கிருத்திகாவின் நாவல்கள் – க.நா.சு, தி.ஜா

1. சத்தியமேவ மதிப்புரை – க.நா.சுப்ரமணியம்
மேலை நாடுகளில் விமர்சகர்கள் எல்லோரும் sensibility என்று சொல்லுவார்கள்—அந்த sensibility யுடன் எழுதப்படுகிற தமிழ்க் கதைகள் நாவல்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. எந்த நாவலைப் படித்தாலும், எந்தக் கதையைப் படித்தாலும் ஒரே மாதிரியாக இருப்பது போல ஒரு பிரமை ஏற்படுகிறது. இதற்கு விலக்காக உள்ளவர்கள் என்று தமிழ் இலக்கியாசிரியர்களிலே விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கையில்தான் இருக்கிறார்கள்.
‘கிருத்திகா’ என்கிற புனைபெயர் கொண்ட புது டில்லி வாழ் அம்மணி எழுதியுள்ள இரண்டாவது நாவலான சத்தியமேவ ஒரு கற்பனை என்கிற நாவலைப் படிக்கும் போது புது டில்லி அரசியல் வாழ்வை மனத்தில் கொண்டு ஒரு பத்து கதாபாத்திரங்களை தமிழில் இதுவரை இல்லாத ஒரு sensibility யுடன் ஆசிரியை உருவாக்கியிருக்கிறாரே என்று உற்சாகத்துடன் படிக்க முடிந்தது. ஆசிரியை உருவாக்கித் தருகிற பாத்திரங்கள் முக்கியமா, அல்லது அந்தப் பாத்திரங்களை நடமாடிச் செயல்படவைக்கிற அந்தச் சூழ்நிலை முக்கியமா என்கிற சந்தேகம் எனக்கே ஏற்பட்டது. மீண்டும் ஒரு தரம் பல பகுதிகளையும் திரும்பிப் படித்தபின் தான் இரண்டுக்குமே முக்கியத்வம் தந்து கிருத்திகா எழுதியுள்ளதைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.
தலைநகரில் வம்பு, வதந்தி, சூழ்ச்சி, சிறு பெரு போராட்டங்கள், அரசியல் பின்னணி, மந்திரியின் பொது நலம் வேட்டல், சுய நலம், குமாஸ்தாக்கள், உயர் தர அதிகாரிகள், மந்திரிகள், இவர்களின் மனைவிமார், நல்லது செய்யும் கோடீசுவரன், பட்டும் படாமலும் இருக்கும் எல்லாcalculator மறிந்த ஒரு பத்திரிகாசிரியன், ஒரு விஞ்ஞானி, அந்த விஞ்ஞானியின் உதாசீனப்படுத்தப்படுகிற காதலி, லக்ஷிய யுவதி, எதற்கும் துணிந்த தேச சேவகி என்று பலரையும் நாவலிலே நடமாட விட்டு ஒரு கதையை மிக மிக நன்றாகவே உருவாக்கி யிருக்கிறார் கிருத்திகா.

எனக்குச் சங்கீதத்தில் அவ்வளவாக ஈடுபாடில்லாத காரணத்தினால் ஆசிரியையினுடைய தலைப்புகளின் தகுதி புரியவில்லை. அதனால் பாதகமில்லை. தமிழுக்குக் கிடைத்த ஒரு நல்ல நாவலாக—மற்ற நாவல்களைப் போல இல்லாத ஒரு லேசான விஷயத்தை sensibility யுடன் எழுதப்பட்ட நாவல் என்று பாராட்டப்படவேண்டியது இது.
–சத்தியமேவ (ஒரு கற்பனை): கிருத்திகா: விற்பனை மெர்க்குரி புத்தகக் கம்பெனி, கோயமுத்தூர். விலை ரூ 5.00.
–க.நா.சுப்ரமணியம் – தமிழ்விக்கி
*
2.பொறுப்பும் செட்டும் – தி. ஜானகிராமன்
எழுதவும் பேசவும் வார்த்தை அவசியம்தான். ஆனால், அவசியம் என்ற உணர்வில்லாமல் பல சமயங்களில் வார்த்தைகளை இழுத்துப் போட்டுக் கொள்ளுகிறோம். ஏதோ வாங்க வேண்டும் என்று கடைத் தெருவுக்குப் போகிறவர்கள் பணம் தான் இருக்கிறதே என்று கண்டதை வாங்கத் தொடங்குகிறார்கள். பை நிரம்புகிறது. கனக்கிறது. தூக்கிவரச் சிரமப்பட்டாக வேண்டும். இல்லை. ஒரு வண்டி வைத்துக்கொள்ள வேண்டும். வண்டி காசில்லாமல் வராது. வசதி இருக்கிறதோ என்னவோ, இது பொறுப்பில்லாத செயல். இந்தப் பொறுப்புணர்வு வார்த்தைகளைக் கையாளும் போதும் வேண்டியிருக்கிறது. இல்லாவிட்டால் வீண் செலவு, படாடோபம், அர்த்தமில்லாத வளவளப்பு எல்லாம் பெருகி ஒரே அடைசல்.
எழுத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள், கலையாகக் கொண்டவர்கள் இரண்டு பேருமே கவனிக்க வேண்டிய செய்திதான் இது. அவசியம் இல்லாத வார்த்தைகளுக்கு அழகிருக்கலாம். ஆனால் அவசியத்தினால் எழுந்த வார்த்தையின் அழகு அவற்றிற்கு இருப்பதில்லை. கன்னத்தில் சின்னப் பொட்டு வைப்பது அழகாக இருக்கலாம். ஆனால் அது இல்லாவிட்டால் என்ன? அல்லது, ஒன்றுக்குப் பதிலாக இரண்டு மூன்று இடங்களில் பொட்டு வைத்தால் என்ன ஆகும்?
சரி, ஏன் இப்படிப் பொட்டு வைத்துக்கொண்டே போகிறார்கள் வேண்டாத இடங்களில்? அழகு வரும் சொற்களை அடுக்குவதினாலேயே ஒரு களைகட்டும் என்ற எண்ணமிருக்கலாம். ஆனால் பல எழுத்துக்களில் இப்படிக் களைகட்டுவதில்லை, கண்டான் முண்டான்களைப் போட்டு அடைத்த அறையாகத்தான் இருக்கிறது.
பார்த்ததையோ, நினைப்பதையோ நன்றாக உணர்ந்திருந்தால் இந்த அடைசல் வந்திராது. உணர்வில்லாமல் சொல்லும்போது பொறுப்புப் போய்விடுகிறது. இந்த வார்த்தை அவசியமா என்ற பயபக்தி எழுவதேயில்லை. தேவைக்கு மேல் வேலைக்காரர்களை வைத்துக்கொண்டு தேவை இல்லாதபோதெல்லாம் கூப்பிட்டு அலைக்கழிக்கும் எஜமானன்போல ஆகிவிடுகிறது எழுத்து. சிந்தனையில் தெளிவும் உணர்வில் மனப்பூர்வமாக ஒரு பண்பும் இருக்கும்போது சொல் பொறுப்பும் அழகும் கொண்டு நம்மைக் கொள்ளை கொள்கின்றது.
வ.ரா, தி.ஜ.ர, கு.ப.ரா, ராஜாஜி, கிருத்திகா, சிட்டி, பராங்குசம் – இவர்களுடைய எழுத்துக்களை வாசிக்கும் பொழுதெல்லாம் இந்தப் பொறுப்புணர்வு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இவர்களுக்குச் சொற்களிடத்தில்தான் எவ்வளவு மரியாதை! எவ்வளவு பயபக்தி! எவ்வளவு பொறுப்பு!
கடந்த சில வாரங்களில் பல ஆசிரியர்களைப் படிக்க நேர்ந்தது. இந்த ஏழெட்டுப் பேரின் நூல்களைப் படிக்கும்போது இந்தப் பொறுப்புணர்வும் மரியாதையும் மற்ற எழுத்துக்களை விட என்னைக் கவரத்தான் செய்தன.
“மிஸ் உஷாவிடம் இயற்கையாகவே ஒரு கூச்சம் முன் வந்து நின்றது. இந்தக் கூச்சம் அவளைத் தன் சிநேகிதர்களுடன் சகஜமாகப் பழகவிடாமல் தடுத்தது. தன்னைத் தானாகவே இன்பமாக மதித்தே அவள் வளர்ந்துவந்தாள். இதுவே அவளுடைய சுபாவ தோஷம். குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த மனப்பான்மை அவள் வாழ்க்கையைப் பாழ்படுத்திவந்தது. குழந்தைகளின் பாவச் செயல்களுக்குப் பெற்றோர்களே முக்கியக் கருவிகள் என்று சாதாரணமாக வழங்கும் கொள்கைக்கு உஷாவின் வாழ்க்கை ஒரு அத்தாட்சியாக இருக்கக்கூடும். அவள் தாயார் ஒரு பெரிய அழகி, கர்வியும்கூட. தன்னைப்போலத் தன் பெண்ணையும் பிரம்மா அழகாக சிருஷ்டிக்கவில்லை என்று அவளுக்குக் கர்த்தா மேல் வெகு நாட்களாகக் கோபம். அந்தக் கோபத்தை அவள் உஷா மேல் வைத்துத் தாக்கிக்கொண்டு வந்தாள். தன் பெண்ணின் காதில் விழும்படியாக அவளுடைய அழகு குறைகளைப் பற்றி விஸ்தரித்துத் துக்கிப்பாள். உஷாவின் குழந்தை உள்ளத்தில் அவளுடைய அவலட்சணங்களே பெரிய பூதங்களாகத் தோன்றின, தாயாரே பார்த்து வெட்கப்படும்படியாய் ஏன் ஜென்மம் எடுத்தோமென்று அவள் ஏங்கினாள். இது போதாதென்று அவள் தாய் ‘ஏதோ அழகைத்தான் ஈசன் கொடுக்கவில்லை யென்றால் கொஞ்சம் சமர்த்தாவது இருக்கக் கூடாதா?’ என்று அங்கலாய்த்துக்கொள்வாள். ‘உனக்கு எப்பொழுது புத்தி வரப் போகிறது? நீ எப்பொழுது முன்னுக்கு வரப்போகிறாயோ?’ என்று அவள் வாய்க்கு வாய் புலம்பிக்கொண்டே இருப்பாள். பிறவியாகவே இயற்கைத் தோற்றத்தில் சிறு பெண்ணைப் பார்த்து “இது வேறா, உன்னுடைய லட்சணத்திற்கு” என்று அடிக்கடி தூற்றி அவள் ஆசையைப் பாழ்படுத்துவாள். இளம் மனதில் பூத்து மலரும் அவாக்களை உஷாவின் தாய் அடிக்கடி கசக்கித் தவிடுபொடியாrandom… தவிடுபொடியாrandomly? தவிடுபொடியாக்கிக்கொண்டுவந்தாள். இதனால் உஷாவுக்கு யௌவனப் பருவம் வருமுன் அவள் தன்னைப் போல அசடோ, அவலட்சணம் கொண்டவளோ இந்த பூலோகத்தில் இருக்க, பற்றுக் கொண்டு படங்கள் வரையும், பிறக்க முடியாது என்று திட நம்பிக்கை கொண்டுவிட்டாள். முதலில் இதைத் தடுக்க அவள் எவ்வளவோ முயன்றாள். ஆனால் வரவர தன்னுடைய அறியாமையை அவள் இயற்கையாகவே ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டாள். தாயிட்ட பெயரை ஊரிட்டு அழைக்குமென்று பள்ளியிலும் ஊரிலும் அவளுக்கு எவரும் மதிப்பு வைக்கவில்லை. இகழ்ச்சியான சொல்லுக்கு அவள் ஆளானாள். பிறர் அவளைச் சொல்லிக் காட்டுவதில் என்ன பிசகு? அவளுக்கு அழகோ சமர்த்தோ உண்டா? சுமுகமாகப் பேசிப் பிறர் அன்பைப் பெறவோ தெரிகிறதோ? இப்படியே எண்ணி, தான் மட்டமாக இருப்பதைத் தானாகவே ஒப்புக்கொண்டு அவளாகவே தன் தாழ்மை நிலையை ஏற்றுக் கொண்டாள். பள்ளித் தோழிகள் சிரித்தாலோ அல்லது தன்னைப் பார்த்துக் கேலி செய்தாலோ அவளுக்கு அவ்வித பரிஹாசங்களை ஹாஸ்யமாக ஏற்கத் தெரியாது. அவள் உள்ளம் அவ்வார்த்தைகளைக் கேட்டுப் புழுப்போல் நெளியும். தாயின் செயலும் சிநேகிதிகளின் பரிஹாசமும் அவள் மனதை மிகவும் புண்படுத்தின. அதுவும் எப்படி? மனதில் அதைக் குறித்துப் பன்னிப் பன்னி நினைத்து ஏக்கமுற்றாள். இதனால் உள்ளத்தில் ஒரு தழும்பு ஏற்பட்டுவிட்டது. அழகான ஜோடிப்புடன் வர்ண நூலால் பின்னப்பட்ட ஜமுக்காளத்தில் அதற்கு ஈடு இல்லாத நிறமோ கறையோ வந்துவிட்டால் அதை எடுக்க முடியுமா?…”

இது ‘கிருத்திகா’வின் ‘புகை நடுவில்’ என்ற நாவலில் வரும் ஒரு குணச்சித்திரம். புத்தகம் முழுவதும் இந்த உணர்வும் பொறுப்பும் நிறைந்து கிடக்கின்றது. மற்றவர்களின் நூல்கள் வாசகர்கள் பலருக்குத் தெரியும். ஆனால் கிருத்திகா, பராங்குசம் போன்றவர்கள் அருமையாக எழுதுவதாலும் பெரும்பான்மையோர் படிக்கும் பத்திரிகைகளில் எழுதாததாலோ அவர்களை அதிகமாக வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்கள் அதிகமாக எழுதாததற்குக் காரணம் எழுத்து அவர்களுக்குப் பொழுது போக்கு என்ற காரணம் மட்டுமின்றி ஒரு பொறுப்புணர்வே காரணமோ என்றுகூடச் சொல்லத் தோன்றுகிறது.
-தீபம், மே 1965
*
பிற மதிப்புரைகள்:
