பம். ஹரப்பா சிற்பத்தின் முக்கியத்துவம் தெரிந்தாலும் அதை ஏற்கெனவே டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் பார்த்திருக்கிறேன். அதனால் நான் நேராக பொத்திசெல்லியின் மடோனா(மேரி) & குழந்தை ஓவியத்தை சென்று பார்த்தேன். பொத்திசெல்லியின் ஓவியத்தை நேரில் பார்ப்பது என்பது தினந்தோறும் டிவியில் பார்க்கும் ஒரு நட்சத்திரத்தை ஒரு நாள் நேரில் பார்க்க கிடைத்த வாய்ப்பு போன்றது எனக்கு. இந்தியாவின் முக்கியமான கலை கூடங்களில் எழுபது சதவீதத்திற்கும் மேல் பார்த்திருக்கிறேன். அதே போல் ஜெர்மனி போன்ற ஐரோப்பா நாடு ஒன்றில் ஒரிரு வருடம் தங்கி (அல்லது வேலை பார்த்து கொண்டு) ஐரோப்பாவின் முக்கிய கலை கூடங்கள் யாவற்றிலும் உள்ள படைப்புகள் அனைத்தையும் பார்த்து விட வேண்டும் என்ற என் கனவு நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஆனால் இப்போதைக்கு இந்த சந்தர்ப்பத்தை விட்டால் இத்தாலியில் தான் சென்று பார்க்க வேண்டும் என்பதால் நன்றாக பொத்திசெல்லி ஓவியத்தின் எல்லா நுணுக்கங்களையும் பார்த்து உள்வாங்கி கொண்டேன். 

மடோனாவும் குழந்தையும் (Madonna & Child, Santro Bottecelli):

Madonna & Child, Santro Bottecelli

இந்த ஓவியம் பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் (பொ.யு. 1490) மரப்பலகை மீது டெம்பரா வண்ணங்கள் பயன்படுத்தி வரையப்பட்டது. பொத்திசெல்லி இந்த ஓவியத்தை வரைந்த மறுமலர்ச்சி காலத்திற்கு முன்பே கன்னிமேரியையும், குழந்தை ஏசுவையும் சித்தரிக்கும் இந்த படிமம் கிறித்தவத்தில் நிலை கொண்டுவிட்டது. மறுமலர்ச்சி காலத்தில் இந்த படிமத்திற்கு மேலும் மனிததன்மை ஏற்றப்பட்டது.

இந்த ஓவியத்தில் மேரியின் முகத்தில் ஒருவித துயர் குடிகொண்டுள்ளது. குழந்தை ஏசு, மேரியின் கைகளில் இருந்தாலும் வேறெங்கோ தூரத்தில் திரும்பி பார்த்து கொண்டிருக்கும் படி உள்ளது. குழந்தை ஏசு தான் வருங்காலத்தில் சுமக்க போகும் துயரையும், தியாகத்தையும் எதிர்நோக்கி இருக்க அதை உணர்ந்து அந்த தியாகத்தின் பொருட்டு குழந்தை ஏசுவை உலக நன்மைக்காக கைகளை விலக்கி தன்னில் இருந்து விடுவிக்கும் வகையில் மேரி உள்ளார். மேரி குழந்தை ஏசுவை பார்த்தபடி முகத்தில் சிறு துயரை கொண்டுள்ளார். குழந்தை ஏசுவின் முகத்தில் அமைதியான வெளிப்பாடும் உள்ளது. குழந்தைகள் தான் செய்யப்போகும் காரியங்களின் பக்கவிளைவுகள் பற்றி பெரிதாக அலட்டி கொள்ளாமல் இருக்க, தாய்மார்கள் மட்டும் அதை நினைத்து பதற்றத்துடன் இருப்பது வழக்கம் தான்.

மேரி ஆழ்ந்த கடும்பச்சை நிற மேலங்கியை, செழுமையான சிவப்பு நிற ஆடைக்கு மேல் அணிந்துள்ளார். சிவப்பு நிறம் ஏசு சிந்திய ரத்தத்தை அல்லது தியாகத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. உண்மையில் இந்த பச்சை நிற மேலங்கி இந்த ஓவியம் வரைந்த காலத்தில் நீல நிறமாக இருந்திருக்க வேண்டும். அக்காலத்தைய பல ஓவியங்களில் நீல நிறத்திற்கு பயன்படுத்தப்பட்ட நிறமிகள் காலமாற்றத்தால் பச்சையாக மாறுவது வழக்கம் தான். இந்த மேலங்கியின் வலது பக்கம் மேரியின் தோளுக்கு அருகில் ஒரு நட்சத்திரம் வரையப்பட்டுள்ளது தெரிகிறது. அருகில் ஒரு சிறிய நட்சத்திரம் போன்ற ஒரு அடையாளமும் உள்ளது. இந்த அங்கியை அதன் உண்மையான நீல நிறத்தில் நட்சத்திரங்களுடன் மேரி அணிந்திருப்பதை மனதில் ஓட்டி பார்த்தால் மேரி வானுலகையே அங்கியாக அணிந்துள்ளது போன்ற தோற்றத்தை ஞாபகப்படுத்தியிருக்கும். இவ்வுலகில் செய்யப்படும் தியாகத்தின் அடையாளமான சிவப்பு நிறம் ஆடையாக இருக்க அதன் மேல் வானுலகின் நீலநிறம் அங்கியாக இருக்கிறது. இவ்வுலகில் செய்யப்படும் தியாகத்திற்கு வானுலகில் மதிப்பு அளிக்கப்படும் என்று மறைமுகமாக சொல்கிறதா?

அங்கியின் மேல் சாம்பல் நிற முக்காடு மேரியின் முகத்தை சுற்றி உள்ளது. அதன் மேல் மிக மெல்லிய ஒளி ஊடுருவும் படியான பட்டு துணியும் உள்ளது. குழந்தை இயேசு நிர்வாணமாக சித்தரிக்கப்பட்டுள்ளார்; இது பல மறுமலர்ச்சிக் கால ஓவியங்களில் காணப்படும் ஒரு மரபாகும். இது ஏசுவின் மனிதத்தன்மையையும் தூய்மையையும் குறிக்கிறது. மேரியின் உடை, அவர் குழந்தையை கையில் ஏந்தி கொண்டு நிற்கும் கட்டட அமைப்பின் பாணி எல்லாம் 15-ஆம் நூற்றாண்டின் இத்தாலிய பாணியிலேயே உள்ளது. மேரிக்கு நேர் பின்னால் இரு பளிங்கு சுவர்கள் ஒன்றிற்கு பின் ஒன்றாக அமைந்துள்ளது. அதற்கும் பின்னால் மரச்சட்டகமும், கண்ணாடியும் உள்ள ஜன்னல் உள்ளது. இருபுறமும் பேய் உருவங்கள் (gargoyle) கொண்ட வடிவமைப்புடன் கூடிய மரச்சட்டகம் சரியாக மேரிக்கு பின்னால் இருக்க  அந்த மரச்சட்டத்திற்கு வலது மற்றும் இடது புறங்களில் கண்ணாடிகள் வழி வெளியில் உள்ள நிலக்காட்சி தெரிகிறது. கோட்டை, அரண்மனை அமைப்புடன் கூடிய நகரம், சிறு குன்றின் மேல் கட்டடங்கள், ஆறு, மலை போன்றவை அந்த நிலக்காட்சியில் தெரிகிறது. (பார்வையாளருக்கு) வலதுபுற கண்ணாடியின் நிலப்பகுதியில் ஆற்றை கடக்க ஒரு மரப்பாலம், அக்கரையில் மூன்று மனிதர்களும் சிறிதாக காட்டப்பட்டுள்ளனர். இரு கண்ணாடி வழி தெரியும் நிலப்பகுதிகள் இரண்டு புறமும் இருக்க மேரியும் குழந்தையும் நடுநாயகமாக நிற்கின்றனர்.

குழந்தை கிறிஸ்துவின் தலையைச் சுற்றி தங்க நிறத்தில் வடிவமைப்புகளுடன் கூடிய ஒளிவட்டம் இருக்கிறது. மேரியின் தலையைச் சுற்றி உள்ள ஒளிவட்டம், கிறித்துவின் ஒளிவட்டம் போல வடிவமைப்புகளுடன் கூடியதாக இல்லாமல் ஒற்றை கோடாக உள்ளது. இந்த ஒளிவட்டங்கள் சில இடங்களில் அழிந்துள்ளதையும் பார்க்க முடிந்தது. மேரி அணிந்திருக்கும் அங்கியின் ஓரங்களில் தங்க நிற சரிகை வரையப்பட்டிருந்தது கொஞ்சம் அழிந்தும் பக்தியும் காணப்பட்டது. குழந்தை ஏசுவின் கைகள் தாய் மேரியின் முலையை பற்றியிருப்பதை போன்றே பொத்திசெல்லி வரைந்திருந்தார். ஆனால் பிற்காலத்தில் ஒழுக்கவியல் நோக்கத்தில் முலை மறைக்கப்பட்டது.

இந்த ஓவியம் ஒட்டுமொத்தமாக ஒரு மென்மை உணர்வை அளிக்கிறது. அதற்கு மேரி மற்றும் குழந்தை ஏசுவின் உடல்மொழி மற்றும் முக அமைதி மட்டுமல்லாமல் பொத்திசெல்லி பயன்படுத்தியிருக்கும் சுமோட்டோ உத்தியும் காரணம். நிறங்கள் துண்டு துண்டாக தெரியாமல் ஒன்றுடன் ஒன்று இயைந்து மென்மையான, ஒரு புகைமூட்டமான நிறப்பரப்பை இந்த சுமோட்டோ உத்தி ஓவியத்துக்கு அளிக்கிறது.

சாமுண்டி:

சாமுண்டி

பொத்திசெல்லியின் மடோனாவுக்கு நேர் எதிர்புறம் இந்தியாவின் வங்காள பகுதியை சேர்ந்த 12-ம் நூற்றாண்டு சாமுண்டி சிற்பம் வைக்கப்பட்டிருந்தது. சப்தமாதர்களில் மிக கொடூரமான பயமுறுத்தும் தோற்றம் கொண்ட பெண் தெய்வம் சாமுண்டி. விலா எலும்புகள் தெரியும் அளவிற்கு உடல் வற்றியவள். ஆனால் ஆக்ரோஷமும், கோபமும், வீரமும் நிறைந்தவள். பத்து கைகள் கொண்ட கருப்பு கல்லில் வடித்து சிற்பம். கையில் ஆயுதங்களுடன் வெட்டப்பட்ட தலையும் இருந்தது. வெட்டப்பட்ட தலைகளை மாலையாக கழுத்திலும் அணிந்திருந்தாள். அவள் பின்னால் இருந்த மரத்திலும் வெட்டப்பட்ட தலைகள் தொங்கி கொண்டிருந்தன. யானையை கொன்று அதன் தோலை விரித்து பின்னால் போர்த்தியிருந்தாள். இந்த கொடூரங்களை எல்லாம் மென்மையான தாமரை மலரை குறிக்கும் பத்ம பீடத்தில் இருந்து தான் செய்கிறாள் என்பது குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த பத்ம பீடம், கீழே படுத்திருக்கும் ஒருவன் மேல் அழுத்தி அமர்ந்திருக்கிறது. எடையேறிய மென்மையின் அழுத்தத்துடன் அதற்கு மேல் இருக்கும் கொலைபுரியும் சாமுண்டியின் அழுத்தமும் அவன் மேல் உள்ளது. எல்லாவற்றிற்கும் கீழே பீடத்தில் பூத கணங்கள், சடலங்களை தின்று கொண்டிருக்கும் கழுகு, நரிகள் மற்றும் விலங்குகள் எல்லாம் இருந்தன.

இந்தளவிற்கு பயங்கரமான சாமுண்டி இந்தியாவில் காக்கும் கடவுளாகவே வழிபடப்படுகிறாள். ஒரே நேரத்தில் தன்னை வணங்குபவர்களை (குழந்தைகளை) காப்பவளாகவும், தீயதை அழிப்பவளாகவும் இருப்பவள். குழந்தை ஏசுவுடன் இருக்கும் மேரியையும், பயங்கரமான சாமுண்டியையும் வேண்டுமென்றே எதிரெதிராக நிறுத்தியதாக தெரிவாளர் நமன் அகுஜா சொன்னார். உலக நன்மைக்காக தன் மகனை பலிகொடுக்க போகும் துயர் மிகுந்த மென்மை குணம் நிறைந்த அன்னை மேரி, அவளுக்கு எதிர்புறம் தன் குழந்தையை காக்க வன்முறையின் எந்த எல்லை வரையும் செல்லத்தக்க சாமுண்டி ஆகிய இரண்டு பேரும் தாய்மையின் இரண்டு துருவங்கள் என்றார் அவர்.

ஒருகாலத்தில் இந்தியர்கள் எந்தளவிற்கு காட்டுமிராண்டிகள் என்பதை காட்டுவதற்காக சாமுண்டி சிற்பத்தை போன்ற ஆயுதங்கள் ஏந்திய பல கைகள் கொண்ட சிற்பங்கள் இங்கிருந்து பிரிட்டனிற்கு இறக்குமதி செய்யப்பட்டது. நம் சிற்பங்களின் குறியீடு அம்சங்கள் எதுவும் ஆங்கிலேயர்களுக்கு போய் சேராமல் இருந்த காலம் அது. மேரி ஓவியத்தில் ஒழுக்கவியல் காரணமாக முலையை மறைத்தது, சாமுண்டி போன்ற சிற்பங்களின் குறியீடுகள் சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தது என்று இரண்டு கலை படைப்புகளும் புரிதலின்மைகளை கடந்தே இங்கே வந்திருக்கிறது. அதனால் தாய்மையின் எதிரெதிர் படிமங்களாகவும், கலை வரலாற்றில் இந்த படிமங்களுக்கு கிடைத்த அனுபவ ஒற்றுமைக்காகவும் இரண்டு படைப்புகளையும் எதிரெதிர் வைத்தது பொருத்தமானது தான். இது போன்ற இடங்களில் தான் தெரிவாளர்களின் வல்லமை தெரியவரும். ஒரு கலைக்காட்சி கூடத்தில் படைப்புகளை வரிசைப்படுத்தி அமைத்திருக்கும் விதத்தில் கூட படைப்புகளுக்கிடையிலும், அந்த படைப்புகளை பார்க்கும் பார்வையாளர்களிடமும் நல்ல தெரிவாளர்களால் உரையாடல்களை எழுப்ப முடியும்.

தன் தனிப்பட்ட துயரையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையை தியாகம் செய்ய நினைக்கும் மேரி போன்ற தாய் உயர்வானவள் தான். ஆனால் தன் குழந்தையை காக்க ஆக்ரோஷமுடன் எழும் சாமுண்டியை போன்ற தாயும் முக்கியமானவள். அவள் இல்லையேல் இங்குள்ள பல்லுயிர் வாழ்க்கை சுழற்சி தடைபட்டுவிடும். 

சிறிய அன்னை உருவங்கள்:

அடுத்ததாக கூடத்தின் மையத்தில் இருந்த கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த சிறிய அன்னை உருவங்களை பார்த்தேன். உள்ளங்கைகளில் அடங்கும் இது போன்ற சிறிய உருவங்கள் பெரும்பாலும் மக்கள் தங்கள் அன்றாட வழிபாட்டிற்காகவும், குறிப்பிட்ட வேண்டுதல்களுக்காகவும் பயன்படுத்தியவை. ஒரு சுமேரிய வணிகன் இந்தியா நிலப்பரப்பிற்கு வருகிறான் என்றால் தன் அன்றாட வழிபாட்டிற்கு இப்படி கைக்கு அடக்கமான, எளிதில் தன்னுடன் எடுத்து செல்ல முடியும் உருவங்களை தன்னுடன் இங்கு எடுத்து வந்திருக்க வாய்ப்பு அதிகம். இப்படி எடுத்து செல்லும் அளவிற்கு சிறிதாக இருக்கும் உருவங்கள் கலாச்சார பரிமாற்றத்திற்கு பெரிய பங்கு ஆற்றியிருக்க வாய்ப்பு உண்டு. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறிய உருவங்களின் முக்கியத்துவம் கருதி இந்த சிறிய அன்னை உருவங்களுக்கு கலை கூடத்தின் மைய இடத்தை அளித்ததை நமன் அகுஜா குறிப்பிட்டிருந்தார். 

ஹரப்பா தாய் சிற்பம்

இதில் முதலில் வைக்கப்பட்டிருந்தது ஏற்கெனவே குறிப்பிட்ட ஹரப்பா தாய் சிற்பம். சுடுமண் சிற்பமான இது 4500 வருடங்கள் பழைமையானது. இந்தச் சிற்பம் கையில் மண்ணால் செய்யப்பட்ட அடையாளத்துடன் மேற்பரப்பு சொரசொரப்பு தன்மை கொண்டிருக்கிறது. உருவத்திற்கு பொருந்தாத பெரிய தலை, பெரிய வட்டமான கண்கள், அகலமான மூக்கு, பரந்த வாய் உள்ளது. தலையில் ஒரு கிரீடம் போன்ற தலை அணியும், கழுத்தில் ஏதோ பெரிய மிருகத்தின் பற்களை போன்ற வடிவமைப்புடன் கூடிய மாலை உள்ளது. மேலும்  ஒரு கழுத்தணி உள்ளது. இவை சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் மதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உருவத்தை புலப்படுத்துகிறது. இந்த உருவம் நின்றிருக்கிறதா? உட்கார்ந்திருக்கிறதா என்று அறிய முடியா வண்ணம் சிறிய கால்களின் அமைப்பு அதுவும் எளிமையான வடிவில் உள்ளது. கைகள் கூட உருண்ட வடிவங்களாக எளிமையான வட்ட வடிவில் உள்ள குழந்தையை அணைத்து கொண்டுள்ளன. இடது முலையின் அருகில் குழந்தை இருப்பதால் குழந்தைக்கு பால் ஊட்டும் பேரன்னையின் படிமமாகவும் இது இருக்கலாம்.  ஒட்டுமொத்தமாக மனித அன்னை என்பதை தாண்டி வேறேதோ ஒரு உயிர் மனித தன்மையை கொண்டது போல இருக்கிறது இவ்வுருவம். ஒரு நவீன கால கலைஞரின் படைப்பு போல தோன்றுகிறது இந்த சிற்பம். இது போன்ற தொல் சிற்ப மரபில் உள்ள எளிய வடிவமைப்புகளையே பிக்காசோ போன்ற கலைஞர்கள் எடுத்து நவீன கலைக்கு பயன்படுத்தினார்கள்.

இத்தாலியின் அட்ரஸ்கன் (Etruscan)

ஹரப்பா சிற்பத்திற்கு அருகிலேயே பொ.மு. 1-ஆம் நூற்றாண்டிற்கும் பொ.யு. 4-ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் உள்ள காலத்தை சேர்ந்த பழைய இத்தாலியின் அட்ரஸ்கன் (Etruscan) மரபை சேர்ந்த ஆறு அன்னை படிமங்களை வரிசையாக வைத்திருந்தார்கள். முக்காடு போட்டு கொண்டு கையில் குழந்தையுடன் அமர்ந்திருக்கும் இந்த அன்னை உருவங்கள் மக்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு பெரிய எண்ணிக்கையில் அச்சு வார்ப்பால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பொத்திசெல்லியின் குழந்தை ஏசுவை கையில் வைத்திருக்கும் மேரி ஓவியத்தின் தொடக்க வேரை இந்த அட்ரஸ்கன் அன்னை உருவங்களில் காண முடிகிறது. 

தாயும் குழந்தையும் சுடுமண் உருவம்

அடுத்து பொ.மு. 3-ஆம் நூற்றாண்டை சேர்ந்த, மதுரா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தாயும் குழந்தையும் சுடுமண் உருவம் வைக்கப்பட்டிருந்தது. இந்த உருவம் சாம்பல் நிற சுடுமண்ணால் ஆனது. ஒரு வட்டமான பீடத்தில் கால்களை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் உள்ளது. நெடிய உடல் மற்றும் கழுத்து இருக்கிறது. வளைந்து உருண்ட குட்டையான மேலோட்டமான தோற்றத்துடன் கூடிய கைகள் குழந்தையை அணைத்திருக்கிறது. கால்களும் உடலுடன் ஒப்பிடும் போது குட்டையாக உள்ளன. கை, கால்களில் வளையல்கள் அணியப்பட்டுள்ளன. தலையின் வலது மற்றும் இடது புறம் காதணிகள் போன்ற இரண்டு வடிவங்கள் பெரிதாக உள்ளன. மௌரியர் காலத்தில் இருந்த வழக்கப்படி இந்த பெண் உருவத்தின் முகம் அச்சில் துல்லியமாக வார்க்கப்பட்டிருக்க, ஆபரணங்கள் உட்பட உடலின் மற்ற பகுதிகள் கையால் களிமண்ணில் வடிவமைக்கப்பட்டு மைய உருவத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  மேலும் தாமரை பூவின் இதழ்கள் விழுந்த பிறகு எஞ்சும் விதைக்கூடுகள் மேல் நோக்கிய தலையை சுற்றி இருக்க, அதன் தண்டுகளை தன் உடலுடன் சேர்த்து அணைத்தபடி உள்ளது இந்த உருவம். சில விதைகூடுகள் இந்த உருவத்தின் மடியிலும் உள்ளது. இந்த விதை கூடுகளில் உள்ள விதைகளை போன்ற வடிவமைப்புகள் இந்த பெண் உருவம் உடுத்தியிருக்கும் ஆடையிலும் உள்ளது. இந்த பெண் உருவம் வளத்தின் குறியீடாக வழிபடப்பட்டிருக்கலாம்.

சுடுமண் சிற்ப பலகை (பொ.மு. 2 முதல் பொ.மு.1 காலகட்டம்)

இந்த மௌரியர் கால உருவத்திற்கு அருகிலேயே ஒரு குழந்தை தரையில் நிற்க அதன் கைகளை பற்றியிருக்கும் பெண்ணை சித்தரித்திருக்கும் சுடுமண் சிற்ப பலகை வைக்கப்பட்டுள்ளது. பொ.மு. 2 முதல் பொ.மு.1 ஆம் நூற்றாண்டிற்குள் உள்ள காலத்தை சேர்ந்த இந்த பலகை, சுடுமண் வார்ப்பு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. வங்காள பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இங்கு வைக்கப்பட்டுள்ள சிறிய அன்னையர் உருவங்களில் உயரமான உருவம் இது தான். 27.5 செ.மீ. உயரம் உடையது. தலையில் வேலைப்பாடுகளுடன் கூடிய பெரிய தலை அலங்காரம் உள்ளது. உடலில் வேறு அணிகளும் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ளன. பெண் குறி தெரியும் விதத்தில் உள்ளது. இடது புறம் மரம் உள்ளது. வளைந்த வடிவான சட்டத்துடன் கூடிய இந்த சிற்ப பலகையை சுற்றி உட்புற விளிம்பில் மலர் வடிவமைப்பு தொடர் ஒன்று இடம் பெற்றுள்ளது. மரத்திற்கு அருகில் குழந்தையுடன் நிற்கும் இந்த பெண் உருவம் வளமையின் குறியீட்டை கொண்டிருப்பதாகும்.

பூனை முகம் கொண்ட அன்னை

சிறிது விலகி ஒரு கண்ணாடி கூண்டிற்குள் உத்திரபிரதேசத்தின் கௌசாம்பி பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பூனை முகம் கொண்ட 7.5 செ.மீ. உயரமேயான ஒரு அன்னை வடிவமும், வங்காள பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 14.6 செ.மீ. உயரமான மற்றொரு மிருக முகம் கொண்ட அன்னை உருவமும் இருந்தது. பூனை‌முக அன்னை பொ.யு. 1 அல்லது 2-ஆம் நூற்றாண்டை சார்ந்தது. இந்த செப்பு உருவத்தின் வலது கை அபய முத்திரை காட்டியுள்ளது, இடது கையில் பூனை முகம் கொண்ட குழந்தை இருக்கிறது. இந்தியாவில் 64 யோகினிகளில் ஒன்றான சர்ச்சிகா பூனை முகத்துடனும் காட்டப்படுகிறாள். இது சர்ச்சிகா யோகினியின் உருவமா? என்று தெரியவில்லை. ஆனால் எகிப்தின் பூனை முகம் கொண்ட பாஸ்டட் என்ற பெண் கடவுளை போலவே இந்த உருவத்திற்கு தலை அணியும், கழுத்தில் மாலையும் இருப்பதால், எகிப்தில் இருந்து இங்கே வந்ததாக கூட இருக்கலாம். 

மாடர் மேட்யுடா (Mater Matuta):

Mater Matuta

பொ.மு. 3-ஆம் நூற்றாண்டு காலங்களில் ரோமானியர்களால் வழிபடப்பட்ட சுமார் மூன்றடி உயரமுள்ள லத்தீன் தாய் கடவுளான மாடர் மேட்யுடாவின் சிற்பங்கள் இந்த கலை காட்சியின் சிறப்பம்சங்களில் ஒன்று.

Mater Matuta

கற்களால் வடிக்கப்பட்ட இந்த உருவங்கள் மண் நிறத்தை கொண்டிருந்தது. உட்கார்ந்த நிலையில் மடியில் குழந்தையை ஏந்தியுள்ளது. ஒரு உருவத்தின் மடியில் ஒரு குழந்தையும், மற்றொன்றில் இரண்டு குழுந்தைகளும், இன்னொன்றில் மூன்று குழந்தைகளும் இருந்தன. இந்த உருவங்களை பார்க்கும் போது சிலுவையில் ஏற்றி கொல்லப்பட்ட ஏசுவின் உடலை தன் மடியில் வைத்திருக்கும் மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற சிற்பமான ‘பியாட்டா’ (Pietta) சிற்பத்தின் உருவ அமைதியை ஞாபகப்படுத்தியது. 

பியாட்டா

15-ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலிய கலைஞரான மைக்கேலேஞ்சலோ பளிங்கு கல்லில் வடித்த ‘பியாட்டா’ சிற்பம். இப்போது இது வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் தேவாலயதத்தில் உள்ளது.

பிற அன்னை உருவங்கள்:

முதலில் பிறரது குழந்தைகளை கொன்று தின்பவளாக இருந்து பிறகு புத்தரால் மனமாற்றமடைந்து காக்கும் கடவுளான ஹரிதியின் சிற்பங்கள் இரண்டு இருந்தன. இந்திராணி, மூதேவி, குழந்தையை மடியில் ஏந்தியிருக்கும் ஆட்டு தலையுடைய அன்னை தெய்வம், விநாயகரை மடியில் வைத்திருக்கும் ரிஷப முகம் கொண்ட யோகினி, பெண் குழந்தையை சுமக்கும் தாயின் அரிதான இந்திய சிற்பம் போன்ற சிற்பங்களும் குறிப்பிடத்தக்கவை. கலைக்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இந்திய சிற்பமான இடுப்பில் குழந்தையை ஏந்தி நிற்கும் 6-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்திய தாய் தெய்வமான ஸ்கந்த மாதா சிற்பத்தின் உடல் மொழி பொத்திசெல்லியின் மேரி குழந்தை ஏசுவை ஏந்தியுள்ளதை போன்றே இருப்பதை தனியாக படத்தில் அருகருகே வைத்து ஒரு உரையாடலின் போது காட்டியிருந்ததை பிறகு பார்த்தேன். அன்னை எங்கும் எப்போதும் ஒரே போல் தான் இருக்கிறாள் போலும்…

அன்னையர்

பெரும்பாலான விலங்குகள், பறவைகள் எல்லாம் தன் குட்டிகள் தனியாக இரை தேடும் அளவிற்கு வளர்ந்தவுடன் குழந்தைகளை துரத்திவிடும். ஆனால் மனிதர்களில், குறிப்பாக இந்தியா போன்ற கிழக்கத்திய நாடுகளில் பெரும்பாலான தாய்களுக்கு தன் குழந்தைகள் மேல் உள்ள பற்று என்பது கடைசி காலம் வரை வலுவாக நீடிக்க கூடியதாக இன்றளவும் இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் பெற்றோர்கள் தன் கடைசி காலத்தில் தன் பிள்ளைகள் தன்னை பார்த்து கொள்வதை பற்றி அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். தன்னால் எழ முடியாமல் படுக்கையில் கிடக்கும் அந்த கடைசி காலம் என்று அவர்கள் உத்தேசிப்பது பெரும்பாலும் சில மாதங்களோ அல்லது சில ஆண்டுகள் மட்டுமே நீடிக்க கூடியது. அது அவ்வளவு எளிதான காலமாக எல்லோருக்கும் இருப்பதில்லை என்பது உண்மை தான். அது நடைமுறையும் கூட. இருந்தாலும் கடைசி காலம் பற்றிய அச்சம் இங்கே குழந்தைகளின் மேலான பற்றாகவும், குழந்தைகளுக்கான கடமையாகவும் மாறி நிற்பது ஒரு வழக்கம். ஆனாலும் இதை மட்டுமே வைத்து இங்குள்ள தாய்-குழந்தை உறவை வரையறுக்க முடியாது என்று தோன்றுகிறது.

மூன்று குழந்தைகளை பெற்ற தாய் கூட அதில் ஒரு குழந்தை இறந்தால் அந்த இறந்த குழந்தையை நினைத்து தன் வயதான கடைசி காலத்தில் கண்ணீர் விட்டு கொண்டு படுக்கையில் படுத்திருப்பதை பார்த்திருக்கிறேன். தன் குழந்தைக்காக எந்த எல்லை வரையும் செல்லும் ஒரு இந்தியத் தாயின் வேகம் ஒருவிதமான மூர்க்கமான பற்று என்று கூட தோன்றும். ஆனால் என்னை பெற்ற தாய் மட்டுமல்ல இங்கே சென்னையில் எனக்கு வீட்டின் ஞாபகமே வராத அளவிற்கு என் மீது அன்பு சொரியும் அன்னைகளின் இந்த மூர்க்கத்தால் பலன் அடைந்திருக்கிறேன் என்பதால் அதை புரிந்து கொள்ள முயல்கிறேன். இந்த மூர்க்கத்தை புரிந்து கொள்வதன் வழியாக இக்கலைக் காட்சியில் பொத்திசெல்லியின் தியாக அன்னையான மேரிக்கு எதிர்புறத்தில் வைக்கப்பட்டிருக்கும் பயங்கரமும், மூர்க்கமும் நிறைந்த இந்திய பெண் தெய்வமான சாமுண்டியை புரிந்து கொள்ளலாம். இத்தாலிய தாய்கள் மேரியை போல இருப்பாள் என்றோ, இந்திய தாய்கள் அனைவரும் சாமுண்டியின் குணத்தை கொண்டிருப்பார்கள் என்றோ பொதுமைபடுத்த தேவையில்லை. இந்த இரண்டு கூறுகளும் ஒரே தாயிடம் கூட இருக்கலாம்.

அதே நேரத்தில் ஒரு கலாச்சாரத்தில் பல காரணங்களால் ஒரு படிமம் உருவாகி நிலை கொள்வதும், அது பெருமளவில் சிற்பமாகவும், ஓவியமாகவும் மக்களிடம் புழங்குவதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அப்படி மேரியுடன்(மடோனா) குழந்தை ஏசு படிமம் இத்தாலி உட்பட ஐரோப்பாவில் பெருமளவில் புழக்கத்தில் இருந்தது. இதற்கான காரணமாக வழக்கமாக சொல்லப்படுவது போன்று மேரியை வணங்கினால் அவள் பரிந்துரை மூலமாக ஏசுவின் அருளை எளிதில் அடையலாம் என்ற காரணம் மட்டும் இருப்பது போல் தெரியவில்லை. கிறித்தவத்திற்கு முன்னரே இத்தாலியில் வழக்கத்தில் இருந்த குழந்தையை கையில் வைத்திருக்கும் மாற்றர் மற்றுறா சிற்பங்களில் இருந்து இதற்கான வேரை தேடலாம். முன்னர் இருந்த வழிபாடுகள் அழிந்து கிறித்தவம் இத்தாலி எங்கும் பரவினாலும் மக்களின் ஆழ்மனதில் பதிந்திருந்த படிமமான குழந்தையை கையில் வைத்திருக்கும் அன்னை அல்லது குழந்தையை மடியில் கிடத்தியிருக்கும் அன்னை போன்ற படிமங்கள் அழியவில்லை. அது கிறித்தவத்தில் உள்ள மேரி மற்றும் குழந்தை கிறித்து என்ற அடையாளத்தின் மூலம் திரும்பவும் வெளிப்பட்டது.

இங்குள்ள பல அன்னை வடிவங்களில் ஒன்றாக சாமுண்டி இந்தியாவில் இப்போதும் தொடர்ந்து வழிபடப்படுகிறாள். மதங்களை மாற்றலாம், வழிபாடுகள் அழியலாம். ஆனால் மக்களிடம் வலுவாக உருவாகி நிலை நிற்கும் படிமங்களை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. பூனை முகம், மாடர் மேட்யுடா, ரிஷப முகம், மேரி, சாமுண்டி என்றெல்லாம் அன்னை என்ற படிமம் விதவிதமாக வெளிப்படுகிறது. உலகம் முழுக்க இதற்கு மேலும் அன்னை வடிவங்கள் உண்டு. இவ்வளவு வடிவங்களை, குணங்களை கொண்ட அந்த பேரன்னைக்கு வணக்கம்!

ஓவியர் ஜெயராம் (p.c: மனோ)

இத்துடன், உலகம் முழுவதும் தாயுடன் குழந்தை உருவங்கள் தொடர்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது போன்று தந்தையுடன் குழந்தை சித்தரிக்கப்படவில்லை. தந்தை என்ற படிமத்திற்கு நாம் அநீதி இழைக்கிறோமா? என்று நமன் அகுஜா தன்னுடைய உரையில் குறிப்பிட்டதை பார்த்தேன். உண்மையில் தந்தைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா? அல்லது தனக்கான முதல் அரவணைப்பு தாயிடம் இருந்து வருகிறது என்பதை உணர்ந்ததால் அதை பிரபஞ்சத்தில் இருந்து கிடைக்கும் முதல் அரவணைப்பு என்று மனிதன் புரிந்து கொண்டதாலும் அன்னைக்கு இயல்பாகவே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதா? ஆனாலும் தாய்க்கு பின் தந்தையின் தொடுகையும் உள்ளதே. அகுஜா சொல்வது போல தந்தையை நாம் முற்றாக மறந்துவிடுகிறோமா? அதே போல தாய் என்ற படிமம் ஆண் குழந்தையுடன் இருப்பது போன்றே வரலாறு முழுக்க பெரும்பாலும் சித்தரிக்கப்பட்டுள்ளதையும் நமன் அகுஜா குறிப்பிட்டார். அரிதாகவே தாய் பெண் குழந்தையுடன் இருப்பதை போல சித்தரிக்கப்பட்டுள்ளதை வரலாற்றில் பார்க்கிறோம். இந்த அன்னை உருவங்களை உருவாக்கிய கலைஞர்களும், அவர்களுக்கு கொடையளித்த ஆட்சியாளர்களும் பெரும்பாலானோர் ஆண்களா? அதனால் அவர்கள் தங்களை மையமாக வைத்து இந்த படைப்புகளை யோசித்தார்களா? அல்லது நேரடியான போர்களும், மோதல்களும் அதிகமிருந்த முந்தைய காலங்களில் ஆண் குழந்தையை பெறுவதும், வளர்த்துவதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டதா? இப்போதைக்கு இவையெல்லாம் கேள்விகளாக தான் இருக்கின்றன.

*

ஜெயராம்: ஓவியர். பல ஊடகங்களிலும் ஓவியங்கள் வரைபவர். கலை ரசனை, விமர்சனம் சார்ந்த கட்டுரைகள் எழுதி வருகிறார். இவருடைய கட்டுரைகள் ஜெயமோகன் தளம், நீலி, குருகு ஆகிய இணையதளங்களில் வெளிவந்துள்ளன. கலைச் செயல்பாடு, பயணத்தில் ஆர்வமுடையவர். சொந்த ஊர் குலசேகரம், கன்னியாகுமரி மாவட்டம். சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் காட்சி தொடர்பு வடிவமைப்பில் (Visual Communication Design) முதுகலை படிப்பு முடித்து விட்டு ஒரு நிறுவனத்தில் வடிவமைப்பாளராக வேலை செய்கிறார்.

*

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *