பெண் வழிகள் – 2 – விஜிலாவின் கவிதைகள் – சுகுமாரன்

விஜிலா: கோழிக்கோடு மாவட்டம் சேராம்ப்ரையில் பிறந்தவர். குளத்துவயல் செயிண்ட் ஜார்ஜ் மேனிலைப் பள்ளி, மடப்பள்ளி சிகேஜிஎம் அரசுக் கல்லூரி ஆகிய கல்வி நிலையங்களில் பயின்றார். மலையாள இதழ்களிலும் இணைய இதழ்களிலும் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஐந்து கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ் வெளியிட்ட ‘மலையாளத்தில் தலித் இலக்கியம்’ தொகுப்பில் விஜிலாவின் கவிதை இடம் பெற்றிருக்கிறது. எரணாகுளம், முளந்துருத்தியில் வசிக்கிறார். மைத்ரி புக்ஸ் 2018 இல் வெளியிட்ட ‘கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் ‘ – தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் விஜிலாவின் 5 கவிதைகளின் தமிழாக்கம் இடம்பெற்றிருக்கிறது. vijulaputtampoyil@gmail.com
-சுகுமாரன்
1
அடக்க ஒடுக்கமான ஒரு ஃபெமினிஸ்ட்
வெங்காயத்தைப் பொறுமையுடன் உரிப்பவள்
பிள்ளைகளின் பீயை
அருவருப்பில்லாமல் கழுவி விடுபவள்
காதலிக்கும்போது காதலனைக்
கண்ணா என்றழைத்து நிறைவுகொள்பவள்
டயல்டோனை குருவாயூர் அம்பல நடையில் என்றாக்கியவள்
காலர் டோன்களைக் கோலக் குழல் விளிகளாக்கியவள்
மாதவிலக்கில் கோவிலுக்குப் போனவளை
திடுக்கிடலுடன் ஏற்றுக் கொண்டவள்
ஒண்டியாக சினிமா பார்க்கப் போகவில்லை என்று
யாரிடமும் சொல்லாதவள்
ப்ரா என்றோ
முலை என்றோ பொதுவெளியில் சொல்லாதவள்
வழியில் மூத்திரம் கழிக்கக்
கழிப்பறைகள் தேடாதவள்
கட்டியவனைச் சேட்டா என்று அழைப்பவள்
நெற்றி விளிம்பில் சிந்தூரம் தீற்றவில்லை எனினும்
சேலைக்குள்ளே
தாலியை மறைப்பவள்
வீட்டில் வேலையெல்லாம் முடித்து
அலுவலகத்துக்கு வண்டி பிடிப்பவள்
போராட்டப் பந்தலுக்குச் செல்பவள்
மணமில்லாத மதுவகை பற்றி கேட்டிராதவள்
சங்கு புஷ்பத்தைப் பார்க்கும்போதும்
எதுவும் தோன்றாதவள்
பிள்ளைகளை எழுத்தறிவுக்கு அமரவைத்து
கலாச்சாரப் புனிதம் காப்பவள்
சொந்த மகனை அடுக்களைக்குள் அனுமதிக்காதவள்
சொந்த வீட்டுக்கு
சுக்ருதமென்றோ ஸ்ரீபவன் என்றோ பெயர் சூட்டும்போதும்
மாற்றுக் கருத்து இல்லாதவள்
வன்கொடுமைச் செய்திகளைக் கேட்கும்போதெல்லாம்
பாதுகாப்பு என்ற சொல்லை
வாயிலிருந்து அனேக முறை தெறிக்கவிடுபவள்.
2
எ சாட் வித் ராமா
- சிந்தனை மிச்சம்
பசுமையான
வால்மீகி ஆசிரமத்தில்
லவ குசன்களுடன் எடுத்த
ப்ரொஃபைல் படம்
லைக்குகளால் நிரம்பியபோது
சீதை ஆனந்தக் கண்ணீருடன்
ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டாள்
அறிமுகமற்ற சாட்கள் எதுவும்
ஜானகியைத் தொந்தரவு செய்யவில்லை
அவ்வாறிருந்த ஒருநாள்
சந்தேகக் கண்ணுடன் உருண்டு வந்தது
ராமனின் செய்தி
‘என்ன நடக்கிறது?’
‘நான் உன் மனைவியல்ல இப்போது
நீ அறியத் தேவையும் இல்லை’
‘என்ன, ஏட்டிக்குப் போட்டியா?
உனக்கு இன்னொரு வாய்ப்புத் தருகிறேன்’
‘எனக்கு விருப்பமில்லை
ஏழு வயதில் என்னை மணந்தாய்
அப்போது நான்
படிப்பை நிறுத்த நேர்ந்தது’
‘பதினான்கு ஆண்டுகள்
காட்டில் கழித்தபோது
நீ இதைச் சொல்லவில்லையே?
யாரையாவது காதலிக்கிறாயா நீ?’
‘நான்
படிப்பைத் தொடரத் தீர்மானித்து விட்டேன்
எல்லா உதவிக்கும் இங்கே
வால்மீகி மகரிஷி இருக்கிறார்
இனி நீ என்னைப் பற்றி
விசாரிக்க வேண்டாம்’
- சிந்தனை வீரியம்
நான்வெஜ் வீரியத்தால்
சீதையின் வாக்குகள்
ராமச் சொல்லம்புகளை
நீர்ச் சொட்டாக்கின
‘ஆண்கள் உங்களுக்கு நினைப்பு,
பெண்கள் நாங்கள்
அதீத தன்னம்பிக்கை கொள்வது
ஆணின் காதல் குடை நிழலில்தான் என்று
ஆனால் கேள்,
ராவணனைக் காட்டிலும் பெரிய ஆராதகன் இல்லை
ஆனாலும் நான் தவறிழைக்கவில்லை
அப்புறம்
கடத்திச் செல்லத் தக்க நியாயமும் இருந்தது
சூர்ப்பநகை முலையை
நீ அறுக்கவில்லையா?
அதுவுமன்றி இலங்கையில்
நீயும் லட்சுமணனும்
நூற்றுக் கணக்கில் மரங்களைக் கொடிகளை
வெட்டிச் சாய்க்கவில்லையா?
நீ துரோகி…
பெண் சமூகம் ஒன்றாயிற்று
இனி
எந்தப் பெண்ணின் நேசமும்
உனக்கு வாய்க்காமல் போகட்டும்
நான் சாபமிட்டாகி விட்டது’
‘யென்னை, நாதா என்றும் இறையென்றும் அழைத்த
உன் பக்தியும் மரியாதையும் எங்கே?’
‘அதுவா,
இலங்கைப் பெண்களுக்கு நாக்கு இருக்கிறது
சமத்துவப் பாடங்களை
அவர்களிடமிருந்து கற்கவேண்டும்’
‘போகட்டும், மன்னிக்கிறேன் நான்
ஒரு சான்ஸ் கூடத் தருகிறேன்
அக்கினி சுத்தி நடத்தினால் நீ
ராமபத்தினியாகத் தொடரலாம்’
‘ஆண் நிழலில் கழியும் அவசியம்
எந்தப் பெண்ணுக்கும் இனி இல்லை
மேலும் பேச நானில்லை
பை…பை…’
- சிந்தனைச் சாரம்
‘தவறிழைக்காத பெண்ணைச்
சந்தேகிக்கும் ஆணுக்கு
எல்லாம் அவுட் ஆஃப் ரேஞ்ச்
மரணம் வரையிலும்’
*

3
திடமான உவமைகள்
திடமான ஒரு விதைக்காக
நிலம் நெஞ்சு விரிப்பதுபோல
நீங்கள்
இதயத்தைத் திறந்து வைத்ததுண்டா?
திடமற்ற ஒரு பார்வைக்காக
எல்லா நாளிலும்
சிரித்துப் பின்வாங்கும்
வெயிலுக்கு முந்தைய அந்தியைப் போல
நீங்களும் சற்று நேரம்
‘மரணமே நீ
வாராயோ மீண்டும் என்
காதல் சங்கீதம் கேட்க?’ என்ற
பாடலை முனகியதுண்டா?
வழிகாட்டிப் பலகைகள்
திடப்படுத்தியதென்ற
திடத்தின் பேரில்
பயணம் சென்றதுண்டா?
விலக்கப்பட்ட கனிகள் என் ற உவமையுடன்
திடமற்ற ஒரு நாளுக்காகக்
கனவுகளைப் போர்த்திய
உங்கள் உதடுகளில் ஒதுக்கி வைத்த
முத்தங்களைக்
காற்று களவாடியதாக நினைவு கூர்ந்ததுண்டா?
புலரி வரும்போது
கனலாடை அணிந்த பெண் என்பது
உறுதிப்படுகிறது.
புத்தகங்களாக
பாதங்களாக
நிமிரும் அவள் தாள்களில்தான்
பிரபஞ்சத்தின்
காயம்படாத எதிர்காலம்.
4
சிறகு முளைக்காத கிளி
வாசல் பெருக்கும்போது
இலையென்று
துடைப்பத்தில் சிக்குண்டது
சிறகு முளைக்காத கிளி
வீட்டைப் பூட்டிப் போகும்போது
அதன் இதயத் துடிப்பே
வீட்டுக்குத் துணை
இன்று
வாசலில் உதிர்ந்து கிடக்கும்
சிறகுகளைப்
பெருக்கித் தள்ளும்போது
மரக்கிளையிலிருந்து பாடுவது
சிறகுமுளைத்துப் பறந்துபோன
அந்தக் கிளியாக இருக்குமோ?
5
அவன் வாசல் பெருக்கும்போது
சோம்பலுடன் கிடக்கையில்
பூமி தனது முடியிழை வெளியில்
பகலவனைப் பார்க்கிறது
பின்முற்றத்தைப் பெருக்கிக்கொண்டு
கிழக்கில் சாய்ந்து நிற்கையில்
உதடுகளில் தாம்பூலச் சாறு
கஸல் ராகங்கள்
புல்முனைகளில்
வெளிச்சம் விழச்செய்து எழுப்பி
ஒவ்வொரு இலையையும் விரித்து
உலரவைப்பதற்கு இடையில்
கருமேகச் சருகுகளுக்குத் தீமூட்டி
அடியே என்று அழைத்து
ஆவி பறக்கும் இனிமையுடன்
அவளுக்கு ஒரு கோப்பைத்
தேநீரை நீட்டுகிறான்.
கோப்பை நிறைய
சித்திரப் பிரபஞ்சத்தை
அவள் வரைந்து போட்டதைப் பார்த்துப் பார்த்துப்
பொழுதை வெளுக்கவிட்டான்
அனல் வண்ணத்தைப்
பத்துமணிப் பூக்களுக்குக் கைமாற்றினான்
அவள்
பத்திரிகைகளை விரிக்கும்போது
அவன்
என்றென்றும்போல
வாசலைப் பெருக்கிக் கொண்டிருந்தான்
புதிய ஓர் எழுத்தில்
பகல் நிமிரும்போது
பூமி மதிக்கப்படுகிறது
ஒரு பெண் குழந்தை சீராட்டப்படுகிறாள்.
6
புறம்போக்கு
புறம்போக்கில் குடியிருக்கும் சந்திரிகா சேச்சி
சொல்கிறாள்
பின்கட்டு வழியாக மட்டுமே
ஏறிச் செல்லும்
வீடுகளைப் பற்றி
முன்கட்டும் வழியாக
ஏறிச் செல்லும்
ஃபிளாட்டுகளைப் பற்றி
நிலவிளக்குகள் சுடர்ந்தெரியும்
வீடுகளைப் பற்றி
மார்க்கெட்டுக்குப் போய்ப்
பின்கட்டு வழியாகவே
என்றும் ஏறிச் செல்லும்
அவளுக்கும் மீனுக்கும்
ஒரே வழி
டிவியில்
ஆகஸ்டு 15 அன்று
இந்தியாவில் எல்லாரும்
எனது சகோதர சகோதரிகள் என்ற
சூளுரையைக் கேட்டுக் கொண்டே
ஏறிவந்த அதே வழி.
7
பெண்வினைகளின் வெளிப்பாடு
அக்காவை நகலெடுத்து எழுதிக்கொண்டு
இளமை கடந்து போயிற்று
திருமணம் அவளை
அடுக்களை என்று மொழிபெயர்த்தது
கொப்புளங்களும் காயங்களும் அவளை
ஓவியராக்கின
படுக்கையறையில் அவள்
எடிட் செய்யப்பட்டாள்
வரவு செலவுக் கணக்குகள்
அவளைக்
கணக்குப் புத்தகமாக்கின
கர்ப்ப காலமும் பிரசவகாலமும்
சானல்களினூடே
காட்சிகளாகப் புரளும்போது அவள்
பயண வழிகாட்டி
குழந்தையை
அம்மாவினூடேயும் அப்பாவினூடேயும்
வாசித்துத் திருத்தும்போது
அவள்
தோல்வியடைந்த பிழைதிருத்துநர்
நரை திரை பாதிக்கப்பட்ட
அட்டை கிழிந்த
வாசிக்கப்படாத
தன் வரலாறு.
8
வேற்றுமைகளுடனே…
வேலை செய்கிறாள்
ஓட்டுப் போடுகிறாள்
மரக்கறி உண்கிறாள்
கறிக் கத்தியெடுக்கிறாள்
கூட்டாளிகளுடன் அன்பைப் பகிர்கிறாள்
மால்களில் ஏறியிறங்குகிறாள்
சடங்குகளில் பங்கேற்கிறாள்
வீடுகளில் வசிக்கிறாள்
மூத்தோர் அறிவுரைகளுக்குத் தலையாட்டுகிறாள்
மருத்துவமனையில் தங்க்குகிறாள்
கனவு காணவோ
பொங்கிச் சிரிக்கவோ முடியாமல்
இருட்டைப்
பெருமூச்சைக்
கட்டவிழ்த்து விடுகிறாள்
அப்போது
அப்போது மட்டும்
அமைதிகாக்க முயல்கிறாள்
வேற்றுமைகளுடனேயே…
*

9
மௌனத்தால்…
மௌனத்தால் சுவரெழுப்பி
தனிமையால்
மேற்கூரை வேய்ந்து
சருகுகளின் மேல்
நான் படுத்திருக்கிறேன்
என் பாதையில் கற்கள்
அபசுரங்கள் என்று எழுதிக் கொண்டு
உருண்டு போகின்றன
முத்த அடையாளங்களால் சிவப்பேற்றி
முட்கள் என் கனவுகளில் கண்பதித்துக்
கூராகக் கூராக அப்படியே
பூக்களில் சிரிப்பை அணைத்து விடாதே
இதயத்தைக் கிள்ளி எறியாதே
இதழ்களைக் காயப்படுத்தாதே
உழுது புரட்டப்பட்ட மண்ணில்
வேர்களை வேறுபடுத்தாமல் எப்படி?
என் கல்லறைக்கு
நீ வரமாட்டாய் என்றாலும்
உன் பாடலை
நீ அனுப்பு
என் பூக்களை விரியச் செய்
என் பாடலை மட்டும் நீ
ஒரு நெல்லிக் கனியாக
உன் முந்தானையில் முடிந்து கொள்
‘உன் கலகலச் சிரிப்பை மறவேன்’ என்று
என் நெற்றியில் எழுது
திரும்பிப் போ
திரும்பிப் போ.
*
மலையாளக் கவிதைகள்: விஜிலா
தமிழில்: கவி சுகுமாரன்
*

Coஅருமையான கவிதைகள்,,பதியவழி பதிக்கும்,,