போர்க்காலத்தில் தத்துவம் தீட்டிய ஆக்ஸ்போர்டு நால்வர் – விவேக் ராதாகிருஷ்ணன்

மேலைநாட்டுத் தத்துவ வரலாறு நீண்ட காலமாக ஆண்களின், குறிப்பாக இல்லறப் பிணைப்பற்ற பிரம்மச்சாரிகளின் அல்லது தான்தோன்றிய மேதைகளின் சரித்திரமாகவே இருந்து வருகிறது. அதன் ஏடுகள் என்றுமே ஆடவர்களின் களமாக, அவர்களின் கருத்துக்கள், கனவுகள், ஏக்கங்கள், எதிர்பார்ப்புகளின் எதிரொலியாகவே இருந்திருக்கின்றன. ஆனால், இரண்டாம் உலகப்போர் மூண்ட இருள் படர்ந்த காலகட்டத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பம் ஏற்பட்டது. இளங்கலை மற்றும் முதுநிலை ஆண் மாணவர்கள் ராணுவ சேவைக்கும், உளவுத்துறைப் பணிக்கும், மற்றும் ஒயிட்ஹால் அமைச்சகங்களுக்கும் கிளம்பிச் செல்ல, பல்கலைக்கழகத்தின் வளாகமும், வகுப்பறைகளும் காலியாகி இருந்தன. அவர்களிடத்தில், தனித்துவம் மிகுந்த, மனச்சான்று மிக்க, முனைப்பான இளமங்கையர் வட்டம் ஒன்று முகிழ்த்தெழுந்தது. இந்த சிறுகுழுவில் மலர்ந்த நான்கு சிறந்த சிந்தனையாளர்கள், எலிசபெத் ஆன்ஸ்கோம் (Elizabeth Anscombe), பிலிப்பா ஃபுட் (Philippa Ruth Foot), ஐரிஸ் முர்டாக் (Dame Jean Iris Murdoch) மற்றும் மேரி மிட்ஜ்லி (Mary Beatrice Midgley) ஆவர். அதுவரை கருத்துப் போராலும், வாதவீரத்தாலும் விளைந்த ஆண்மயமான ஆக்ஸ்போர்டு தத்துவம், இந்நால்வரின் அறிவார்ந்த நட்பினாலும், கூட்டுச்சிந்தனையினாலும் உருமாறியது. வெறிச்சோடிய விரிவுரையரங்குகளிலும், மாணவர் அமைப்பு கூடுகைகளிலும், நெரிசலான டீ கடைகளிலும் இடையறாது சந்தித்து, கருத்தாடலில் ஈடுபட்ட இந்நால்வர், 20-ஆம் நூற்றாண்டுத் தத்துவவியலில் பெண்களுக்கான சிந்தனைச் சோலையை உருவாக்கினர். அதுவரை இருளுற்ற முட்டுச்சந்தை நோக்கிப் பயணித்த தத்துவப் போக்கிற்கு, இந்த நான்கு பெண் மெய்யியலாளாளர்கள் புதிய ஒளிர்ப் பாதையைக் காட்டினர்.
பொதுப்பார்வையில் 20-ஆம் நூற்றாண்டுத் தத்துவம் எனும்போது, ஐரோப்பிய இருத்தலிய இயக்கம், மார்க்சிய ஃபிராங்க்பர்ட் பள்ளி, மற்றும் பின்நவினத்துவம் ஆகியவை மட்டுமே நினைவுக்கு வரும். ஆனால் அந்நூற்றாண்டு தொடக்கத்தில் பிரிட்டனில், தர்க்கக் கூர்மையையும் இயல்பறிவையும் அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு மெய்யியல் (analytic philosophy) என்ற ஓர் இயக்கத்தை பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் மற்றும் ஜி.இ. மூர் தொடங்கிவைத்தனர். இவர்களது வழியைப் பின்பற்றிய ஏ.ஜே.அயர் எனும் ஆக்ஸ்போர்டு தத்துவவியலாளர், தர்க்க நேர்காட்சிவாதம் (logical positivism) எனும் கோட்பாட்டை தன் மொழி, மெய்ம்மை, மற்றும் தர்க்கம் (1936) (Language, Truth and Logic[i]) நூல் வழி அறிமுகப்படுத்தினார். இதன்படி, அறிவியலாலோ தர்க்கத்தினாலோ மெய்ப்பிக்க முடியாத ஒவ்வொரு கூற்றும் பொருளற்ற அபத்தமாகும். மனித நலன், அழகு, அன்பு, ஆன்மா போன்றவற்றின் அடிப்படை இயல்பையும் உட்பொருளையும் விளக்கும் மரபார்ந்த தத்துவக் கேள்விகள் வெற்றுப் பேச்செனக் குப்பையில் வீசப்பட வேண்டியவை என்பதே இக்கூற்றின் சாரம். இப்படி, அறிவியல் மற்றும் தர்க்க தராசில் அளந்து பார்க்க முடியாத அறம் மற்றும் ஒழுக்க நெறிமுறையின் கதியும் இதேதான். அயரின் பார்வையில் நம் அறநெறிக் கூற்றுகளும், மதிப்பீடுகளும் வெறும் உணர்வெழுச்சியின் வெளிப்பாடுகளாக அல்லது தனிப்பட்ட விருப்பு-வெறுப்பின் பிரதிபலிப்புகளாக மட்டுமே சுருக்கப்பட்டன. இவ்வாறு அறவியல் என்ற பசும் கிளை தத்துவ விருட்சத்திலிருந்து முறித்தெறியப்பட்டது. இதன் விளைவு, பிரபஞ்சம் என்ற பெறுமதியற்ற, பொருளற்ற பரப்பில், மனிதர்கள் தங்கள் அகவய விருப்பங்களை மட்டும் அக்கறையற்று தேடி அலைகிறார்கள் என்பதே ஆகும்.
உலகப்போரின் கொடிய நிதர்சனத்தை, குறிப்பாக நாஜிப் படைகளின் அக்கிரமங்களையும், பெர்கன்-பெல்சன் போன்ற சித்திரவதை முகாம்களின் கொடூரங்களையும், கவனித்து வந்த ஆக்ஸ்போர்டு நால்வர், புறவய மதிப்பீடுகளற்ற அகவயவாத அறவியல் கோட்பாட்டை மனித அறிவின் முழுமுற்றான வீழ்ச்சியாகவே கருதினர். இனப்படுகொலை போன்ற கொடிய தீவினையை, அவரவரின் அளவுகோலற்ற மனவெழுச்சியின் வெளிப்பாடாகக் காண்பதை அவர்கள் முற்றிலுமாக மறுத்தனர். எனவே, இந்நால்வரும் கூட்டாக, தர்க்க நேர்காட்சிவாதிகள் அறிவியல் உண்மைகளுக்கும் நெறிமுறை மதிப்பீடுகளுக்கும் இடையே எழுப்பிய இரும்புச் சுவரைத் தகர்த்தனர். மேலும், நம் அறநெறிக் கருத்தாக்கங்களையும் அறச்சொல்லாடல்களையும் ஒழுக்க நெறிகளையும், மனித இயல்பு, மலர்ச்சி மற்றும் தேவைகள் பற்றிய புறவய உண்மையில் வேரூன்றச் செய்தனர். மனிதர்களை உயரியல்புகளைக் கொண்ட இயற்கையின் உயிரினங்களாகக் கண்டனர். இதைவிடப் புரட்சிகரமானது, இந்நால்வர் தத்துவவியலைப் பயின்ற முறையே. பிறரைப் பகையாளராகப் பாவித்து, மாற்றுத்தரப்பை எதிர்த்தரப்பாக எண்ணி, வேறுபாடுகளை முரண்பாடுகளாக்கி, விவாதங்களை வெல்லும் களமாக மட்டுமே பார்த்த ஒரு ஆணாதிக்க அறிவுச் சூழல் ஆக்ஸ்போர்டில் நிலவி வந்தது. இதற்கு மாறாக, இந்த நான்கு பெண்களும் தத்துவத்தைத் தோழமையோடு கூட்டாக மேற்கொள்ளும் தொய்வற்ற தேடலாகவும், தொடர்ச்சியான உரையாடலாகவும் கருதினர். இந்நால்வர் தத்துவத்தைப் பயின்ற விதம், நாலடியாரின் பின்வரும் பாடலை நினைவுப்படுத்துகிறது:
தவலருந் தொல்கேள்வித் தன்மை யுடையா
ரிகலில ரெஃகுடையா தம்முட் – குழீஇ
நகலி னினிதாயிற் காண்பா மகல்வானத்
தும்ப ருறைவார் பதி.[ii]
அநீதி மறுத்தலும், அறம் நாட்டலும்: எலிசபெத் ஆன்ஸ்கோம் மற்றும் பிலிப்பா ஃபுட்
ஆக்ஸ்போர்டு நான்மணிகளுள், யாரிடத்தும் இணங்காத புரட்சியுணர்வுடன் கூடிய செயல்முனைப்பைக் கொண்ட சிந்தனையாளராகத் திகழ்ந்தவர் எலிசபெத் ஆன்ஸ்கோம் (1919–2001). ஆங்கிலிக்கத் திருச்சபை மரபில் பிறந்து வளர்ந்த ஆன்ஸ்கோம், தன் பதின்பருவத்தில் அதிகாரத்திற்கு அடிபணியாத கத்தோலிக்கர்களின் வீரவரலாற்றைப் படித்து ஈர்க்கப்பட்டு, ரோமன் கத்தோலிக்கத்தை ஏற்றுக்கொண்டார். இந்த சமயப் பிரிவு மாற்றத்தினால் தன் குடும்பத்திலிருந்து (குறிப்பாக தந்தையிடமிருந்து) வந்த எதிர்ப்பை மீறி, நன்கு படித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். தத்துவமும் கிரேக்க-லத்தீன் செவ்விலக்கியங்களும் இணைந்த Literae Humaniores என்ற படிப்பை மேற்கொண்டார். ஓர் இளங்கலை மாணவியாக இருந்தாலும், அறத்திற்குப் புறம்பாகச் செய்யத் தூண்டும் அதிகாரக் குரலுக்கோ, கால நிர்ப்பந்தத்திற்கோ, சூழலின் அழுத்தத்திற்கோ சிறிதும் சமரசமற்ற மறுப்பைத் தெரிவிக்கக்கூடியவராக இருந்தார் ஆன்ஸ்கோம். 1939-ல் இரண்டாம் உலகப்போரில் பங்குபெற்ற பிரிட்டனின் போர்த் திட்டங்களை கண்டித்து சர்ச்சைக்குரிய துண்டறிக்கை ஒன்றை தன் நண்பருடன் எழுதி வெளியிட்டார்.[iii] அந்த துண்டறிக்கையில், பொதுமக்களை திட்டமிட்டு தாக்கும் பிரிட்டனின் போர் யுத்திகள் அறப்போர் மரபு விதிகளை அலட்சியமாக மீறுவதாக கண்டித்தார். சுற்றியிருந்த புத்தகக் கடைகளில் கிடைக்கப்பெற்ற அந்தத் துண்டறிக்கை, சில மாதங்களுக்கு மக்களிடையே, குறிப்பாகக் கத்தோலிக்க அதிகார வட்டத்தில், கடும் விமர்சனப் புயலை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆன்ஸ்கோமின் அதே அறவுணர்ச்சியும், அடிபணியா குணமும், 1956 மே மாதத்தில் மற்றொருமுறை பலரறிந்த கண்டனமாக வெளிப்பட்டது. அப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், முன்னாள் அமெரிக்க அதிபர் ஹாரி எஸ். ட்ரூமனுக்குக் கௌரவ முனைவர் பட்டம் வழங்க இருந்தது. பட்டமளிப்பு விழாவில், அன்று இளநிலை ஆராய்ச்சியாளராக இருந்த ஆன்ஸ்கோம், ஆக்ஸ்போர்டு பீடாதிபதிகள் மற்றும் அறிஞர் பெருமக்கள் நிறைந்திருந்த பேரவையின் முன் நின்று “Non Placet” என்று கர்ஜித்துத் தன் எதிர்ப்பு வாக்கைத் தெரிவித்தார். ஹீரோஷிமாவிலும், நாகசாகியிலும் அணுகுண்டுகளை வீச உத்தரவிட்ட ட்ரூமன், மனித இனத்துக்கு எதிரான படுகொலையாளன் என்று அறிவித்து, அரசியல் நலனுக்காக வழங்கப்படும் எந்தப் பட்டமும் குற்றமற்ற அப்பாவிகளின் படுகொலையை நியாயப்படுத்தாது என்று வாதாடினார்.[iv] ஆன்ஸ்கோமின் கண்டனக் குரலைப் பொருட்படுத்தாமல், பின் நடந்த மற்றொரு பிரமாண்ட நிகழ்வில் ட்ரூமனுக்குக் கௌரவ முனைவர் பட்டத்தை ஆக்ஸ்போர்டு பேரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியது. இதனால் சற்றும் கலங்காத ஆன்ஸ்கோம், 1958-ல் “திரு. ட்ரூமனின் பட்டம்” (“Mr. Truman’s Degree”[v]) எனும் ஒரு விமர்சன அறிக்கையைப் பிரசுரித்து, பிபிசி ஒளிபரப்பொன்றில் ஆக்ஸ்போர்டு அறவியல் மரபைக் கடுமையாகக் கண்டித்தார். இதுவே அவருடைய மிக முக்கியப் படைப்பான “நவீன அறவியல் தத்துவம்” (“Modern Moral Philosophy”[vi]) எனும் கட்டுரைக்கு வித்தாக இருந்தது.
1958-ல் வெளியான இந்தக் கட்டுரையில் ஆன்ஸ்கோம், மேற்கத்திய தத்துவ உலகில் அப்போது கோலோச்சி நின்ற அறவியல் கோட்பாடுகளை மறுதலித்தார். நவீன நெறிமுறை அமைப்புகள் தொடர்ந்து சுமந்து கொண்டிருக்கும் “அறநெறிக் கடப்பாடு”, “கடமைப் பொறுப்பு” ஆகிய இரு கருத்துகளும் இடைக்காலத்தில் இறைநம்பிக்கை என்ற அடித்தளத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டவை. மனித அறிவு வளர்ச்சியால், இறைநம்பிக்கையும் அதைச் சார்ந்த நெறிமுறைச் சட்டங்களும் தடுமாறி, படிப்படியாகச் சிதைந்துபோனாலும், “அறக்கடமை”, “பொறுப்பு” போன்ற கருத்துகள் மட்டும் எஞ்சி நிழலாய் நீடிக்கின்றன. ஆதாரத்தை இழந்த அவை பொருளற்றதாக மட்டுமில்லாமல், நிலையான உறுதிப்பாடற்ற நன்மை-தீமையின் அளவுகோலாக நம்மிடையே உலாவருவதாக விமர்சித்தார். இந்த ஆபத்தான போக்கை எதிர்க்க ஒரே வழி, அறத்தை மனித உளவியலிலும், நம் செயல்த்திறனிலும் மீண்டும் நட்டு வளர்ப்பதே. இதற்காக, ஆன்ஸ்கோம் அரிஸ்டாட்டிலின் ஒழுக்கவியல் கோட்பாட்டை மறுசீரமைத்துப் புதுப்பிக்க அழைப்பு விடுத்தார். இந்த மறுசீரமைப்புக்கு ஆதாரமாக, ஏற்கெனவே உளப்பாடு (1957) (Intention[vii]) என்ற தன் புத்தகத்தில், மனித செயல்பாட்டின் இயங்குமுறையையும், கட்டமைப்பையும் தத்துவ நோக்கில் ஆழ்ந்து ஆராய்ந்து, மனித இயல்பில் வேரூன்றக்கூடிய அறநெறிக் கோட்பாட்டிற்கான வழியை வகுத்தார். ஆன்ஸ்கோம் மனோதத்துவம், மொழியியல் தத்துவம், தத்துவ வரலாறு, அறவியல் ஆகிய துறைகளுக்கு ஈடிணையற்ற, ஆழமான பங்களிப்புகளை ஆற்றினார். அவரின் தத்துவச் சாதனைகளுக்கு அப்பால், தன் சொந்த வாழ்க்கையிலும் பாலினக் கட்டமைப்புகள் போன்ற தேவையற்ற சமூக வழக்காறுகளை உடைத்தெறிந்து வாழ்ந்தது சொல்லப்பட வேண்டிய இன்னொரு கதை.
எண்ணச் சீற்றமும், திடச்சிந்தனையும் ஆன்ஸ்கோமைக் குறிக்குமென்றால், கூர்ந்த அமைதியும், ஆழ்ந்த பார்வையும் பிலிப்பா ஃபுட்டின் (1920-2010) அடையாளமாகும். அமெரிக்க அதிபர் குரோவர் கிளீவ்லாண்டின் மகளுக்குப் பிறந்து, மேல்வர்க்க அந்தஸ்துடனும், சலுகைகளுடனும் வளர்ந்த ஃபுட், முறைவழித் தொடக்கக்கல்வி கற்காமல் சிந்தனை வெளியில் அறிவாடலற்ற தனித்தீவாய் வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே அடிவயிற்றுக் காசநோயினால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட ஃபுட், உடல்நலப் போராட்டங்களை ஓயாமல் எதிர்கொண்டார். ஆக்ஸ்போர்டில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் (பி.பி.இ) பயின்ற ஃபுட், தன் இறுதித் தேர்வை ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் கட்டுடன் எழுதித் தேறியது குறிப்பிடத்தக்கது. 1945-ல் முதன்முதலில் வெளியான நாஜி முகாம்களைப் பற்றிய செய்திச்சுருளை ஆக்ஸ்போர்டு திரையரங்கொன்றில் கண்டதே, ஃபுட் வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. மின்கம்பியருகிலும், தகன அறையிலும் கருகியிருந்த பிணக்குவியல்களையும், நோஞ்சலாக மெலிந்து கூடு மட்டும் எஞ்சிய மற்ற நடைப்பிணங்களையும் கண்ட ஃபுட் அதிர்ந்துப் போனார். “இனி ஏதும் முன்போல் இராது” என்று தன் ஆசான் டொனால்ட் மெக்கின்னனிடம் சென்று அறிவித்தார்.[viii]
அப்போது ஏ.ஜே. அயரின் தர்க்க நேர்காட்சிவாதம் ஆக்ஸ்போர்டு அறிவுலகை ஆட்சி செய்துகொண்டிருந்தது. நாஜி வன்கொடுமைகளின் ஈடில்லா தீமையை ஒருவரின் தனிப்பட்ட ஒப்புதலின்மையின் வெளிப்பாடாகவோ அல்லது ஒருவரின் அகவய ஒவ்வாமையின் எதிரொலியாகவோ மட்டுமே கருதிய அந்தக் கோட்பாட்டை ஃபுட்டால் எள்ளளவும் ஏற்கமுடியவில்லை. இதற்கு மாறாக, நம் அறவியல் மதிப்பீடுகள் மெய் நிலையில் பதிந்திருக்கும் புறவய உண்மைகள் என்பதை நிரூபிப்பதே ஃபுட் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். தனிநபரின் தன்னிச்சையில் பிறக்கும் அளவீடுகளை அறவே மறுத்து, ஒவ்வொரு உயிரினத்துக்கும் உரிய இயல்புகளுக்கு ஏற்றவாறு, அவ்வற்றின் தனிப்பட்ட உயிரியல் கட்டமைப்புகளுக்குப் பொருந்துமாறு வருகின்ற இயற்பண்புகளே, நலன் பயக்கும் அறம் என வாதிட்டார். இயல்நலம் (2001) (Natural Goodness[ix]) எனும் நூலில், ஃபுட் மனித நெறிமுறையை விலங்குகளின் உடல்நலதிற்கும், தாவரங்களின் செழிப்பிற்கும் ஒத்ததாகக் கண்டார். எப்படி கருங்காலி மரம் தழைத்து வளர்வதற்கு ஆழமான ஆணிவேர் தேவையோ, எப்படி ஓநாய்கள் வேட்டையாடி பிழைப்பதற்கு வன்மையான கால்களும், கூர்பற்களும் தேவையோ, மனிதர்கள் பகுத்தறிவுடைய சமூக விலங்குகளாக செழிப்பதற்கு நீதி, நேர்மை, வீரம் போன்ற நற்பண்புகள் தேவை. இந்த கருத்தின் மூலம், ஃபுட் மனித இயல்பைப் பற்றிய அறிவியல் விளக்கங்களையும், நம் அறவியல் மதிப்பீடுகளையும் ஒன்றிணைத்தார். நம் ஒழுக்க நெறிகளும் அவற்றின் மதிப்பீடுகளும், நிலையற்ற மனப்போக்கின் பிரதிபலிப்புகள் அல்ல என்றும், மாறாக அவை உண்மைத்தன்மை கொண்ட இயற்கையின் கூறுகள் என்றும் ஃபுட் நிறுவினார்.

ஆக்ஸ்போர்டு சோமர்வில் கல்லூரியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பயிற்றுநராகவும் ஆய்வாளராகவும் இருந்த ஃபுட், பின்னர் பல்வேறு அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். மேலும், ஆக்ஸ்ஃபேம் என்ற சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் தன் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து சேவையாற்றினார். தன் கோட்பாட்டால் நல்லொழுக்க நெறிமுறையை மீட்டெடுத்ததோடு, நவீன அறவியல் தத்துவத்திற்கு “தண்டவாளத் தள்ளூர்தியின் இருவழி இக்கட்டு” (Trolley Problem) என்ற பிரபலமான புதிர்ச்சிக்கலையும் அறிமுகப்படுத்திவர் ஃபுட் என்பது சுட்டத்தக்கது. மேலும், பல விவாதங்களுக்குள்ளான கருணைக்கொலை மற்றும் கருக்கலைப்பு பற்றிய தன் ஆழமான கருத்துக்களின் மூலமாக, அவற்றுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கினார்.[x] தத்துவ உலகில் ஒரே சிக்கலைத் துரத்தி, அதை எதிர்கொள்ள வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்து, அதற்கான தீர்வை வெற்றிகரமாகக் கண்டடைந்த அரிய சிலருள் ஒருவர் பிலிப்பா ஃபுட் என்றால் அது மிகையாகாது.[xi]
யானெனதை அறுத்துல், மன்னுயிர் ஆதல்: ஐரிஸ் முர்டாக் மற்றும் மேரி மிட்ஜ்லி
ஆக்ஸ்போர்டு நால்வரில் துடிப்புடைய உயிரோட்டமாய் திகழ்ந்தவர் ஐரிஸ் முர்டாக் (1919-1999). டப்ளினில் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஐரியப் பெற்றோர்களுக்குப் பிறந்து, லண்டனில் வளர்ந்த முர்டாக், ஆக்ஸ்போர்டுப் பல்கலைக்கழக வாசலில் நுழையும்போதே தீவிரமான அரசியல் சிந்தனையோடு சென்றார். கல்லூரி நாட்களில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கியதோடு, உலகப்போருக்குப் பிறகு UNRRA எனப்படுகிற ஐக்கிய நாடுகள் நிவாரண மற்றும் மறுவாழ்வு நிர்வாகத்திலும் பணியாற்றினார். போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மிக மோசமான நிலையை அகதி முகாம்களில் நேரில் கண்ட முர்டாக், உள்ளம் உருகி வேதனைப்பட்டார். இவ்வனுபவங்களும், ஆன்ஸ்கோமுடனான அறிவார்ந்த தோழமையும், அவரை எழுத்துப் பக்கம் திருப்பின. ஆக்ஸ்போர்டு தத்துவக் களத்தில் மதிப்புமிக்க இளம் ஆய்வாளராக ஒளிர்ந்தபோதிலும், தன்னுடைய உளமார்ந்த இருப்பிடம் இலக்கியத்தில் இருப்பதாகவே கருதினார். தான் எப்போதுமே நாவலாசிரியராக விரும்பியதாக முர்டாக் பின்னாளில் ஒரு நேர்காணலில் சொன்னது குறிப்பிடத்தக்கது. புனைவெழுத்தும், அறவியல் தத்துவமும் மனித இயல்பைப் பட்டவர்த்தனமாகப் பிரதிபலிக்கும் ஆற்றலை உடையதாகக் கண்டார். இலக்கியத்தையும் தத்துவத்தையும் மனித உண்மையைத் தேடிச் செல்லும் இணக்கமான இரு வழிகளாக நினைத்தார்.
ஆங்கில உலகிற்கு பிரெஞ்சு இருத்தலியத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர்களுள் முக்கியமான ஒருவராக இருந்தார் முர்டாக். போருக்குப் பின், பிரஸ்ஸல்ஸில் ஜான் பால் சார்த்தரின் விரிவுரைகளைக் கேட்டும் சிமோன் டி பொவாரைப் படித்தும், இருத்தலியத்தின், குறிப்பாக இருத்தலியப் புனைவின் வசீகரத்தையும், வீச்சையும் முர்டாக் உணர்ந்தார். ஆனால், சார்த்தரின் புதினங்களிலும் தத்துவத்திலும் நீண்ட விரிசலாகப் பரவிக்கிடந்த ஒர் அபாயகரமான குறையை எளிதில் கண்டறிந்தார். அது, மனிதனை அர்த்தமற்ற வெறுமையில் தற்சிந்தனையில் ஆழ்ந்து தனக்கான விழுமியங்களைத் தானே படைத்துக்கொள்ளும் கதைத்தலைவனாகச் சித்தரிக்கும் தன்மையில் இருப்பதாகக் கருதினார். அகந்தையும் தன்னலமும் நிறைந்த இருத்தலியப் பார்வைக்கு மாறாக, இலக்கியத்தை மனிதனுக்கான நெறிமுறையை வகுத்துக் காட்டும் கருவியாக முர்டாக் பார்த்தார். பிளேட்டோவையும், பிரெஞ்சு ஆன்மீகவாதி சிமோன் வெய்லையும் வழித்துணையாகக் கொண்டு, ‘யானெனது’ என்று நம்மை விடாது துரத்திக் கொண்டிருக்கும் அகந்தையை அறுக்கும் நெறிமுறையை நன்மையின் இறையாண்மை (1970) (The Sovereignty of Good[xii]) என்ற நூலில் வலியுறுத்துகிறார். யானெனது அறுத்தலை (unselfing) பழகுவதால், தன்னிரக்கத்தில் அமிழ்ந்த அகந்தையிலிருந்து அகன்று, பிறரிடம் அன்புடன் கூடிய அக்கறையைக் காட்டி வாழும் வழி பிறப்பதாக முர்டாக் உறுதிமொழிந்தார். “தன்னைவிட வேறொன்று நிஜமானது என்ற மிகக்கடினமான உண்மையை உணர்த்துவது அன்பொன்றே” என்று அவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.[xiii] “அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறளின் உண்மையை நமக்கு நினைவுபடுத்தும் வகையில், பிறரிடம் பாரபட்சமற்ற அன்பொன்றையே மிக உன்னதமான நன்மையாக முர்டாக் தன் எழுத்துக்களில் மீண்டும் மீண்டும் பதிவு செய்தார்.
இரண்டு புகழ்வாய்ந்த தத்துவ நூல்களைத் தாண்டி,[xiv] முர்டாக் மொத்தம் 26 நாவல்களை படைத்துள்ளார். கடல், மீண்டும் கடல் (1978) (The Sea, The Sea[xv]) என்ற நாவலுக்காக முர்டாக் 1978-ல் புக்கர் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது புனைவுலகில், பிறருடனான உறவாடலின்போது உருவாகும் தன்னைப் பற்றிய பொய்ப்பிம்பங்களில் மாட்டித் தவிக்கும் கதாபாத்திரங்களின் போராட்டங்களையே முர்டாக் பெரும்பாலும் சித்தரித்தார். கணிக்க இயலாத இக்கட்டான சூழல்களில் இருதலைக் கொள்ளி எறும்புப் போலச் சிக்கித் தவிக்கும் மனித வாழ்வைப் பட்டவர்த்தனமாகக் காட்டும் கற்பனை கலந்த ஆய்வகங்களாக முர்டாக்கின் கதைகள் செயல்படுகின்றன. அவ்வற்றின் அடிநாதமாய் மீண்டுமீண்டும் வருவது அன்புசார் அறத்தை நெறிப்படுத்தக்கூடிய மனித ஆற்றலின் மீதான முர்டாக்கின் திடமான நம்பிக்கை. இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைத்து, கதையாக்கமும் அறவியல் விசாரமும் ஒத்திசைவுக் கொண்ட கலைக்கருவிகளாக நிறுவியதே முர்டாக்கின் ஒப்பற்ற பங்களிப்பாகும்.

ஆக்ஸ்போர்டு நால்வரில், மண்ணில் வேரூன்றிய சூழலியலின் குரலாய்த் திகழ்ந்தவர் மேரி மிட்ஜ்லி (1919-2018). லண்டனில் பிறந்து வளர்ந்த மிட்ஜ்லி, தன் சிறுவயதில் பொம்மைகளைவிட, தவளைகளையும் பல்லிகளையும் சேகரித்து வளர்ப்பதிலேயே ஈடுபாடு காட்டினார். 1938-ல் தன் உயர்க்கல்விப் பயணத்தைத் தொடங்குமுன், ஜெர்மன் மொழிப் பயிற்சிக்காக வியன்னா சென்றிருந்தபோது, அங்கே ரிங்ஸ்ட்ராஸெ நெடுஞ்சாலையெங்கும் சுவஸ்திகா கொடிகள் நிழலாட, நாஜி படையினர் யூத கடைகளை சூறையாடி தவிடுபொடியாக்கும் காட்சிகளை நேரில் கண்டார்.[xvi] ஜெர்மன் பயிற்சியை நிறைவாக முடிக்காமல் வீடு திரும்பிய மிட்ஜ்லி, ஆக்ஸ்போர்டு சோமர்வில் கல்லூரியில் சேர்ந்து, ஐரிஸ் முர்டாக்கின் சக மாணவியாக Literae Humaniores பிரிவில் பயின்றார். பட்டப்படிப்புக்குப் பின் ஒரு தத்துவப் பேராசிரியரை மணந்து, வழக்கத்துக்கு மாறாக, ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு குழந்தை வளர்ப்பில் மட்டும் கவனம் செலுத்தி, அவ்வப்போது வானொலி நிகழிச்சிகளுக்கு எழுதியும், புத்தகங்களுக்கு மதிப்புரை வழங்கியும் வந்தார். மேற்கத்திய தத்துவ வரலாறு இயல்பான இல்வாழ்க்கையும் குழந்தைச் செல்வமும் சுவைத்திராத பொறுப்பற்ற ஆண்களால் படைக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டி, பிபிசி ஒளிபரப்பும் ஒரு நிகழ்ச்சிக்காக விமர்சன உரையொன்றை மிட்ஜ்லி எழுதினார்.[xvii] ஆனால் அது, பிறரின் சொந்த வாழ்க்கையைத் தேவையில்லாமல் தரமற்று தோண்டுகின்ற கிசுகிசுவாகக் கருதப்பட்டு தயாரிப்பாளரால் நிராகரிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரிய விலங்கியலாளர் கொன்ராட் லோரென்ஸின் மன்னன் சாலமனின் முத்திரை (1949) (King Solomon’s Ring[xviii]) என்ற நூலை 1952-ல் வாசித்ததுதான், மிட்ஜ்லியின் சிந்தனையோட்டத்திற்கு எழுச்சியூட்டும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மனித அறத்தை பரிணாம உயிரியல் பார்வையில் மற்ற உயிரினங்களின் நடத்தையுடன் ஒப்பிட்டு ஆராய வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தார். நியூகேஸில் பல்கலைக்கழக நூலகத்தில் விலங்கியல் பிரிவிலுள்ள நூல்கள் அனைத்தையும் மிட்ஜ்லி படித்துத் தீர்த்தார். தன் 59-ம் வயதில், முதல் முக்கியப் படைப்பான மிருகமும், மனிதனும்: மனித இயல்பின் அடிப்படை (1978) (Beast and Man: The Roots of Human Nature) என்ற நூலை வெளியிட்டார். மேற்கத்தியத் தத்துவத்தில் மரபார்ந்து வந்த மிருகம்-மனிதம் என்ற இருமையை மிட்ஜ்லி இந்நூலில் கட்டுடைக்கிறார். மற்ற உயிரினங்களைப் போல மனிதர்களையும் மண்ணில் நிலைத்தன்மைக் கொண்ட மன்னுயிரினமாக எண்ணி, நம் உயரியல்புகளை இயற்கை நமக்குக் கொடையாக நல்கிய பண்புகளாகக் கருதுமாறு வலியுறுத்தினார். அதிலும் குறிப்பாக நம் பகுத்தறிவை, இயற்கைக்கு அப்பாலான தகுதியாகக் கொள்ளாமல், இயற்கையோடு இயைந்த நம் பல்வண்ண உள்ளுணர்வினைச் சீர்படுத்தி நெறிமுறையுடன் செயல்பட வைக்கும் ஒரு இயல்புத்திறனாக கருத மிட்ஜ்லி அறிவுறுத்தினார்.

தன் முதற்படைப்பைத் தொடர்ந்து, மிட்ஜ்லி மொத்தம் 18 நூல்களை எழுதியுள்ளார். தற்கால சூழலியல் மற்றும் விலங்கியல் நெறிமுறைக் களங்களில் புழங்கும் சில கருத்துக்கள், குறிப்பாக சூழல்மையவாதம் மற்றும் உயிர்மையவாதத்தின் உட்கருக்கள் மிட்ஜ்லியின் எழுத்துக்களிலிருந்து உருப்பெற்றவை. “நாம் மற்ற விலங்குகளை ஒத்தவர்கள் மட்டுமல்ல; நாம் விலங்குகளே” என்பதை உறுதிப்பாட்டுடன் எழுதினார்.[xix] இதைத் தவிர, மிட்ஜ்லி நம் தத்துவச் செயல்பாட்டை குழாயிடலுடன் ஒப்பிட்டார்.[xx] அதாவது, தத்துவம் என்பது நம் வாழ்க்கைக்கான ஆடம்பரமற்ற சேவை என்றும், அது நம் அன்றாட சிந்தனையோட்டத்திலுள்ள கசிவுகளை மூடி, அடைப்புகளை நீக்கி, ஆழம் துழாவி நல்ல கருத்துக்களை ஈன்றெடுக்கும் உன்னதமான கலை என்றும் வாதாடினார். தொண்ணூறு வயதைக் கடந்த பிறகும் விலங்குகளின் நலம் சார்ந்தும், மனித நெறிமுறைப் பற்றியும் மிட்ஜ்லி தொடர்ந்து எழுதி வந்தது வியப்புடன் கவனிக்கத்தக்கது.
சிதைந்த தத்துவச் சிந்தனையை சீர்செய்த சாதனை
ஆக்ஸ்போர்டு நால்வர் தத்துவப் புலத்திற்கு விட்டுச் சென்ற பொக்கிஷம், மாறாத்தன்மைக் கொண்ட ஒற்றைச் சித்தாந்தத்தில் அல்ல. மாறாக, நாம் பொதுவாகப் பகிர்ந்துப் பங்குகொள்ளும் அறம் நிறைந்த மெய்யுலகை நமக்கு மீட்டெடுத்ததே அவர்களின் நீடித்த பங்களிப்பு. எலிசபெத் ஆன்ஸ்கோம், பிலிப்பா ஃபுட், ஐரிஸ் முர்டாக் மற்றும் மேரி மிட்ஜ்லி ஒன்றிணைந்து புறவய நெறிமுறையும் அற மதிப்பீடல்களும் அற்றுப்போன உலகில் நம்மால் வாழ முடியாது என்பதை நிறுவித்தனர். தத்துவத்தைச் சிற்றெல்லைக்குள் சிறைவைத்த தர்க்க நேர்காட்சிவாதத்தை எதிர்த்ததோடு, ஒழுக்கம், செயற்பாடு, இயற்கை, மனித மலர்ச்சி, மாண்பு போன்ற கருத்தாக்கங்களை அறவியல் தத்துவத்தின் கைப்பிடியில் இணைத்த பெருமை இந்நால்வரைச் சாரும். இதைக் கூட்டாகச் செய்ததன் மூலம், தத்துவச் செயல்பாடானது ஒருவருடைய அறிவின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் வீர விளையாட்டல்ல என்றும், அது இயற்கைச் சுழற்சியில் நம் நிலையை உணர்த்த உதவும் காலாதீதமான கூட்டுமுயற்சி என்றும் புலப்படுத்தினர். இருப்பினும், இந்நால்வரும் தத்தம் வகையில் தனித்துவத்துடன் திகழும் சிறந்த சிந்தனையாளர்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை. இன்று நவீன தத்துவ வரலாற்றின் வாசலைத் திறக்கும் மாணவர்கள், இவர்களின் படைப்புகளைத் தேடி வாசித்து, அவற்றோடு உரையாடி உறவாடுவது இன்றியமையாதது.[xxi]
*
உசாத்துணைப் பட்டியல்:
- Anscombe, G. E. M. Ethics, Religion and Politics. Vol. 3 of The Collected Philosophical Papers of G. E. M. Anscombe. Oxford: Basil Blackwell, 1981.
- Hursthouse, Rosalind. “Philippa Ruth Foot, 1920-2010.” In Biographical Memoirs of Fellows of the British Academy, vol. 11, 179-96. Oxford: Oxford University Press for the British Academy, 2012.
- Lipscomb, Benjamin J. B. The Women Are Up to Something: How Elizabeth Anscombe, Philippa Foot, Mary Midgley, and Iris Murdoch Revolutionized Ethics. New York: Oxford University Press, 2022.
- Mac Cumhaill, Clare, and Rachael Wiseman. Metaphysical Animals: How Four Women Brought Philosophy Back to Life. New York: Doubleday, 2022.
- Midgley, Mary. Beast and Man: The Roots of Human Nature. Ithaca: Cornell University Press, 1978.
- Murdoch, Iris. “The Sublime and the Good.” Chicago Review 13, no. 3 (Autumn 1959): 42-55.
- நாலடியார்: வேதகிரி முதலியார் அவர்கள் இயற்றிய உரையுடன். சென்னை: பூமகள் விலாச ஆச்சுக்கூடம், 1924.
[i] Ayer, A. J. Language, Truth and Logic. London: Victor Gollancz, 1936.
[ii]தொன்றுதொட்டு வருகின்ற தீங்கற்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு, மனத்தில் பகைமையற்று, நுண்ணறிவுடனும் நல்லுறவுடனும் கூடி உரையாடும் அறிவுடையாரின் மகிழ்ச்சியைப் போற்றும் இப்பாடல் நாலடியாரின் பொருட்பாலில் கல்வியைப் பற்றிய பதினான்காம் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது. (நாலடியார்: வேதகிரி முதலியார் அவர்கள் இயற்றிய உரையுடன் (சென்னை: பூமகள் விலாச ஆச்சுக்கூடம், 1924), ௯௩.
[iii] “The Justice of the Present War Examined” என்பது இந்த அறிக்கையின் தலைப்பு. ஆன்ஸ்கோம் நார்மன் டேனியலுடன் இணைந்து எழுதிய இவ்வறிக்கையை வாசிக்க: G. E. M. Anscombe, The Collected Philosophical Papers of G. E. M. Anscombe, vol. 3, Ethics, Religion and Politics (Oxford: Basil Blackwell, 1981), 72-81.
[iv] Benjamin J. B. Lipscomb, The Women Are Up to Something (Oxford: Oxford University Press, 2021), 155-158; Clare Mac Cumhaill and Rachael Wiseman, Metaphysical Animals (New York: Doubleday, 2022), 20-23.
[v] G. E. M. Anscombe, The Collected Philosophical Papers of G. E. M. Anscombe, vol. 3, Ethics, Religion and Politics (Oxford: Basil Blackwell, 1981), 62-71.
[vi] G. E. M. Anscombe, The Collected Philosophical Papers of G. E. M. Anscombe, vol. 3, Ethics, Religion and Politics (Oxford: Basil Blackwell, 1981), 26-42.
[vii] Anscombe, G. E. M. Intention. Oxford: Basil Blackwell, 1957.
[viii] C Benjamin J. B. Lipscomb, The Women Are Up to Something (Oxford: Oxford University Press, 2021), 4-5; Clare Mac Cumhaill and Rachael Wiseman, Metaphysical Animals (New York: Doubleday, 2022),187-188.
[ix] Foot, Philippa. Natural Goodness. Oxford: Clarendon Press, 2001.
[x] Foot, Philippa. The Problem of Abortion and the Doctrine of the Double Effect.” Oxford Review 5 (1967): 5-15; Foot, Philippa. “Euthanasia.” Philosophy & Public Affairs 6, no. 2 (Winter 1977): 85-112.
[xi] இக்கருத்தை தற்கால மெய்யியலாளர் ரோஸலின்ட் ஹர்ஸ்ட்ஹௌஸ் முன்வைக்கிறார்: Rosalind Hursthouse,“Philippa Ruth Foot, 1920-2010,” in Biographical Memoirs of Fellows of the British Academy, vol. 11 (Oxford: Oxford University Press for the British Academy, 2012), 196.
[xii] Murdoch, Iris. The Sovereignty of Good. London: Routledge & Kegan Paul, 1970.
[xiii] Iris Murdoch, “The Sublime and the Good,” Chicago Review 13, no. 3 (Autumn 1959): 51.
[xiv] ஒன்று மேற்குறித்த The Sovereignty of Good; மற்றோன்று: Murdoch, Iris. Metaphysics as a Guide to Morals. London: Chatto & Windus, 1992.
[xv] Murdoch, Iris. The Sea, the Sea. London: Chatto & Windus, 1978.
[xvi] C Benjamin J. B. Lipscomb, The Women Are Up to Something (Oxford: Oxford University Press, 2021),65; Clare Mac Cumhaill and Rachael Wiseman, Metaphysical Animals (New York: Doubleday, 2022), 31-32.
[xvii] Midgley, Mary. “Rings & Books.” Raven, Issue 2: Princesses. https://ravenmagazine.org/magazine/the-writing-desk-2/.
[xviii] Lorenz, Konrad. King Solomon’s Ring: New Light on Animal Ways. Translated by Marjorie Kerr Wilson. London: Methuen, 1952.
[xix] Mary Midgley, Beast and Man: The Roots of Human Nature (Ithaca, NY: Cornell University Press, 1978), xiii.
[xx] Midgley, Mary. “Philosophical Plumbing.” In The Impulse to Philosophise, edited by A. Phillips Griffiths, 139-152. Royal Institute of Philosophy Lecture Series 33. Cambridge: Cambridge University Press, 1992.
[xxi] ஆக்ஸ்போர்டு நால்வர் செயலாற்றி வந்த அதே காலகட்டத்தில், நவீன இந்தியக் கல்விப்புலத்தில் முதல் பெண் தத்துவப் பேராசிரியரான மார்கரெட் சாட்டர்ஜி சோமர்வில் கல்லூரியில் தத்துவம் பயின்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தற்கால இந்தியத் தத்துவத்தைப் பற்றி, குறிப்பாக காந்தியின் தத்துவக் கோட்பாட்டைப் பற்றி எழுதிய இவர், இந்நால்வருடன் உரையாடியதற்குச் சான்றுகள் இல்லையென்றாலும், அவர்களிடையே சிந்தனைப் பரிமாற்றம் நிகழ்ந்திருக்கக்கூடும் என ஊகிக்கலாம்.
*
விவேக் ராதாகிருஷ்ணன்: தத்துவவியல் ஆய்வாளர் மற்றும் விரிவுரையாளர். பண்டைய கிரேக்கத் தத்துவம், நவீன இந்திய-ஐரோப்பிய தத்துவ உரையாடகள், மற்றும் அறவியல் தத்துவம் ஆகியவற்றை கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபட்டுள்ளார். இம்மானுவேல் காண்ட் பற்றிய இவருடைய கட்டுரைகள் பன்னாட்டுக் கல்விப்புல ஆய்விதழ்களில் இடம்பெற்றுள்ளன. க்ரியா பல்கலைகழகத்தில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். ஓசூரைச் சேர்ந்த இவர், மணிப்பால் பல்கலைக்கழகத்தில் தத்துவவியலில் முனைவர் பட்டம் பெற்று, பின்னர் மும்பை ஐ.ஐ.டி.யில் சில காலம் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இவர் தமிழில் எழுதிய கட்டுரைகளும் மொழியாக்கங்களும் கனலி, இந்து தமிழ் திசை, மற்றும் காலச்சுவடு ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன.
*

போர்க்காலத்தில் தத்துவம் தீட்டிய ஆக்ஸ்போர்டு நால்வர் கட்டுரை விவேக் ராதாகிருஷ்ணன் சிறப்பாக எழுதியுள்ளார். “ஒன்றிணைந்து புறவய நெறிமுறையும் அற மதிப்பீடல்களும் அற்றுப்போன ” இந்த வார்த்தைகள் அர்த்தம் புரியவில்லை இந்த வராத்தைகள் பேச்சு தமிழில் இருந்தால் எங்களை போன்ற பாமர மக்களுக்கு புரியும். ஆனாலும் மிக அருமையாக எழுதி உள்ளார் அவர் எழுத்துலகில் பிரகாசிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்