புகை நடுவில் – ஏ.எஸ். பத்மாவதி

கிருத்திகா சிறப்பிதழ்

வாழ்தலுக்கு உரிய பல நெறிகளை நாம் நமக்குக் கிடைக்கக்கூடிய அனுபவங்களில் இருந்து கட்டமைத்து வருகிறோம். இதில் நாம் தேர்ந்தெடுத்துப் படிக்கும் இலக்கியத்திற்கு பெரும் பங்கிருப்பதாகவே எண்ணுகிறேன். அவ்விதமாகப் பார்க்கையில் கிருத்திகாவின் ‘புகை நடுவினிலே’ இருந்து வாசகியாய்  நான் என்ன பெற்றேன்?

கிருத்திகா பற்றிய குறிப்புகளிலிருந்து இரண்டு விஷயங்கள் தெரிய வருகின்றன. முதலாவது, புகை நடுவினில் அவருடைய முதல் நாவல். இரண்டாவது இதை எழுதும் பொழுது  கிருத்திகாவின் வயது 35-லிருந்து 38 வயதிற்குள். கிருத்திகாவைப் பற்றி இப்படி தகவல்ரீதியான  குறிப்போடு துவங்குவது சரியான ஆரம்பமல்ல என்றாலும், இதிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

மனித உறவுகளை, சுற்றிலும் உள்ள அரசியலை, சமூகத்தை தர்க்கரீதியாக அணுகியுள்ள கிருத்திகாவிற்கு 35-வயதில், அதுவும் முதல் நாவலில், இந்த பக்குவம் எப்படி சாத்தியமாயிற்று?

முதல் வாசிப்பில் உணர்ந்தது, வழக்கமாக நாவல்களில் வருகின்றாற்போல், இந்தச் சம்பவம் எதில் போய் முடிந்தது என்றோ, இந்தக் கதாபாத்திரத்தின் முடிவு என்னவாயிற்று என்றோ புகை நடுவினில் நாவலை ஒட்டி யோசிக்க முடியாது என்பதைதான். கோர்வையான சம்பவங்களின் அடுக்காக அல்லது தொகுப்பாக புகை நடுவினில் இருக்கிறது என்பதைவிடத், தர்க்கரீதியான பல கருத்துக்களை விவாதிக்க, சம்பவங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன என்றே சொல்லலாம்.

செறிவான எழுத்து, தத்துவ விசாரம் இருக்கிறது. ஆனால், தத்துவ சிக்கல்கள் இல்லை. எல்லாக் கதாபாத்திரங்களின் எண்ணங்களும், உணர்வுகளும் மனித மனங்களின் கூறுகளாகவே அணுகப்பட்டிருக்கின்றன. எந்தக் கதாபாத்திரமும்  இது சரி தவறு  என்ற முறையில் அணுகப்படவில்லை.

ஆண், பெண் உறவு குறித்து புகை நடுவினில் பல்வேறு தளங்களில் அலசுகிறது. சில இடங்களில், தனி மனித  சிந்தனைகளாகப் பதிவாகிறது.  சில இடங்களில் இருவருக்கிடையேயான சம்பாஷணைகளாகப் பதிவாகிறது. விதர்பன் – சந்திராவதி; சாரதா – சந்தோஷ்லால்; சத்தியன் – நிர்மலா; லக்ஷ்மி – ஸ்ரீராம் – (உஷா) ஆகியோரின் உரையாடல்களிருந்து இதை இனங்காணலாம்.

வெவ்வேறு விதமான தாம்பத்திய உறவுகள். 

எதையும் வெளிப்படையாக பேச முடிந்தவர்கள் சாரதாவும் சந்தோஷ்லாலும்.  சாரதாவிற்கு காந்தியக் கொள்கைகளில் ஈடுபாடு.  சந்தோஷின் ஓயாத சிந்தனைகளும், டில்லி உலக அனுபவங்களும், அவனை அவற்றைத் தாண்டிய உலகை யோசிக்கத் தூண்டுகிறது.  தான் அவாவுகின்ற நூதன உலகம் கிட்டி விட்டதாக நினைத்துப் பலமுறை ஏமாற்றமடைந்ததாகக் கூறும் அவன், அந்த உலகைத் தேடி அலைய முடிவெடுக்கிறான். மணவாழ்வு பற்றிக் கேட்கும் சாரதாவிடம் “தாம்பத்ய வாழ்வில் சுகம் வேண்டுமானால், அன்பும் பொது லட்சியமும் ஒன்று சேர வேண்டும்” என்கிறான்.

சந்திராவதி மேல் கொண்ட காதல் உணர்வின் கனத்தைத் தாங்க முடியாமலும், தன்னுடைய எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மையிலிருந்து விடுபட முடியாமலும் உயிரை மாய்த்துக் கொள்கிறான்  சத்தியன். கனிவானவள், தெளிவானவாள், அழகானவாள் – சுற்றி உள்ள அனைவரும் சந்திராவதி பால் ஈர்க்கப்பட, அவளோ கணவன் விதர்பனின் அன்பான, கரிசனமான வார்த்தைகளுக்காக ஏங்குகிறாள். விதர்பனால் அவன் மணவாழ்வு குறித்து சாரதாவோடு பேச முடிகிறது.  மனைவியான சந்திரவதியோடு பேச முடியவில்லை. எண்ணற்ற தருணங்கள் சந்திராவதி விதர்பனோடு  பேச ஏங்குகிறாள். ஆனால் அவனோ, “தன்னைத்தானே தேற்றிக் கொள்ள அவளுக்கு  பல உபாயங்கள் சொல்வான் – ஆனால் அவனாக அவன் வாயில், ஒரு அமைதி தரக்கூடிய வார்த்தை கூட சொல்லமாட்டான்” சாராதாவால் விதர்பனை நேரடியாக விமர்சிக்க முடிகிறது.

”விதர்பா, கடவுள் உனக்கு அறிவை ஏராளமாகக் கொடுத்திருக்கிறார்.  நீ பிறர் மனோ வியாதிகளைத் தெரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி மருந்து சொல்லுவாய்.  இப்படி இருந்தால் துக்கம் இல்லை என்று வேதாந்தம் பேசுவாய்.  வருத்தம் என்பது என்ன என்று வியாக்கியானம் செய்வாய். ஆனால் நீயாக, அதாவது தனியாக, உணர்ச்சி வெள்ளத்தில் புகக் கூசுவாய்.  ரோஷமென்னும் அலையை, உன்னுடைய சலனமற்ற மனோபாவம் எதிர்க்க வலிமையற்றது.  அதனால் பிறர் துயரத்தைத் தெரிந்து அனுதாபம் காட்ட உன்னால் இயலாத காரியம். அன்பு, பிரிவினை, ஏக்கம், ஒன்று சேருதல் என்ற இப்பேர்ப்பட்ட சுகதுக்கங்களை மகரிஷிகளும், ராஜாக்களும், தேவர்களும் அனுபவித்ததாக நம் புராணங்கள் கூறுகின்றன. நீயும் அதை வாசித்து ரசிக்கிறாய். காளிதாஸன் காதல் என்றும், சோகமென்றும் வர்ணிக்கும் போது நீ அதையும் வாசித்து ஆனந்தமடைகிறாய்.  ஆனால் உன் எதிரே ஒரு சோக நாடகம் நடக்கட்டும்?… உனக்கு இன்னது செய்வது என்று தெரியாது.  திக்கு முக்காடிப்போய் எங்கே பார்ப்பது என்று தெரியாமல் முழிப்பாய்.  எப்படியாவது அங்கிருந்து தப்பிப் பிழைத்தால் போதுமென்று உனக்குத் தோன்றும்.  உனக்கு வியாக்கியானம் செய்யத் தெரியுமே தவிர எதையும் அனுபவத்தில் பிரயோகப்படுத்த தெரியாது” என்கிறாள் சாரதா.

விதர்பனுக்கு  சாரதா மூலம் புரியவந்து, அவன் சந்திராவதியை அணுகப் போகையில், சந்திராவதியோ இறுகிப் போய்விடுகிறாள். ஆனால் இருவரும் சம்பாஷிக்கும் போது, அவன் கைபட்டுக் கண்ணாடி பொம்மை நொறுங்குகிறது. சப்தம் கேட்டு சந்திராவதி அவன் முகத்தைப் பார்க்க அது எப்பொழுதும்; போல் தெளிவாகவும், அமைதியுடனும் தென்பட்டது, ஆனால் அவன் கைகளில் கண்ணாடி பொத்திருத்தது. 

அப்போது தான் அவன் முகத்தில் சோபிக்கும் அமைதிக்கும், அவன் உள்ளத்தின் வேதனைக்குமிருந்த மாறுபாட்டை அவள் புரிந்து கொண்டாள். இத்தனை அடக்கமா? அன்பு ததும்பும் அவளின் மான் விழிகளின் அழைப்பை விதர்ப்பனால் இனிமேல் அசட்டை செய்ய முடியுமா? அவன் பதில் பேசாமல் அந்த ரத்தம் தோய்ந்த கரங்களாலேயே, கோபத்துடனேயே, அவளை தன்னுடன் சேர்த்து இறுகத் தழுவிக் கொண்டான்”.

கலாரசிகனாகத் தன்னைத் தானே போற்றிக்கொள்ளும் ஸ்ரீராமுக்கு பெண்களுடனான உறவு பெரும் வசீகரம். உலகமே அவனுடைய சுபாவத்தை விமர்சித்தாலும், உஷாவிடம் கூட நேரடியாக விமர்சித்தாலும், உஷாவிற்கே இந்த உறவு, ஒரு நிச்சயமற்ற தன்மையை உணர்த்தினாலும், அவளாலும் அந்த வசீகரத்திலிருந்து வெளிவர முடியவில்லை.

இயற்கையிலேயே கூச்ச சுபாவம் உடைய உஷா, யாருடனும் சகஜமாகப் பழகாதவளாகவே இருந்து வந்தாள்.  தவிர தாயாரைவிட அழகு குறைந்தவளாக இருப்பதைத் தாயார் உட்பட அனைவரும் சுட்டிக் காட்டியதில், யௌவனப் பருவம் வருமுன், அவள் தன்னைப் போல் அசடோ, அவலக்ஷணம் கொண்டவளோ, இந்த பூவுலகில் பிறக்க முடியாது என்ற திட நம்பிக்கை கொண்டு விட்டாள். முதல் முதல் தன்னைப் பற்றிய சந்தேகங்களையும் அதைப்பற்றிய சிந்தனைகளையும் அவள் மனதிலிருந்து எடுக்க யத்தனித்தவன் டாக்டர் ஸ்ரீராமே ஆவான். அவள் முகத்தில் ஒரு  வசீகரிக்கும் தோற்றமும், நடையில் ஒரு அழகும், இதழ்களில் உல்லாச சிரிப்பும் தோன்றின.

ஒரு பெண்ணை தனக்காக ஏங்க வைப்பதும், அந்த உறவில் களிப்பதும், ஸ்ரீராமின் ஆகிருதியின் ஒரு கூறாக படிந்திருக்கிறது.  மிஸ். உஷாவைக் குறித்து, தான் தவம் புரிவதை அவன் விதர்பனிடம் சொல்கிறான். .  “இந்த கன்னிப் பெண்களுடன் ரொம்ப நைஸாகப் பழக வேண்டும், விதர்ப்! அவர்களிடமிருக்கும் அந்தக் கூச்சம் போய்விட்டால், பிறகு எத்தனை சொகுசாக இருப்பார்கள் தெரியுமா?”

“இந்த போக ரஸத்தை பருகுவதே ஒரு கலை, பின்பு காதலுடன் அதைப் பிணைத்து விட்டால் கேட்கவே வேண்டாம்.  காதல் என்பதற்கு எத்தனை மானிடர்களுக்கு நிஜமான அர்த்தம் தெரியும்?  நீ சொல்லு”

இதைத்தவிர செக்ரட்டேரியத்தில் நடக்கும் நாடகங்கள், அதிகார கலாட்டாக்கள்,  அந்தக் கால டில்லி அரசியலை நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பிக்கின்றன. ஒருவனைத் தூக்கிப் பிடிப்பதும், இன்னொருவனை விரட்டி அழிப்பதும் என பல சூதாட்டங்கள். பத்ரி, வாசன் போன்ற கதாபாத்திரங்களின் செக்ரட்டேரியட் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, அவர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் நடக்கும் சம்பாஷணைகள் என வெவ்வேறு குணாம்சம்கள் கொண்ட மனிதர்களைக் கிருத்திகா படைத்திருக்கிறார்.

1950-களில் டில்லி வாழ்க்கை, அதிலும் குறிப்பாக அதிகாரமையத்தின் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. சந்திராவதி, சாரதா, உஷா இவர்களின் வாழ்வு பற்றிய நுணுக்கமான விவரிப்புகள் தவிர, சுசீலா, லஷ்மி, சுலோச்சனா போன்ற பாத்திரங்கள்  வெவ்வேறு கூறுகளைக் கொண்ட பெண் இயல்புகளை வெளிப்படுத்துகின்றன.  இந்த எந்தப் பாத்திரத்தின் மேலும் நமக்கு வெறுப்போ அசூயையோ தோன்றுவதில்லை. இந்த நடுநிலையான  அணுகுமுறையேகிருத்திகாவின் முதன்மையான ஆகிருதியாகப்படுகிறது.

கிருத்திகாவின் மகள் மீனா சுவாமிநாதன் என்னுடைய 31-வது வயதில் அறிமுகமானார்.  அவரிடமிருந்து கற்றுக் கொண்ட வாழ்க்கைப் பாடங்கள் ஏராளம்.  மீனா மூலம் கிருத்திகாவை நாலைந்து முறை சந்தித்திருக்கிறேன். ஆனால் அந்த காலக்கட்டத்தில் அவருடன் பெரிதாக உரையாட முடியாமல் போயிற்று.  இரண்டு சம்பவங்கள் நன்றாக நினைவிருக்கிறது.

ஒருமுறை ஒரு குழுவின் நாடக தினத்திற்கு ஒரு வாரம் முன்பு மீனா சுவாமிநாதன் தொலைபேசியில் அழைத்துப் பேசினார். மறுவாரம் தன் அம்மா (கிருத்திகா) நாடகம் பார்க்க விரும்புவதாகவும், ஆனால் அம்மாவிற்கு காது பிரச்சனை காரணமாக வசனங்களை கேட்டறிய முடியாது என்பதால்  அந்தக் குழுவிடமிருந்து நாடகபிரதியை பெற்றுத் தந்தால், அதை படித்து விட்டு நாடகம் பார்ப்பது சுலபமாக இருக்கும் என்று அம்மா எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.

சுவாமிநாதன் நிறுவனம், ‘தினமணி’ நாளிதழுடன் இணைந்து நடத்திய கவிதைப் போட்டியிலும், குங்குமம் வார இதழுடன் இணைந்து நடத்திய கதைப் போட்டியிலும் பிரசுரத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுடன் நடந்த விழாவில் கலந்து கொள்ள கிருத்திகா வந்திருந்தார். பொதுவாக, சுவாமிநாதன் நிறுவனத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில்  அதிகம் கலந்து கொள்ளாத அவர் படைப்புத் துறை தொடர்பான நிகழ்ச்சி இது என்பதால் ஆவலுடன் வந்திருந்தார்..  அவருக்கு அப்பொழுது வயது எண்பதுக்கும் மேலிருக்கும். மெலிந்த தேகத்துடன் தொட்டால் கரைந்து போய்விடுவரோ என்பது போலிருந்தார். அன்றைக்கு அங்கு வந்திருந்த மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன், ‘பதிப்பாளர் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி, தினமணி ஆசிரியர் இராம். திரு. சம்பந்தம், பத்திரிகையாளர் ஞாநி,  கவிஞர் சுகுமாரன் ஆகியோருடன் இளம் படைப்பாளிகளாக தேர்வு செய்யப்பட்டிருந்த தாமரை, அழகிய பெரியவன், பாஸ்கர் சக்தி, இந்திரா என்கிற ஜோதிமணி  இவர்களை எல்லாம் பார்த்து பெரும் மகிழ்ச்சியடைந்தார்.  நிகழ்ச்சி முழுவதையும் முதல் வரிசையில் அமர்ந்து உவகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

A.S. பத்மாவதி

நேரடியாக கிருத்திகாவோடு பெரிதாக பழக முடியவில்லை என்றாலும், அவர் வளர்த்த மீனாவிடமிருந்து நான் நிறையக் கற்றேன். மீனாவிடமிருந்து செதுக்கப் பெற்றதுதான் தன்மானமும், பிரியமும் நிறைந்த அணுகுமுறை. இன்றைக்குப் புகைநடுவினில் படித்தபொழுது வந்த எண்ணமும் இதுதான்.

படைப்பையும், படைப்பாளியையும் பிரித்துப் பார்க்க முடியாது.  படைப்பில் இவ்வளவு தாக்கத்தை முன் வைத்த கிருத்திகா யார்? இதை  புகை நடுவின் ஊடான உங்கள் பயணத்தில் நீங்கள் நிச்சயம் அறிவீர்கள்.

-“மா” (A.S. பத்மாவதி)

(டிசம்பர், 2011; காலச்சுவடு வெளியிட்ட புகை நடுவினில் புத்தகத்திற்கு எழுதப்பட்ட முன்னுரை)

*

ஏ.எஸ். பத்மாவதி: எழுத்தாளர், கல்வியாளர். ‘மா’; ’மானசி’; ’கண்ணம்மா’; ’நந்தினி’; ’ஊசா’ ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வருகிறார். ஆண் பெண் சமத்துவம், வாழ்க்கைத்திறன் கல்வி ஆகியவை குறித்த பாடத்திட்டத்தை பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்துள்ளார். சிறுகதை, கட்டுரை, நாடகம், காணொளி ஆகிய வடிவங்களில் குழந்தைகள், பெண்கள் குறித்த தன் பார்வையை பதிவு செய்து வருகிறார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கும் யுனிசெஃப் நிறுவனத்துக்கும் ஆலோசகராக உள்ளார்.

*

கிருத்திகா – தமிழ்விக்கி

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *