அன்றிருந்தது… – ஜி.எஸ்.எஸ்.வி. நவின்
1
பொ.யு. 1995ல் நாடக ஆசிரியரான சே. ராமானுஜம் தன் சொந்த கிராமம் திருக்குறுங்குடியில் கைசிக புராண நாடகம் பார்க்கிறார். மார்கழி மாத மகாலய ஏகாதசியை ஒட்டி வரும் பகல் பத்து, இரா பத்து என இருபது நாட்கள் வைணவர்களுக்கு மிக முக்கியமான திருவிழா நாட்கள். அதில் பத்து நாள் திருக்குறுங்குடியின் நம்பிரான் பற்றிய புராணக் கதை கைசிகி என நிகழ்வது வழக்கம். அந்த ஆண்டு கைசிகி மண்டபத்தில் நாலு பேர் நின்று ஒப்புக்கு ஏட்டுச்சுவடியை படித்து மீண்டனர். அந்நிகழ்வு ராமானுஜத்தை தொந்தரவு செய்தது. அதனை ஒரு சீண்டலாகவும், அமங்கலமாகவும் எடுத்துக் கொள்கிறார்.

நேராக நாகர்கோவில் சென்றவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீட்டில் ‘முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்த தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் ஒரு மடத்தனம். பாரம்பரியமா இருக்குற விஷயத்த ஒரு மசோதா கொண்டு நிறுத்திறலாம்னா அதுக்கு பேர் கிறுக்குத்தனம்’ எனக் கொதிப்பு அடங்காமல் பேசிக் கொண்டேயிருக்கிறார். இதனை அப்போது கேட்ட ஆய்வாளர் அ.கா. பெருமாள் என்னிடம் சொன்னார்.
தேவதாசி அமைப்பு திருக்குறுங்குடி கோவிலில் இருந்திருந்தால் அந்நிகழ்த்துக் கலை பேணப்பட்டிருக்கும். அக்கலை நிகழும் வடிவை முழுதும் அறிந்தவர்கள் அதனை நிகழ்த்திய ஆடற்மகளிர் என்பது அவர் நம்பிக்கை.
அந்த ஆதங்கத்திற்கு நடுவே உள்ள வாதம் முக்கியமானது. ஏறத்தாழ இதே வாதத்தை 1927ல் சட்டசபையில் மசோதாவாக முத்துலட்சுமி ரெட்டி முன்மொழிந்த போது அப்போதைய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சி. விஜயராகவாச்சாரியார் முன்வைத்தார்.
விஜயராகவாச்சாரியார், ‘தேவதாசி முறை புனிதமானது. அது இறைவன் வழிப்பாட்டின் ஒரு அம்சமாக திகழ்வது. அது சமூகத்தில் நீடித்து நிலைத்திருக்க வேண்டும்’ என சட்டசபையில் குறிப்பிட்டார்.
அதற்காக முத்துலட்சுமி உட்பட நீதிக்கட்சியினராலும், ஈ.வெ.ரா. வின் சுயமரியாதை இயக்கத்தாலும் அடிப்படைவாதி என்று வசைப்பாடப்பட்டார். இந்நிகழ்வு ஈ.வெ.ரா நடத்தி வந்த குடியரசு இதழில் பதிவாகியுள்ளது. அப்போதைய நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் காங்கிரஸ் பிராமணர்களால் ஒன்றிணைந்த அடிப்படைவாத கட்சி என்றே முன்வைத்தது.
ஆனால் விஜயராகவாச்சாரியார் இந்து சமய சட்ட மறுமலர்ச்சியின் முக்கியமான சில மசோதாக்களை முன்வைத்து நிறைவேற்றியவர்களுள் ஒருவர்.
விஜயராகவாச்சாரியார் பெண்களுக்கு பெற்றோரின் சொத்துரிமை, பருவம் அடைந்த பின்னே பெண்ணுக்கு திருமணம் என தேவையான அனைத்து சீர்திருத்தங்களுக்கும் குரல் கொடுத்தவர். தீண்டாமைக்கு எதிராக தன் தரப்பை வலுவாக முன்வைத்தவர். அதற்காக சுவாமி ஷ்ரத்தானந்தாவுடன் இணைந்து செயல்பட்டவர். இந்தியாவில் காந்தியின் வருகைக்கு பின் மிதவாத காங்கிரஸ் கொள்கைகளை ஏற்காமல் அவை பழமைவாதம் என மறுத்து காந்திய கொள்கைகளை மெட்ராஸ் மாகாணத்தில் பரப்புபவராக அறியப்பட்டவர். இந்தியாவின் முதல் அரசியலமைப்பு நகலை தயாரித்தவரும் விஜயராகவாச்சாரியாரே.

தேவதாசி முறை ஒழிப்பில் அவரது குரல் என்ன என எதிர் தரப்பு சிந்திக்கவில்லை, அவரிடம் கேட்கவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. மாறாக அவரை வசைபாடி, அவதூறு பேசுவதிலேயே ஆர்வம் காட்டினர்.
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கால் 1927ல் நடந்த வாக்கெடுப்பில் மசோதா நிறைவேறாமல் ஆனது எனக் கூறினர். ஆனால் 1929ல் மீண்டும் நடந்த வாக்கெடுப்பின் போது நீதிக்கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்த சோமயாஜுலு ‘விவாதமின்றி தேவதாசி முறை ஒழிப்பு அவசரகதியில் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது’ என்றார். இம்மசோதாவை ஆதரித்த அதே கட்சியின் கோட்டி ரெட்டி, அதனை தான் ஆதரிக்கும் போதும் அதன் மைய நோக்கம் தேவதாசியின் நடனம், கச்சேரி தடை செய்வதாக அமையக் கூடாது என வாதிட்டார். இவர்கள் அனைவரும் பழமைவாதி, அடிப்படைவாதி என முத்திரை குத்தப்பட்டனர்.
இம்மசோதா நிறைவேற மக்கள் வாக்கெடுப்பு ஒன்று நிகழ்த்தலாம் என சட்டசபையில் முடிவான போது அதனை ஈ.வெ.ரா கடுமையாக கண்டித்து குடியரசு இதழில் எழுதினார். சமூக சீர்கேடான பழக்கத்தை நிறுத்த மக்களிடம் வாக்கெடுப்பு நிகழ்த்துவது மடத்தனம் என வசைபாடினார்.
மூன்று ஆண்டுகள் தொடர்ந்து போராடியும் மசோதா நிறைவேறாததற்கு மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மட்டும் காரணம் என நினைத்த முத்துலட்சுமி காங்கிரஸ் தலைவர் காந்தியின் ஆதரவு வேண்டி அவருக்கே நேரடியாக கடிதம் எழுதினார். காந்தி அதற்கு தன் ஆதரவை குறிப்பிட்ட போதும் அதற்கு முன் முத்துலட்சுமியின் செயல்களை பாராட்டிய போதும், மேற்குலக நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாம் என அவர் குறிப்பிட்டது அப்போதைய தி இந்து இதழில் பதிவாகியிருக்கிறது.
அதன்பின் 1930ல் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் முத்துலட்சுமி ரெட்டியும், சுயமரியாதை கட்சியும் எதனை கவனிக்க தவறிவிட்டனர் என்பது முக்கிய வினா.
விஜயராகவாச்சாரி முதல் ராமானுஜம் வரை ஒரு தரப்பு வெறும் மரபின் குரலா? என்றால் ஆம் மரபின் குரல். ஆனால் அத்தரப்பு சொல்ல நினைத்தது மரபில் ஒரு விஷயம் நெடுங்காலம் வழக்கத்திலிருந்தால் அதனை ஒட்டிய ஆச்சாரங்கள் மட்டுமல்ல சடங்கு, சம்பரதாயங்கள் உட்பட பல பொறுப்புகளும் உள்ளடக்கம் என்பதே. தேவதாசிகளுக்கு அப்படி பல சடங்கு சார்ந்த விதிகளும், பொறுப்புகளும் கோவிலுடன் இணைந்திருந்தன. இதனை நீதிக்கட்சியின் கோட்டி ரெட்டி சட்டசபையில் நடுநிலையாக முன்வைத்த போது அந்நடுநிலைக்காகவே வசைப்பாடவும் பட்டார்.
முத்துலட்சுமி பார்த்த தேவதாசிகள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்தவர்கள். 18 ஆம் நூற்றாண்டு தொடங்கி தமிழகத்தில் நிலையான அரசியல் இல்லை என்பதாலே குழப்பங்கள் பல நிகழ்ந்தன. இதற்கு ஒருவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்ல இயலாது. ஆங்கில ஆட்சி தொடங்கிய காலகட்டத்தில் நிலையான பெரிய அரசுகள் எதுவும் தமிழகத்திலில்லை. எனவே குட்டிக் குட்டி பாளையக்காரர்கள் தங்களை அரசுகள் என நிறுவிக் கொண்டனர். ஒவ்வொருவரும் அடுத்தவரை கொள்ளையிடுவதும்,போரிடுவதுமே இருநூறாண்டுகளாக நிகழ்ந்துள்ளது. ஆங்கில அரசு முழு பொறுப்புகளையும் தன் கையில் எடுக்கும் போது நாம் பண்பாடும், கலாசாரமும் அற்றவர்களாகவே காணப்பட்டோம். தஞ்சை பெரிய கோவில் தொடங்கி தென்காசி கோவில் வரை அனைத்தும் காடு மண்டி கிடந்துள்ளது. தென்காசி கோவிலை மலம் கழிக்கும் இடமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கோவிலுடன் பாத்தியப்பட்ட தேவதாசிகளின் நிலை எப்படி இருந்திருக்கும் என ஒருவரால் ஊகிக்க முடியும்.
ஆனால் வரலாற்றில் தேவதாசிகளுக்கு இருந்த இடமும், பொறுப்பும் என்ன என்பது இதற்கு நிகராக கருத்தில் கொள்ளப்பட வேண்டியது.
2
தேவதாசி அமைப்பு தமிழகத்தில் மிக வலுவாக இருந்த இடம் தஞ்சாவூர் மாகாணம். தேவதாசி முறை ஒழிப்பு சட்டத்திற்கு அறுபது ஆண்டுகள் பிறகும் அவ்வமைப்பு வலுவாக இருந்த இடம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கு சோழர் ஆட்சி ஒரு காரணம் என்றால், திருவாரூர் கோவில் மற்றொன்று.
இராஜராஜ சோழன் தஞ்சை கோவிலை நிர்மாணித்த போது அங்கே ஆடற்மகளிர் வேண்டி மொத்த சோழ தேசத்திலிருந்து 400 பேரை தஞ்சைக்குக் கொண்டு வந்தான். அவர்களுக்கான நட்டுவனார்கள், கானம் பாடுபவர்கள், வங்கியம் புரிபவர்கள், பாடவியம் புரிபவர்கள், உடுக்கை வாசிப்பவர்கள், வீணை வாசிப்பவர்கள், ஆரியம் வாசிப்பவர்கள், மத்தளம் இசைப்பவர்கள், சங்கு ஊதுபவர்கள், பக்க வாத்தியக்காரர்கள், தமிழ் பாடுபவர்கள், அணுக்கர்கள், சகடை கொட்டிகள், பணி ஆண்கள், நிர்வாகிகள் என ஆடல் அரசிகளுக்காக ஒரு ஊரையே நியமித்ததற்கு கோவிலில் கல்வெட்டு சான்று உள்ளது. இதில் ஆடற்மகளிரே பிரதானம் அவர்களை ஒட்டியே பிறரது வாழ்க்கை அமைந்திருக்கிறது.
ஆடற்மகளிர் தங்குவதற்கு கோவிலின் தெற்கு பக்கமும், வடக்கு பக்கமும் தென்சிறகு, வடசிறகு எனப் பக்கத்திற்கு இரண்டு பிரிவுகளாக வீடுகளைக் கட்டி ஒவ்வொருவருக்கு ஒரு வீடு என நியமித்துள்ளான். இப்படி அமைந்த தெருக்களுக்கு தெற்கு தளிச்சேரி, வடக்கு தளிச்சேரி எனப் பெயரிடப்பட்டது. இதில் எட்டில் ஒரு பங்கினர் திருவாரூர் கோவிலோடு தொடர்புடையவர்கள்.
திருவாரூர் கோவிலில் ஆடற்மகளிர் வலுவாக இருந்ததற்கு காரணம் அக்கோவிலின் புராண நம்பிக்கை. சிவ ஸ்தலங்களில் தமிழகத்தில் ஆடலுக்கு முக்கியமாக சொல்லப்படுவது இரண்டு கோவில்கள். ஒன்று சிதம்பரம் அங்கே நடனம் புரிபவராக ஆடவல்லான் இருப்பதாக நம்பப்படுகிறது. மற்றொன்று திருவாரூர் தியாகராஜர் கோவில். இங்கே அரசனாக அமர்ந்திருக்கும் சிவன் நடன மங்கையரின் ஆடல் கண்டு களிப்பவராக வீற்றிருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. எனவே இக்கோவிலில் ஆடும் ஆடற்மகளிருக்கே முதன்மை இடம்.
இந்திர சபைக்கு நிகராக அமைக்கப் பெற்ற திருவாரூர் தேவாசிரியன் மண்டபத்தில் ஆடற்மகளிரே பிரதானம். இங்கே சிவனுக்கு இணையாக பரதம் அறிந்தவர்கள் இவர்கள். திருவாரூர் கோவிலில் தேவதாசியாக பொட்டு கட்டு சடங்கு நிகழ்த்திய பின்னே பிற கோவிலுக்கு தேவதாசியாக செல்வது ஒரு மரபாக இருந்திருக்கிறது.
இங்கே திருவாரூரை பிரதானமாக குறிப்பிட காரணம். இக்கோவிலோடு இன்று வழக்கில் இருக்கும் திருவிழாக்களை ஒருவர் கருத்தில் கொள்ளலாம். திருவாரூர் தேர் திருவிழா தமிழகத்திலேயே பிரமாண்டமானது. ஆனால் இன்று இந்நிகழ்வே அருகி நிகழ்கிறது. 9 ஆம் நூற்றாண்டு (ஆதித்த சோழன்) தொடங்கி 18 ஆம் நூற்றாண்டு (தஞ்சை மராட்டியர்கள் ஆட்சி) வரை திருவாரூர் தேர் திருவிழா ஒவ்வொராண்டும் 50 நாட்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது. தை மாதம் தொடங்கி பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தேர் உலா வரும். இதற்கான சான்றுகள் எனக் கல்வெட்டு முதல் பிற்கால மோடி அவணங்கள் வரை உள்ளன.

இந்த ஐம்பது நாளும் நயினார் [i] பூஜை சார்ந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பு, முட்டுக்காரர் இசை சார்ந்த அனைத்திற்கும் பொறுப்பு, அதே போல் அங்கே நிகழ்த்தப்படும் அனைத்து கலை நிகழ்ச்சிக்கும் ஆடற்மகளிரே பொறுப்பு. விழாவின் இறுதி நாளில் தேர் உலா வரும் போது அதற்கு முன் தலைக்கோலி [ii] கலை நிகழ்த்தி ஆடி வர வேண்டும். அவளே பிற வாத்தியக்காரர்களுக்கும், நயினாருக்கும் கட்டளையிடுபவள். அவள் பார்வதியின் அம்சம் என்பது நம்பிக்கை. மேலும் திருவாரூர் கோவிலில் தெய்வச் சிலைகளுக்கு இணையாக கிழக்கு கோபுரத்தில் உள்ளது ஆடற்மகளிர் சிற்பத் தொகுப்பு ஒன்றே. சோழர் காலத்து கல்வெட்டு அனைத்தும் அரசனின் ஆணையாக எழுதப்பட்டிருந்தாலும். ஆடற்மகளிர் பற்றி குறிப்பிடும் கல்வெட்டுகள் இறைவனின் வாயிலாக சொல்லப்படும் ஆணையாகவே எழுதப்பட்டுள்ளது.
வரலாற்றில் ஒரு சமூகத்தினரை வைத்து பார்க்க துணியும் போது அவர்கள் வரலாறு நெடுக எந்நிலையில் இருந்தனர் என கருத்தில் கொள்வது அவசியம்.
எனவே, ஒருவர் தேவதாசியின் வரலாற்று நிலையை கருத்தில் கொள்கிறார் என்றால் முதன்மையாக திருவாரூர் கோவிலில் இருந்தே தொடங்கியிருக்க வேண்டும். அங்கிருந்து ஒரு சித்திரத்தை அடைய முயற்சித்திருப்பாரானால் அவர் சென்று சேர்ந்திருக்கும் புள்ளி என்பது தேவதாசி சமூகத்தின் வளர்ச்சி வீழ்ச்சி மட்டுமல்லாமல் பண்பாட்டு ரீதியாக தேவதாசி மரபோடு பின்னப்பட்டிருக்கும் கடமைகள் என்னென்ன என்பதாகவும் இருந்திருக்கும். அதன் வழியாக மரபிலிருந்து ஒரு பண்பாட்டு புரிதலும், பழக்க வழக்கமும் நவீன தமிழகத்திற்கு கடத்தப்பட்டிருக்கும்.
நவீன சமூகம் என்பது மரபை முற்றாக அழித்து புதிய ஒன்றை உருவாக்குவது அல்ல, மரபிலிருந்த பிழை அகற்றி அதிலிருந்து எழுந்த இயல்பான பரிணாம வளர்ச்சியே. அன்று நவீன கல்வி கற்று மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டிக்கும், சுயமரியாதையை முன்னிறுத்திய ஈ.வெ.ரா போன்றவர்களுக்கும் இந்த வரலாற்று புரிதல் இல்லாததும், அவர்களே பிரதான அரசியல் குரலாக அமைந்ததும் பண்பாடு, கலை சார்ந்த தமிழகத்தின் வீழ்ச்சிக்கு முதல் காரணமாக அமைந்தது.
3
வரலாற்றில் தெய்வத்திற்கு இணையாக கொள்ளத்தக்கவர்கள் என மூவரை மட்டுமே குறிப்பிடுவது வழக்கம். அரசன், பூசாரி, மூன்றாவதாக ஆடற்மகளிர். அவர்களை அந்நிலையில் நிறுத்துவது கௌரவம் மட்டும் அல்ல அவர்களுக்கான பண்பாட்டு, சமூக கடமையும் அதனூடே சேர்த்து அமைவதும் கூட.
சதிர் என்னும் தேவதாசி சமூகத்தால் கோவிலில் ஆடப்பட்ட நிகழ்த்துக்கலை பின்னாளில் நவீனமாக்கப்பட்டு தமிழகத்தில் பரதம் ஆக வழக்கில் உள்ளது பற்றி அறிந்திருப்போம். அதனைப் பற்றிய விரிவான வரலாற்று சித்திரம் கொண்ட கட்டுரை ஒன்றை (‘ஒரு தலைமுறையின் விதி’) எழுத்தாளர் சுசித்ரா நீலி மின்னிதழிலேயே எழுதியுள்ளார்.
ஆனால் தமிழகத்தில் சதிர் பரதம் போல் ஒற்றை நிகழ்த்துக்கலையாக இருக்கவில்லை. சதிர் ஒவ்வொரு கோவிலோடும் பிணைக்கப்பட்ட சடங்காகவே இருந்துள்ளது.
எனவே அக்கலையில் குறிப்பிட்ட கோவில் சார்ந்த புராண, இதிகாச, பண்பாட்டு, சமூக வேறுபாட்டுடனே பேணப்பட்டும் வந்தது.
உதாரணத்திற்கு, திருவாரூர் கோவிலில் ஶ்ரீபலியின் போது ஈசான மூலையில் மட்டும் மத்தளத்தை தலைக்கு மேல் வைத்து இசைப்பர். இதற்கு ‘பூத நிருத்தம்’ என்று பெயர். பூதங்களுக்காக இசைப்படுவது. பூத நிருத்தம் இசைக்கும் போது மத்தளத்தின் தாள கதியே மாறுபடும், அதற்காக தனி நாட்டிய அசைவுகளும், அபிநயங்களும் இருந்துள்ளன என்பது கல்வெட்டு சான்று. இம்முறை தமிழகத்தில் வேறெங்கும் இல்லாது திருவாரூர் கோவிலின் தனிச் சிறப்பு.

மேற்சொன்ன திருக்குறுங்குடியே எடுத்துக் கொள்வோம். திருக்குறுங்குடி பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கி திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் தொடர்புடையது. எனவே பண்பாட்டு ரீதியாகவும் கேரளாவை ஒத்தது. ஆடைகள் தொடங்கி ஆபரணங்கள், விழி அசைவு கூட கேரள சாயலிலே இடம்பெற வேண்டும். ஆனால் அதே வேளையில் திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட மத்திய பண்பாட்டுடன் இணைந்ததும் அல்ல தமிழ் நிலத்துடையது. எனவே கேரள நிகழ்த்துக்கலையான கதகளியோடும் ஒத்திசைவு கொண்டதல்ல.
இந்த நுண்மையான நடைமுறை சிக்கலை சுந்தர ராமசாமி வீட்டிலிருந்து கிளம்பி கைசிக புராணத்தை மீட்க நினைத்த ராமானுஜம் எதிர் கொள்கிறார். இதன் விரிவான சித்திரம் பரத கலைஞரான அனிதா ரத்னம் சே.ராமானுஜம் பற்றி எழுதிய நினைவு குறிப்பில் கிடைக்கிறது.
திருக்குறுங்குடியின் கைசிக புராணம் சே. ராமானுஜத்தின் ஐந்து ஆண்டு தொடர் போராட்டத்தால் மீட்டெடுக்கப்பட்டது. ராமானுஜத்தின் வாழ்நாள் சாதனை எனச் சொல்லத்தக்கது. பலரது கூட்டு உழைப்பு. ஆனால் ராமானுஜம் அதனைப் பற்றி அ.கா. பெருமாளிடம் குறிப்பிடும் போது, ‘இதன் பெருமை ஒருவரை சேருமென்றால் தான் சந்தித்த ஒரு பெண்’ என்கிறார்.
அவர் சந்தித்தவர் தேவதாசி மரபை சேர்ந்த கடைசி தலைமுறை பெண்களுள் ஒருவர். ராமானுஜம் அவரை சந்திக்கும் இடம் சுவாரஸ்யமானது.
திருக்குறுங்குடி கோவிலில் கடைசியாக கைசிக புராணம் முழுவதுமாக நிகழ்ந்தது 1955ல் அனிதா ரத்னத்தின் கொள்ளு தாத்தா டி.வி. சுந்தரம் ஐயங்கார் கோவிலின் புரவலராக இருந்த போது. 1955ல் அவர் மறைவுக்கு பின் கோவில் ஏகாதசி நிகழ்வில் கைசிக புராணம் நடிப்பதும் நிறுத்தப்படுகிறது. கிட்டதட்ட நாற்பது ஆண்டில் அது சார்ந்த கலைஞர்களும் மறைந்துவிட்டனர்.
முதல் காரணம், இது பிற நிகழ்த்துக் கலை போல் ஆண்டுதோறும் நிகழ்வதில்லை என்பது. மகாலய ஏகாதசி ஒட்டி ஆண்டுக்கு ஒரு முறை நிகழ்ந்துள்ளது. இரண்டாவது, 90 களில் தேவதாசிகள் யாரும் தங்களை அப்படி அழைப்பதை விரும்பவில்லை. எனவே அவர்கள் நவீன சமூகத்தில் குடும்பமாக கலந்து மறைய தொடங்கி விட்டனர்.
சே.ராமானுஜம் முதலில் மெலட்டூர் பாகவ மேளா கலைஞர்களைக் கொண்டு கையில் கிடைத்த ஏட்டு வடிவை நவீனமாக மாற்ற நாடக கலைஞர் ந.முத்துசாமி, அனிதா ரத்னம் உதவியை நாடுகிறார்.
ஆடை வடிவு தொடங்கி ஒவ்வொன்றாக நினைவிலிருந்து மீட்டு சரி செய்கிறார். இசை சார்ந்த நுணுக்கங்களை திருவாரூர் இசை வேளாளர்களுடன் சேர்ந்து உருவாக்குகிறார். நாடகத்தின் மூல ஏடு தேடிய போது தஞ்சை சரஸ்வதி மஹாலில் சமஸ்கிருத பிரதி கிடைக்கிறது. அதனை தமிழாக்கம் செய்யும் முயற்சி கைக்கூடவில்லை. சோர்ந்திருந்த போது திருக்குறுங்குடியைச் சேர்ந்த திருநாராயணன் நம்பி தமிழ் ஏட்டை ராமானுஜத்திற்கு தருகிறார். ஒருவன் ஒன்றில் விடாமல் முட்டும் போது கிடைக்கும் அதிர்ஷ்டம். அனிதா ரத்னம் இதனை திருநம்பிரான் கை வந்தமர்ந்த இடம் என்கிறார். ஏட்டு பிரதி ஆறு மணி நேரம் வருகிறது. அதனை சுருக்கி நான்கு மணி நேரமாக நவீனமாக்குகின்றனர். நிகழ்வு அனைத்தும் நவீன வடிவம் ஆனால் தன் நினைவிலிருந்த அதே புராண வடிவு வேண்டுமென பிடிவாதமாக இருக்கிறார்.
நான்கு வருட உழைப்பிற்கு பின் 1999ல் ஒரு ஒத்திகை அரங்கேற்றம் நிகழ்கிறது. நிகழ்வு தொடங்கி சில நிமிடங்களிலேயே ராமானுஜம் முகம் சுளிக்கிறார். ஒன்று நன்றாக வரவில்லையென்றால் அவர் முக இறுக்கமாகி, உடல் தளர்வடங்கி, கீழுதடு மட்டும் சற்று கோணல் கொள்ளும்.
ந. முத்துசாமி காரணம் கேட்ட போது, “தெரியல ஏதோ கொறையுது. மனசுல நிக்கிறது மேடையில வரல” என்கிறார்.
ஆடும் முறையில் ஏதோ சிக்கல் என்பது ராமானுஜத்தின் வாதம். முத்துசாமியும், அனிதாவும் ஒவ்வொன்றாக மாற்றிப் பார்க்கின்றனர். ராமானுஜம் திருப்தி கொள்ளவில்லை. முத்துசாமி கோபம் கொள்கிறார். பிற கலைஞர்களும் ராமானுஜத்தின் மேல் எரிச்சல் கொண்டிருக்கக் கூடும். ஆனால் அவர் குணமறிந்து அவரே சரி செய்வார் என விட்டுவிட்டனர்.
ராமானுஜம் திருநெல்வேலி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம் எனப் பல மாவட்டங்களாக தேவதாசியை தேடி அலைகின்றார்.
இறுதியாக, நாகர்கோவிலில் தேவதாசி ஒருவர் திருக்குறுங்குடி கோவிலோடு சம்பந்தம் கொண்டு இருந்தவரை அறிந்து அவரை காண செல்கின்றார். அவர் தன் அடையாளம் மறந்து குடும்பத்தோடு வாழ்ந்து வருபவர். தொண்ணூறு வயதிற்கு மேலான பாட்டி. பழைய நினைவுகள் மங்கி பேரக் குழந்தைகளின் பாதுகாப்பில் இருப்பவர்.
ராமானுஜம் உதவ கேட்கும் போது முதலில் மறுக்கிறார். தொடர்ந்து வற்புறுத்தவே ஒப்புக் கொள்கிறார். ராமானுஜம் கைசிக நாடக கலைஞர்களை அம்மா முன் நடித்துக் காட்டச் சொல்கிறார். அவர்கள் அபிநயம் பிடித்து காட்டுகின்றனர்.
அம்மாள் தானே ‘மஞ்சனம் அழகிய நம்பி’ என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டுகிறார். இரண்டிற்கும் என்ன மாறுபாடு என யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கேயே ராமானுஜம் இது தான் இப்படி தான் பண்ணனும் என்கிறார்.
அவர் அம்மாவிடம் என்ன மாறிருக்கு எனக் கேட்ட போது, “ஒரு சௌக்கியம் கூடியிருக்கு” பாட்டியின் சிரிப்பு.
பின் அவரே கலைஞர்களின் கை பிடித்து சிறு மாற்றங்கள் செய்துக் காட்டுகிறார். அம்மா முழு நாடகத்திற்கும் அபிநயம் சொல்லிக் கொடுக்கிறார். அதன் பின் நிகழ்ந்த ஒத்திகையை பார்த்த ராமானுஜம் அரங்கேற்ற சம்மதிக்கிறார்.

1999ல் திருக்குறுங்குடி நம்பிரான் ஆலயத்தின் கைசிகி மண்டபத்தின் எதிரே உள்ள திருலோக மண்டபத்தில் கைசிகி நாடகம் கிட்டதட்ட ஐம்பது ஆண்டுகள் பின் அரங்கேறுகிறது. இரு தலைமுறையினரால் மறக்கப்பட்ட ஒரு கலை வடிவம். உயிருள்ளவர்களில் ராமானுஜம் கண்ணும், பெயர் தெரியாத தேவதாசி ஒருவரின் உடலும் மட்டுமே அறிந்தது. அது இனி ஆண்டுதோறும் பல நூறு பேரால் பார்க்கப்படும். அதன் முதல் அரங்கேற்றம். அந்நாளில் அங்குள்ளவர்கள் என்ன கொந்தளிப்பு மனநிலையில் இருந்திருப்பர் என ஊகிக்க முடிகிறது. ராமானுஜம் சொல் எழாது மொத்த நாடகத்தையும் கண்ணீருடன் பார்த்தார் என அனிதா குறிப்பிடுகிறார்.
நாடகம் முடிந்ததும் அனிதா ராமானுஜத்திடம், “இப்ப என்ன மாமா மாறிருக்கு?” எனக் கேட்கிறார்.
ராமானுஜம் பதில் சொல்லாமல் வெற்று அரங்கையே கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறார். பின் சிறு புன்னகையுடன் அனிதாவிற்கு பதில் சொல்கிறார்.
“நீங்க பரதத்துல கை முத்திரை பிடிக்கும் போது இறுக்கமா பிடிப்பீங்க. நான் சின்ன வயசுல பாத்த நாடக கலைஞர்கள் கைய தளர்வா பிடிப்பாங்க. நான் மீண்டும் நாகர்கோவில்ல அந்த அம்மா அபிநயத்துல பாத்தது எனக்குள்ள இருந்த சின்ன பையன் பாத்த அந்த பழைய நாடகம்.” என்கிறார்.
“அவன் சம்மதிக்கணும்லா” எனப் பெரிய உடல் குலுங்க குழந்தையின் சிரிப்பு.

பின், ராமானுஜம் தனக்கு தானே சொல்லிக் கொள்வது போல் அனிதாவிடம், “அந்த தளர்வு கையடவு இலகுவா காட்டுறது மட்டுமல்ல. அது ஒரு சௌக்கியமும் கூட. ஆயிரம் வருஷமா அழகிய நம்பிரான மட்டும் அறிஞ்ச கைப் பழக்கத்துல வந்த சௌரியம் அது.” என்கிறார்.
***
அடிக்குறிப்பு:
[i] திருவாரூர் கோவில் மூலவரின் பூசகர் நயினார் என்றே அழைக்கப்படுவார். தில்லையில் தீக்ஷிதர் போல்.
[ii] தலைக்கோலி – தேவதாசியில் (அடற்மகளிர்) அனைத்து கலைகளையும் அறிந்து ஆரணங்கு எனப் பெயர் கொண்டவர்களுக்கு இவ்விருது பெயர் வழங்கப்படும். இவள் பார்வதிக்கு நிகராக கலை அறிந்தவளாக கருதப்படுவாள். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் புக்கத்துறை வல்லவத் தலைக்கோலியும், விக்கிரம சோழன் காலத்தில் தியாக வினோதத் தலைக்கோலியும் தேர் முன் ஆடி வந்ததாகக் கல்வெட்டு குறிப்புகள் உள்ளன.
***
- சி. விஜயராகவாச்சாரியார் – தமிழ் விக்கி
- சே. ராமானுஜம் – தமிழ்விக்கி
- திருவாரூர் ஆடற்கலை – தமிழ்விக்கி
- கைசிக புராண நாடகம் – தமிழ்விக்கி
- ஜி.எஸ்.எஸ்.வி. நவின் – தமிழ்விக்கி
***

அபாரமான மிகுந்த உழைப்பைக் கோரும் கட்டுரை.. சிறப்பாக கட்டுக்கோப்பாக எழுதியுள்ளீர்கள். வரலாற்று நிகழ்வுகள் அடுக்கப்பட்ட விதமும் இடையிடையே பேசும் உங்களது குரலும் லயமுடன் கலந்துள்ளது. இன்றும் இந்த ஆடல் நடைபெறுகிறதா?
விஜயராகாவாச்சாரியாரும் ராமானுஜரும் இன்ன பிறரும் ஏன் இவ்வளவு தீவிரமாக அதனை முன் வைக்கிறார்கள், அதற்கும் தேவதாசியின் துயர் வாழ்வுக்கும் இடையில் தொடர்புக் கம்பிகள் இல்லை என்பதையும் இன்னும் சில பத்திகளில் எழுதியிருக்கலாமோ என்றும் தோன்றியது.. கட்டுரையின் முடிவு மிக நன்றாக கவிதையைப் போல் முடிவது மிகுந்த அழகாய் உள்ளது.. வாழ்த்துக்கள்… ❤️
ஆம், மார்கழி ஏகாதசி அன்று நிகழ்கிறது
Commentவரலாற்றில் ஒரு சமூகத்தினரை வைத்து பார்க்க துணியும் போது அவர்கள் வரலாறு நெடுக எந்நிலையில் இருந்தனர் என கருத்தில் கொள்வது அவசியம்.
அருமை